முதுமை

மலையேறும் பேருந்து
வளைவுகளில் நின்று நிதானிக்கிறது
எழுத்தாகும் கவிதை

வெறிச்சோடிய வாசல்
உதிர்ந்த இலைகளோடு வருகிறது
பாக்கு இடிக்கும் சத்தம்

தாழ்ந்த வாயில்
சுலபமாய் வெளியேறுகிறது
விழுந்திருந்த கூன்

கூன் விழுந்த கிழவி
மெல்ல நிமிர்கிறது
பிடித்து விட்ட கிளை

கிளையருகில் அமர்வு
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
பாட்டியின் கேள்வி

தனித்த கிழவி
தள்ளாடி வருகிறது
செம்பில் தண்ணீர்

மகன் பற்றிய பேச்சு
சண்டாளி ஆகிறாள்
கிழவியின் மருமகள்

வருந்திய பாட்டி
இன்னும் வரவில்லையாம்
பாழாய் போன எமன்

பாட்டியின் பேச்சு
நிற்காமல் அதிகரிக்கிறது
உதிரும் கண்ணீர்

நின்ற உரையாடல்
பெருமூச்சுடன் வந்து போகிறது
மகனின் நினைவு

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (19-May-17, 9:46 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : muthumai
பார்வை : 131

மேலே