தமிழோடு ஒரு நாள்

“மச்சான் போதும் டா! லைட் ஆஃப் பண்ணு! மணி பன்னிரண்டு ஆச்சு”. நள்ளிரவு ஆனது கூட தெரியாமல் "கடல் புறா"வில் மூழ்கி இருந்த மதியழகனின் சிந்தனையில் குறுக்கிட்டது பார்த்திபனின் குரல்.
"இரண்டு நிமிஷம் டா பார்த்தா! இந்த ஒரு அத்தியாயம் மட்டும் முடிச்சிக்கிறேன்" என பதில் அளித்துவிட்டு மும்முரமாக புத்தகத்தை தொடர்ந்தான் மதி. "இவனொருத்தன் இன்னும் இந்த மாதிரி பழைய தமிழ் புக் லாம் படிச்சுக்கிட்டு" என்று கசப்போடு கூறினான் பார்த்தா.
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என நகைத்தான் மதி.
"உங்களுக்கு அப்படி என்ன தெரியுது சார்?"
"உனக்கு தமிழே தெறியாது... உனக்கு லாம் எப்படி புரிய வைக்குறது?"
"ஏய்! யார் சொன்ன உனக்கு? ஜல்லிக்கட்டு போராட்டத்துல நாங்க தான் முன்னாடி நின்னோம்..தமிழன்டா"
"அதெல்லாம் பாத்தோம் ... உன்னால இங்கிலிஷ் கலக்காம பேச முடியுமா?"
"தாங்கள் தற்பொழுது கூறியதே தமிழ் அல்ல!"
"ஓ ஹோ ! சரி ! நாளை இதே நேரம் நாம் படுக்கும் வரை பிற மொழிச் சொற்கள் கலக்காமல் நம் தாய் மொழி தமிழில் மட்டும் பேச வேண்டும்!"
"தமிழ் ரத்தமடா இது! சவாலுக்கு நான் தயார்"
"பார்க்கலாம்"
"பார்க்கலாம்"
"அத நாளைக்கு பாத்துக்கலாம் இப்ப மூடிட்டு படுங்கடா நொன்னைகளா!" என்று மூடிய போர்வைக்கு உள்ளிருந்து வந்தது அஸ்லமின் குரல். விளக்கை அணைத்துவிட்டு கனவுலகில் புகுந்தான் மதி.

********
முதலில் தூங்கியவன் முதலில் எழுந்தான். "மணி எட்டு ஆகுது. இன்னும் என்னடா தூக்கம் உங்களுக்கு?" என்று கூறியவாறே தலையணையால் இருவரையும் அடித்தான் அஸ்லம். "லீவு அன்னைக்கு ஏன்டா இவ்வளவு சீக்கிரமா எழுப்புர?" என முனங்கிக் கொண்டே கண்ணை கசக்கினான் பார்த்திபன்.

"நேற்று இரவு விட்ட சவால் என்ன ஆனது?" என்று கூறி நக்கலாக சிரித்தான் மதியழகன். "அய்யகோ ! மறந்துவிட்டேனடா !"என்று தலையில் கை வைத்தான் பார்த்திபன். "இனி பார், எந்த ஆங்கில வார்த்தையும் பயன் படுத்த மாட்டேன்"
"அப்படியெல்லாம் உன்னை விட முடியாது இன்று முழுவதும் எத்தனை பிற மொழிச் சொற்கள் பயன்படுத்துகிறாய் என பார்ப்போம். இப்பொழுது ஒன்று"
"ஹ்ம்ம் சரி! யானைக்கும் அடி சறுக்கும் நீயும் தவறு செய்வாய். பார்த்துக் கொள்ளலாம்"

சற்று நேரம் கழித்து கையில் ப்ரஷுடன் வந்தான் பார்த்தா. பல் துலக்குவது போல் சமிக்ஞய் செய்து "எங்கே?" என்றான். "அதை தான் கையிலேயே வைத்திருக்கிறாயே! வேரென்ன வேண்டும்?" என வினவினான் அஸ்லம். "இதைத் தானே கேட்கிறாய். தமிழில் தெரியவில்லையோ! இதில் தமிழ் ரத்தமடா என்ற பிதற்றல் வேறு!" என ஏளனத்தோடு கூறியாவாறே , அதை அவன் கையில் வைத்து "பற்பசை" என்று நல்ல அழுத்தமாக கூறினான் மதி. அதை கையில் வாங்கிக் கொண்டு தலை குனிந்தவாறே வெளியேறினான் பார்த்தா.

**********
“தங்களது திருமுகத்தை ரசித்தது போதும். சாப்பிட வாருங்கள்” என்று மதியை அழைத்தான் பார்த்தா.
“உங்க தமிழ் அளப்பற தாங்க முடியல” வாயில் இட்லியுடன் அஸ்லம்.
“உனக்கு தமிழ் ஆர்வம் இல்லை என்பதற்காக மற்றவர்களை நகைக்காதே!” தூக்கிய புருவத்துடன் கதாநாயகன் போல வசனத்தை உதிர்த்தான் மதியழகன்.
"எங்களுக்கு தமிழ் ஆர்வம் இல்லைனு யார் சொன்ன? தூய தமிழ் பேசி தான் தமிழ வளக்கணுமா? நீங்க எதோ புத்தகத்துல இருந்து படிக்குற மாதிரி பேசுறீங்க. நா பேசுறது பேச்சு வழக்கு . நானும் தான் வேற எந்த மொழிச் சொல்லும் பயன்படுத்தல. நா பாட்டுக்கு வேகமா பேசுறதுனால அத நீங்க கவனிக்கல" என்று சாதாரணமாக கூறிவிட்டு அடுத்த துண்டு இட்லியை வாயில் போட்டான் அஸ்லம்.
"பார்ர்ர்ரரா... உன் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது" தட்டுடன் வந்தான் மதி. "மச்சான் இவன் சொல்றதும் சரி தான். நம்ம எதுக்கு ராஜ காலத்து படம் மாதிரி வசனம் பேசிற்றுக்கோம். சாதாரணமான தமிழ்-ல இயல்பா பேசலாம்" என ஆமோதித்தான் பார்த்தா. தலையை லேசாக அசைத்தான் அஸ்லம். "நீங்கள் கூறுவது போல் தொடர்ந்தால் நம்மை அறியாமல் ஓரிரு ஆங்கில வார்த்தைகள் உள்ளே புகுந்து விடும்" என மறுத்தான் மதி.

"நாம தினசரி பயன்படுத்துற பொருட்களுக்கு தமிழ்-ல என்னன்னே பல பேர்க்கு தெறியாது. இது என்ன சொல்லு பாப்போம்" என்று கூறியவாறே சட்னியில் கிடந்த ஸ்பூனை எடுத்து காட்டினான் அஸ்லம். எதோ சிந்தனையில் இருப்பது போல் காட்சியளித்தது பார்த்தாவின் முகம். "தேக்கரண்டி" என்று கூறிவிட்டு புன்முறுவல் செய்தான் மதி.
"சரி அது" என்று மேல சுழன்று கொண்டிருந்ததை காட்டினான் அஸ்லம்.
"மின் விசிறி " இம்முறை முந்திக்கொண்டான் பார்த்தா.
“Wi-Fi”
அறையில் அமைதி.
சற்று நேரம் யோசித்தும் இருவருக்கும் பதில் தெரியவில்லை. "இது ஆங்கிலத்திலேயே இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்ட வார்த்தை தானே. ஆகையால் தமிழிலும் இதையே பயன்படுத்தலாம் " என சமாளிக்க முயன்றான் மதி.
"நமக்கு தெரியலனா இல்லைனு அர்த்தம் கிடையாது. WiFi னா அருகலை" திடமாக கூறினான் அஸ்லம்.
"அப்படியென்றால் BlueTooth-கு தமிழில் என்ன?" இம்முறை கேள்வியை மதி கேட்டான்.
"நீலப்பல்" என்று உடனே கூறிவிட்டு சிரிக்கப் பார்த்தான் பார்த்தா. மற்ற இருவரும் முறைத்ததால் சிரிப்பை அடக்கி கொண்டான்.
"BlueTooth-கு தமிழ்-ல ஊடலை"
"உனக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரியுது அஸ்லா?" ஆச்சிரியத்துடன் கேட்டான் பார்த்தா.
"தமிழன்டா-னு சொல்லிக்கிட்டு திரிஞ்சா மட்டும் போதாது. நம்ம தான் தேடி படிக்கணும்"

**********
"உச்சி வெயில்-ல ஏன்டா வெளிய போறீங்க?" என வெளியே கிளம்ப தயாரான அஸ்லம் மற்றும் மதியை நோக்கி வினவினான் பார்த்தா.
"போறீங்க இல்ல போறோம். வா போய் பிரெஷ் ஜூஸ் குடிச்சிட்டு வரலாம்." என்று டிவி பார்த்துக்கொண்டிருந்த பார்த்திபனை இழுத்தான் மதி.
"சரி டா சட்ட போட்டுட்டு வரேன். விடு." என எழுந்தான் பார்த்தா.
மரங்களே இல்லாத இருபுறமும் வீடுகள் மட்டும் உள்ள தெரு வழியே மூவரும் நடந்தனர். மதியும் அஸ்லமும் பேசிக்கொண்டே வர, பார்த்தா மட்டும் அமைதியாக வந்தான்.
"ஏன்டா அமைதியா இருக்க ?" பார்த்தாவை கேட்டான் அஸ்லம்.
"எண்ணிக்கொண்டிருந்தேன்!" முகத்தில் சிறப்புடன் பார்த்தா கூறினான்.
"என்னத்த?" குழப்பத்துடன் அஸ்லம் கேட்டான்.
எதோ ஞாபகம் வந்தது போல் நின்றுவிட்டான் மதி. மற்ற இருவரும் சற்று முன் சென்று விட்டனர். "டேய் உனக்கு என்னடா?" என மறுபடியும் குழப்பத்துடன் கேட்டான் அஸ்லம். தனக்கு மட்டும் எதோ புரிந்தது போல் இளநகை புரிந்தான் பார்த்திபன். இரண்டு அடி வேகமாக எடுத்து வைத்து அவ்விருவரையும் சேர்ந்தான் மதி.

"என்னை ‘பழச்சாறு குடிக்க வா’ என்று தாங்கள் அழைத்ததிலிருந்து இதுவரை பதினோரு ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி உள்ளீர்கள். காலையில் தாங்கள் எனக்கு வைத்த கணக்கு எப்படியும் ஐந்தை தாண்டாது" என்று மதியை நோக்கி சற்று ஆணவம் கலந்த சிரிப்புடன் கூறினான் பார்த்தா. பின்னர் அஸ்லமை நோக்கி "நீ பரவா இல்லை அஸ்லா. பேச்சு வழக்கில் சரளமாக பேசினாலும் மூன்று ஆங்கில வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தினாய்" என்றான்.
தனக்கு கிடைத்த பாராட்டை கவனிக்காதவன் போல் “ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மறந்து போயிடுறீங்க. இதுக்கு எதுக்குடா போட்டி?" என்றான் அஸ்லம்.
"இனி மறக்க மாட்டேனடா. பதினோரு வார்த்தைகள்!!!” என லேசாக குமுறிவிட்டு மேலும் “உன் கணக்கை நம்ப முடியவில்லை தான் ஆனாலும் எனக்கே சற்று அவமானாக தானிருக்கிறது." என்றான் மதி.
"ஏற்னகவே சொன்னேன் அல்லவா. யானைக்கும் அடி சறுக்கும் என்று. இப்பொழுது மணி பன்னிரெண்டரை இன்னும் நாம் தூங்க பத்து மணி நேரமாவது ஆகும் அது வரை ஆங்கிலத்தில் பேசு போதும்." என பார்த்தா நல்ல விதமாக தான் சொன்னான். அனால் மதியோ "அது கூட என்னால் முடியாது என்கிறாயா?" என கோபம் தொனிக்கும் குரலில் கேட்டான்.
"நான் அவ்வாறு கூறவில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றான் பார்த்தா.

அந்நேரத்தில் மிதி வண்டியில் அவர்களை தாண்டிச் சென்ற பெரியவர் ஒருவர் அவர்களை திரும்பி பார்த்து லேசாக சிரித்தார். எதிரே நடந்து வந்த சிறுவனும் அவனது தாயும் குழப்பத்துடன் அவர்களை பார்த்தனர். இதை கவனித்த மதி "தமிழ் பேசினால் தமிழகத்திலேயே ஆச்சிர்யத்துடன் பார்க்கிறார்கள்" என்று அவர்களின் காதுகளில் விழும் படி சற்று சத்தமாகவே கூறினான்.
"டேய் ஏன்டா! கொஞ்சம் சத்தங் கம்மியா பேசுடா" என்று மிக தாழ்ந்த குரலில் கூறினான் அஸ்லம்.
"அவன் சொன்னதில் என்ன டா தவறு. இது தமிழ் நாடு தானே. தமிழையே ஒரு மாதிரி பார்க்கிறார்கள்." என வெறுப்புடன் கூறினான் பார்த்தா.
"இந்த சமூகமே இப்படித் தான். யார் எப்படி பார்த்தால் என்ன! நாம் தமிழில் தான் பேசுகிறோம்" என்று மதி உணர்ச்சி போங்க கூறினான். பார்த்திபனும் அதை ஆமோதித்தான். இவ்வாறு பேசிக்கொண்டே மூவரும் பழச்சாறு கடையை அடைந்தனர். கடையில் அமர்ந்தும் அவர்கள் தங்கள் தமிழ் உரையாடலை நிறுத்தவில்லை.
அப்பொழுது பக்கத்துக்கு மேஜையில் இருந்த ஒரு காதல் ஜோடி ஓரக்கண்ணால் அவர்களை இழிவாக பார்த்தது போல் இருந்தது பார்த்திபனுக்கு. அவ்வளவு தான் "ஏன் என்றே தெரியாமல் வெள்ளைக்காரனையும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் பின் பற்றுபவர்கள் தமிழனை இழிவாக பார்க்கின்றனர். என்ன கொடுமையடா இது!" என்று சற்று சத்தமாக கூறிவிட்டு கண்ணால் அந்த ஜோடியை மற்ற இருவருக்கும் காட்டினான். மற்ற இருவரும் அந்த ஜோடியை திரும்பி பார்த்தனர். அவ்வளவு தான் மீதம் இருந்த பழச்சாற்றை வேகமாக குடித்துவிட்டு அந்த ஜோடி இடத்தை காலி செய்தது.

அந்நேரத்தில் அவர்கள் மேஜைக்கு நடுத்தர வயதுடைய ஒருவர் வந்து "இவ்வளவு நேரம் நீங்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டு தானிருந்தேன். உங்களை போன்ற இளைஞர்கள் இவ்வாறு தமிழில் பேசுவதை கேட்டும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது." என முக மலர்ச்சியுடன் கூறிவிட்டு ஓரத்திலிருந்து மதியின் முதுகில் தட்டி கொடுத்தார். "நன்றி தாங்கள்... " என பார்த்தா தொடங்க, " ஆனால் மற்றவர்ககளை குத்தி காட்டுவது போல் பேச வேண்டாம். எனக்கு நேரமில்லை இன்னொரு நாள் சந்திப்போம்." என்று கூறிவிட்டு கடையிலிருந்து வெளியேறினார்.
மூவரும் இந்த எதிர் பாரத பாராட்டுதலினால் மகிழ்ச்சி அடைந்தனர். "தமிழ் ஆர்வமுள்ள பலர் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கிரார்கள். ஆனால் அந்த ஆர்வத்தை யாரும் வெளிக்காட்டி கொள்வதில்லை. அதற்கு வாய்ப்புகளும் அமைவதில்லை" என்றான் மதி. "நம்மால் முடிந்ததை நாம் செய்வோம் " என்றான் பார்த்தா. மற்ற இருவரும் ஆமோதிப்பதற்கு தலையை அசைத்தனர்.

**********
“நெஞ்சே எழு... நெஞ்சே எழு...
காதல்... என்றும்... அழிவதில்லை...”
ஏதோ மேடையில் பாடுவது போல் நினைத்து உருகி பாடிக்கொண்டிருந்தான் மதி. அவனது ஒரு காதிலிருந்து ஹேட்போனை பிடிங்கிவிட்டு "மச்சான் நீ இத போட்டுட்டு பாடுனா உனக்கு A.R.ரஹ்மான் குரல் கேட்கும். நீயும் நல்லாருக்கே-னு தொடர்ந்து பாடுவ. ஆனா எங்களுக்கு உன் குரல் தான் கேக்குது. தாங்க முடியல!" என்று முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு நக்கலாக கூறினான் அஸ்லம்.
"ஒரு கலைஞனை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் அவனை மட்டம் தட்டாமலாவது இருங்கள். உன்னை போன்றவர்களால் தான் இவ்வுலகம் பல பாடகர்களை இழந்துவிட்டது"
"மச்சான் நீ மொட்ட மாடில போய் உக்காந்துட்டு கத்து. நா உன்னை எதுவும் சொல்லல. இன்னிக்காவது சீக்கரம் தூங்கனும் நாளைக்கு வேலைக்கு போகனும்"
இதற்கு பதில் சொல்ல மதி முனைந்தபோது " இன்றைய நாள் எவ்வளுவு அருமையாக கழிந்தது. வீண் வாதத்தால் அதை வீணாக்காதீர்கள் " என குறுக்கிட்டான் பார்த்தா.
"அதுவும் சரி ஒரு நாள் நம் தாய் மொழி பேசியதிலேயே பல புதிய வார்த்தைகள் கற்றுள்ளோம் மேலும் இப்பொழுது தமிழ் சரளமாக நாவில் தவழ்கிறது. கேட்பதுற்கும் இனிமையாக உள்ளது" என ஆமோதித்த மதி தனது மறு காதிலிருந்து ஹேட்போனை கையில் எடுத்துவிட்டு கேட்டான் " இதற்கு தமிழில் என்ன?"
"தலையணி - இப்பொழுது தான் இணையத்தில் தேடினேன்" என்றான் பார்த்தா.
"செம டா பார்த்தா! இப்படி தினமும் சில புது வார்த்தைகள் படிச்சா நம்ம சொல்வளம் தானா கூடும்" பாராட்டுடன் அஸ்லம்.
"எல்லாம் சரி தான். நாளை அலுவலகத்திற்கு சென்றால் ஆங்கிலம் தான் பேச நேரிடும். அதுமட்டுல்ல நாம் வேலை செய்யும் தகவல் தொழில்நுட்ப துறையில் நமது வளர்ச்சிக்கு ஆங்கிலமும் அவசியம்" என்றான் மதி சற்றே சோகத்துடன்.
"வெள்ளைக்காரன் உலகம் முழுவதும் சுற்றி ஆட்சி செய்து அவனது மொழியையும் கலாச்சாரத்தையும் விட்டுச் சென்றான். அந்த மொழி தான் இப்பொழுது நம் வயிற்றை நிரப்ப உதவுகிறது. நேர்முகத் தேர்வில் ஐந்து நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேச நான் பட்ட பாடு!" என்று கூறி பெருமூச்சு விட்டான் பார்த்தா.
"தமிழும் தேவ தான். ஆங்கிலமும் தேவ தான். ரெண்டும் கலந்த தங்கிலீஷ் நமக்கு தேவ இல்லை. இன்னிக்கு முழுசா தமிழ் பேசுனதுல நெறய கத்துக்குட்டோம். இதே மாதிரி ஒரு நாள் முழுசா ஆங்கிலம் பேசுனா?" என கேட்டுவிட்டு மற்ற இருவரையும் நோக்கினான் அஸ்லம்.
"அதையும் ஒரு கை பார்த்து விடலாம்" என்று இருவரும் ஒருமித்த குரலில் புன்னகையுடன் கூறினர்.

எழுதியவர் : இப்னு மீரான் (21-May-17, 10:56 pm)
சேர்த்தது : இப்னு மீரான்
Tanglish : thamilodu oru naal
பார்வை : 388

மேலே