துரியோதன் நம்பிக்கை

கண்ணன் அர்ஜுனனின் சேர்க்கை கண்ட துரியோதன் கூற்று

சேனை பதினாறு நம்வ சங்கொண்டு
சேர்ந்த பகையைந்தை வெல்லுவோம் - பல
யானை பலங்கொண்ட பீஷ்மன் வசமுண்டு
யாரும் வெற்றியே கொள்ளுவோம் !

துரோண ரிங்குண்டு கர்ணன் இங்குண்டு
துகஷலைக் கேள்வன் உண்டுபார் - அட
வீரன் நானுண்டு தம்பி நூறுண்டு
விந்தை மாமனும் உண்டுபார் !

ஐந்தின் முன்னூறு தோற்கு மோபாறை
ஆற்றின் விசைதன்னை பேர்க்குமோ ? - உடல்
நைந்து வீழ்வதுவு முறுதி காணைவர்
நாசம் காணுவது நிச்சயம் !

சோறு கண்டொருவன் பொங்கு வானொருவன்
சொன்ன தருமவழி கொல்லுவான் - மலர்
நாறு குழலணங்கில் வீழு வானந்த
நல்ல குணமற்ற அர்ச்சுணன் !

மேலு மிருவரவர் தும்பி கள்சின்ன
மேடு கண்டஞ்சும் தம்பிகள் - அட
காலன் வேலைமிக எளிது காணிவரைக்
கையில் அள்ளியவன் ஏகுவான் !

கூந்தல் முடியாத பெண்ணின் கோவமது
கூற்றை ஒத்ததெனச் சொல்லுவார் - அட
ஏந்தும் வீரமது கொண்டு நானந்த
எமனின் சேனையும் வெல்லுவேன் !

மோனை யற்றதொரு மொக்கைக் கவியெனவே
மோகக் கண்ணனும் நிற்கிறான் - அவன்
சேனை அண்ணந்துணை யாவும் நமதுவசம்
செல்லு மோவவனின் ஆட்டமே !

நாடு நம்முடைமை நாச மவருடைமை
நல்ல புகழுமினி நம்மிடம் - பெரும்
பீடு கொண்டவுயர் அத்தி னாபுரமும்
பின்னிந் ராபுரியும் நமதுகாண் !

மாமன் சூதுண்டு மன்னும் சேனைகள்
மாபெ ருங்கரிகள் உண்டடா ! - அட
நாமும் வென்றுவிட நாட்க ளதிகமிலை
நல்ல தேரைந டத்தடா !

சின்ன பாலகரை போரி றக்கிவிடும்
சிறுமை அவரிடத்தில் காணடா - தம்பி
என்ன தயக்கமினி ஏற்று நாணிவரை
எட்டு நொடியில்மண் ணாக்கலாம்

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-May-17, 11:37 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 61

மேலே