இவனுக்கு பிடித்த லேசர் லைட்

தன் சிவப்பு ஒளியால்
விண்ணையே சீண்டி பார்க்கும்
"லேசர் லைட்டை" கண்டான்
ஊர் திருவிழாவில்......
விலையை கேட்டான் இருபது ரூபாய் என்றார்......
பட்டன் இழந்து அருணா கயிற்றின் பிடியில் முடியப்பட்டு உயிர் வாழும்
இவன் டவுசர் பையில் இருப்பதோ இரண்டு ரூபாய் நாணயம் மட்டுமே.......
தொட்டுப்பார்க்க முடிந்த இவனால் வாங்க இயலவில்லை....
அடுத்த மாதம் இன்னொரு கோயில் திருவிழா வருகிறது அதற்கும் வருவீர்களா கடைக்காரரே என்றான்
ஆம் என்று தலையசைத்தார்......
பிடித்த பொருள் என்பதால் அதை திருட மனமில்லை முழுவிலை கொடுத்து வாங்க ஆசைகொண்டான்......
இருந்த இரண்டு ரூபாயில் ஒரு ரூபாய்க்கு ராட்டினம் சுற்றிவிட்டு
இன்னொரு ஒரு ரூபாய்க்கு சேமியா ஐஸ் வாங்கி தின்று கொண்டே வீடு வந்தான்........
அடுத்த மாதம் வரவிருக்கும் திருவிழாவில் அந்த "லேசர் லைட்டை" வாங்கி விட வேண்டும் என்று ஆசை கொண்டான்......
தினம் கிடைக்கும் நாலனாவையும்
எப்போதாவது கிடைக்கும் எட்டனாவையும்
சிறுதேனீ சேமித்து வைத்தான்
சூடடப்பா வங்கியில்......
ஒரு மாதம் ஒரு வழியாக கழிந்து விட்டது சிற்றெரும்பு இருபது ரூபாயும் சேமித்து வைத்து விட்டான்....
லேசர் லைட் கடையை நோக்கி
நெருப்புக் கோழியின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு ஓடின கால்கள்.......
ஏழையவனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது
அதன் விலை இருபதைந்து ரூபாயாக உயர்ந்து விட்டது என்பது......
இந்த ஒருமாதத்தில் உலகம் இவனைவிட ஒருபடி மேலே சென்றுவிட்டது...... ஒருபடி கீழே இருக்கிறான் இவன்....
இன்னும் ஐந்து ரூபாய் வேண்டுமே என்ன செய்ய
அம்மா அப்பாவிடம் கேட்கலாமா காலையில் வாங்கி கொடுத்த பலூன் எங்கே என்று கேட்பார்கலே
உடைத்து விட்டோமே அதை........
நண்பனிடம் கேட்கலாமா? நாலணா தான் இருக்கும் அவன்வசம்......
வீட்டிற்கு விருந்தாளியாக வந்த
சொந்த பந்தத்திடம் சென்று ஐந்து ரூபாய் வாங்கி வந்துவிட்டான்.....
காசை கொடுத்து கையில் எடுத்தான் லேசர் லைட்டை........
உலகையே தன் வசப்படுத்தியதாய் உணர்ந்தான் அந்த லேசர் லைட்டை இவன் கையில் வாங்கியவுடன்........
இந்த லேசர் லைட்டை
யாரு பார்க்க கேட்டாலும் இவன் டவுசர் பையில் வைத்து கொண்டு ஓட்டம் பிடித்து விடுவான்.....
இவன் உயிர் நண்பனையும் தொடவிடவில்லை அந்த லைட்டை.....
மூன்று விதமான படமும் ,வெகுதூரம் ஒளி பரப்பும் லென்ஸ் என நான்கு வகை லென்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது அந்த லைட்டின் துணையாக......
இவன் எங்கு சென்றாலும் இவனுக்கு முன் இந்த லைட்டின் ஒளியை செல்ல விட்டிருந்தான்....
ஊரில் உயர்ந்த பனைமரம் என்று கர்வம் கொண்ட பனைமரத்திற்கும் வெளிச்சம் கொடுத்தான் இந்த லைட்டை வைத்து.......
நிலவில் சிகப்பு கறை ஏற்படுத்த முயற்சி செய்தான் லேசர் லைட்டின் வெளிச்சத்தால்......
நாளை காலை உதிக்கும் சூரியனையும் கண்கூச வைப்பேன் என் லேசர் லைட்டின் ஒளியால் என்றான்......
சின்ன சின்ன விஷயங்கள் சொர்க்கத்தை காட்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த லேசர் "லைட்டு" .....
ஆம் இந்த லேசர் லைட் நீரில் மூழ்கி செயலிழந்து போகும் நாள்வரை சொர்க்கத்தில் தான் வாழ்ந்தான்
இவன்
~~பா.அழகுதுரை~~

எழுதியவர் : பா.அழகு துரை (22-May-17, 6:41 pm)
பார்வை : 87

மேலே