சோம்பேறியின் தற்கொலை முயற்சி

======================================
கூடப்பிறப்புகள் கைவிட்டபின்பும்
கூடப்பிறப்பாகவே அவனோடு
இருந்தது சோம்பேறித்தனம்
மனம்வெறுத்து தற்கொலை செய்யும்
அளவிற்கு உயர்த்தியிருந்தது அது
ஊரை வெறுத்து உறவை வெறுத்து
இந்த உலகையும் வெறுத்துவிட
நினைக்கின்ற அவனுக்கு
கால்கட்டாகவே இருந்தது அது
கழுத்தில் சுருக்கிட்டு மாயும்
ஆசை பிறந்த நாளொன்றில்
கயிறு தேடிய நிமிடத்தில்
கைகளில் கிடைத்த தும்பை திரிக்கும்
முயற்சிக்கு முட்டுக்கட்டையாகவும்
ஆற்றில் கிணற்றில் விழுந்து மாயும்
எண்ணம் கொண்ட கோடை
காலமொன்றில் விழுந்து கைகால்
உடைந்தால் என்ன செய்வதென்ற
பீதியாகவும்
விசத்தைக் குடித்து மாயும்
விபரத்தைக் கண்ட நாளில்
கலப்படம் செய்யப்பட்டிருந்தால்
என்ற அச்சமாகவும்
தூக்கமாத்திரை தேடிய காலம்
கடைவரை போகும்
சிரமத்தின் வழியாகவும் நின்று
அவனைக் காப்பாற்றியிருந்த அது
ஒருநாள் ...
ஊரை ஏய்த்து
உலையில் போட்டவர்கள்
உத்தமர்கள் போல்திரிவதையும்
அடுத்தவன் உணவில்
மண்ணள்ளிப் போட்டவன்
ஆனந்தபவனில் உண்பதையும்
சிறையிலிருந்து தலைநிமிர்ந்து
வெளியேறும் விலைமாதர்களையும்
தள்ளாடும் வயதில் பிச்சைஎடுக்கும்
முதியவர்களையும்
காவிகள் தரித்து கன்னியர் அணைக்கும்
சாமியார்களையும்
தொலைக்காட்சியில் கண்து அவரில்
யாராகவேனும் வாழ்ந்துவிடலாம் என்ற
தன்னம்பிக்கையில்
முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டான்
தற்கொலை முயற்சிக்கு.
*மெய்யன் நடராஜ்