குழந்தையும் தெய்வமும்

குழந்தையும்
தெய்வமும்
ஒன்று...

குழந்தைக்கு
தெய்வம் மட்டுமே
சொந்தம் இன்று...

பெற்றவளும் இல்லை
பெறவித்திட்டவனும் இல்லை

இச்சைக் கொண்டு
இன்பமாய்
இனிதே ஈன்றெடுத்தார்கள்

‘இறுதிக்குளே’...
இறப்பையும்
இலவசமாக கொடுத்திட்டார்கள்...

பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையாம்..?
பெற்றோரின் தொற்றுநோயில் பங்குண்டு

அந்நோய் பெயரை
அவள்
அறிந்திடவும் மில்லை..
அறிந்தாலும்
அவளுக்குத்தான் புரிந்திடுமோ..?
ஆனால்
அனைவரும்
அவளை
அறிந்திட்டார்கள்
அந்நோயால்...

பாசமில்லை
பக்கத்தில் வர தகுதியில்லை
பரிதாபம் கூட
பகல்கனவு தான்...

எழுத்துக் கூட்டி
எழுத படிக்கும் முன்னே
எமலோக பதவி...
‘எய்ட்ஸ்’
என்னும் நோயால்
எதுவும் அறியா வயதில்...

கனவு காணும் முன்னே
கண்கள் பிடுங்கப்படுகிறது...
காயம் ஆருமுன்னே
களையப்படுகின்றது வாழ்வும்...

கவலையற்று
காரணமற்று
காத்துக்கிடக்கின்றாள்...
காலன் வரும் திசையில்
கடவுள் வருவாரென்று...

******************
சிகுவாரா
ஜனவரி 2005 ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவார (21-May-17, 4:42 pm)
பார்வை : 2562

மேலே