விரும்பாதவர்கள்

==================
புதிய படம் திரையிடும்போது
முதல் நாள் முதல் காட்சி
காண்பதில் முன் நின்று
பெரெடுத்தவனும் ,

புதிதாய் திறந்த மதுக்கடையில்
முதல் முதல் குடித்தவன் என்று
மார்தட்டிக்கொண்டவனும் ,

புதிதாய் திறக்கப்பட்ட பாதையில்
முதலில் வாகனம் ஓடியவன்
என்று பீத்திக்கொள்பவனும்,

புதிதாய் கட்டிய கட்டிடத்தை
திறந்துவைத்து பெயர்பலகையில்
பதிந்து கொண்டவனும் ,

புதிதென்று எது நடந்தாலும்
அங்கு முதலில் நானென்று
எதிலும் பேர்வாங்கிக் கொள்பவனும்

ஊருக்குள் புதிதாய்க் கட்டிய
மருத்துவமனைக்கு நான்தான்
முதல் நோயாளியென்று சொல்லிக்கொள்ள
ஆசை வைக்காதது போலவே
ஊருக்குள் புதிதாய் ஒதுக்கப்பட்ட
பொது மயானத்தின் முதல் பிணமென்று
சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-May-17, 2:43 am)
Tanglish : virumbaathavargal
பார்வை : 120

மேலே