காதல் பழக வா-19

காதல் பழக வா-19
குங்குமம் எடுத்து
என் நெற்றியில் இட்டு
மல்லிகை சரத்தை
என் கூந்தலில் முடிந்தாய்...
மஞ்சள் மணக்க
தாலி சரடினை
எந்தன் கழுத்தினில்
முடித்து என்
கணவன் என வந்தாய்....
என் கால்விரலை பிடித்து
மிஞ்சியை மாட்டி
திருமண வட்டத்திற்குள்
உன் மனைவியென என்னை
முழுவதுமாய் ஆக்கிவிட்டாய்...
காதல் அழகோடு
இத்தனையும் செய்த நீ
என் காதல் மனதிற்குள்
நீ இல்லை என்பதை
புரிந்துகொள்ளாமலே என்
கரம்பற்றி உன்னோடு
வாழ அழைக்கிறாய்....
உன் சூழிச்சி பிடியில்
அடிபட்ட புலி நான்
என்பதை மறந்து என்
பக்கம் நின்று புன்னகைக்கும்
உனக்கு நானே
உன் கண்ணை கலங்கடிக்கும்
தூசி என புரிய நாட்கள் ஆகலாம்...
அதுவரையிலும் என்
தந்திர விளையாட்டுக்குள் நீதான் ராஜா...
என்னை விட்டு
எட்ட இருந்தே வேடிக்கை பார்
நான் உன்னை வீழ்த்த வந்த
முள் உள்ள ரோஜா...
“கண்ணனை எதாவது செய்து பழிவாங்கணும்னு துடிச்சிட்டு இருந்த நேரத்துல தான் கடையில சிசிடிவி கேமராக்கு கூட டிமிக்கு குடுத்துட்டு யாரு கண்ணுக்கும் சந்தேகம் வராத மாதிரி நூதனமான முறையில திருடிட்டு இருந்த ஒரு பொண்ணு அதிர்ஷ்டவசமா என் கண்ணுல மாட்டினா.....அவ திருடறத என் போன்ல போட்டோவும் பிடிச்சேன், அப்புறம் அவகிட்ட போய் மிரட்ட ஆரம்பிச்சேன், எனக்கு நீ உதவி செஞ்சா உன்ன நான் காட்டிகொடுக்க மாட்டேன்னு நான் சொன்னதுக்கு அவளும் சம்மதிச்சா, அவ என்ன செய்யணும்னு விளக்கமா புரியவச்சிட்டு அதுக்கப்பறம் கண்ணன் முன்னாடி நான் ட்ரைல் ரூம்க்கு போறமாதிரி டிரஸ் எடுத்துட்டு போனேன், ஆனா அவனுக்கு தெரியாம நான் நீங்க இருக்கும் இடத்துக்கு வந்துட்டேன், நான் போய் ரொம்ப நேரம் ஆனா அவன் தேடி ட்ரைல் ரூமுக்கு போவான்னு நான் நினைச்சது போலவே அவனும் அங்க போய் என் பிளான்ல சிக்கி அந்த திருடி கையால அடியும் வாங்கிட்டேன்...
அவனுக்கு நிச்சயமா அந்த அடியை விட அந்த அவமானம் வலிச்சிருக்கும்,அது மட்டும் எனக்கு போதாது, அதான் அவன் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்திருக்க முயற்சி பண்ணிருப்பானோன்னு ஒரு சந்தேகத்தை இந்த வீட்ல இருந்தவங்களுக்கு வரணும்னு வீட்டுக்கு வந்ததும் இன்னொரு ட்ராமா பண்ணேன்....நல்லவேளை நான் அவசரத்துல உங்ககிட்ட சொன்ன விஷயத்தை சரியாய் புரிஞ்சிகிட்டு செஞ்சதால தான் என் திட்டம் முழுசா நிறைவேறிடுச்சு....."
"ஆனா இதை கடையிலேயே செஞ்சிருக்கலாமே, கடையில வச்சி கண்ணன் தான் தப்பு செஞ்சான், உன்ன தேடி அவன் அங்க போகலனு சொல்லிருந்தா அங்கயே அவன் அசிங்கப்பட்ருப்பானே"
"புரியாம பேசற, அங்க நடந்த சண்டையில சிசிடிவி கேமராவை பார்த்து உண்மைய நிரூபிக்கலாம்னு ஒரு பேச்சு வந்தது, அத கேட்டதும் அந்த திருட்டு பொண்ணு பயத்துல நடுங்க ஆரம்பிச்சிட்டா, அதுக்கு மேலயும் நான் தாமதிச்சா எல்லா உண்மையும் வெளியில வர ஆரம்பிச்சிடும், அதனால தான் நான் அங்க வந்து சமாதானம் செய்யற மாதிரி பேசி அந்த பிரச்சனைய முடிச்சி வச்சேன்"
"ராதி இருந்தாலும் நீ செஞ்சது கொஞ்சம் கூட சரி இல்ல, கேவலம் ஒரு திருடி கூட சேர்ந்துக்கிட்டு நீ உன் ஹஸ்பண்டை பழிவாங்கியிருக்க, நீ எப்போ இருந்து இவ்ளோ கீழ்தரமா யோசிக்க ஆரம்பிச்ச, எங்க பிரென்ட் ராதி இப்படிலாம் கனவில்கூட யோசிக்க மாட்டாளே, கண்ணன் வாயில இருந்து உண்மைய வரவைக்கணும்ன்றது தானே நம்ப பிளான், ஆனா நீ வெளியிடத்துல வச்சி அவனை அவமானப்படுத்தறேன்னு உன் கேரக்டரை அசிங்கப்படுத்திகிட்ட ராதி...சொல்லு ராதி உன் மனசுக்கு இதெல்லாம் சரினு படுதா, நாங்கெல்லாம் உன் வாழ்க்கையை சரிப்படுத்த தானே வந்துருக்கோம், ஆனா நீ இன்னும் பிரச்சனைய பெருசு பண்றயே"
"கொஞ்சம் பொறுமையா இருங்க, நான் நடந்ததோட பாதியை தான் சொல்லிருக்கேன், இது நடக்க காரணமான மீதியை இன்னும் நான் சொல்லல , அதான் இப்படி பேசறீங்க...கடையில நான் காவேரி சித்தியை பார்த்தேன்..."
"காவேரி சித்தியா, காலேஜ் படிக்கும்போது அடிக்கடி சொல்லுவியே, அந்த சித்தியா"
"ஆமா"
"அவங்ககிட்ட உன் பிரச்சனையை பத்தி சொன்னியா, அவங்க உன் அம்மா அப்பாகிட்ட பேசினா இந்த பிரச்னையை சரி பண்ணிடலாம்...அவங்க எதாவது சொன்னாங்களா, அவங்க நம்பர் இருந்தா குடு, இப்போவே எல்லாத்தையும் பேசி புரிய வச்சி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டலாம்"
"அது இனி முடியாது"
"என்னடி சொல்ற, உங்க சித்தி உன் மேல பாசமா இருப்பாங்கன்னு சொல்வியே, அவங்க உனக்கு உதவி செய்ய மாட்டாங்களா?"
"உதவியா?? இனி அவங்க என்னோட பேசுவாங்கலானே சந்தேகமா இருக்கு"
"என்னடி சொல்ற"
“காவேரி சித்தியும் கூட நான் வீட்டை விட்டு ஓடி வந்து திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்மா, அப்பாவை நோகடிக்கிறேன்னு நினைக்கிறாங்க...எவ்வளவோ சொல்லி பார்த்தேன் ஆனா அவங்க கேட்கறதா இல்லை , என்கிட்ட பேசறதை கூட அவங்க விரும்பல, என்ன பார்க்க விருப்பம் இல்லாம கிளம்பிட்டாங்க....என் ஒட்டு மொத்த சொந்தத்தையும் என்கிட்ட இருந்து பிரிச்ச அந்த கண்ணனை எப்படி நான் சும்மா விட முடியும்....
என் மேல பாசமா இருந்த என் அம்மா, அப்பா இன்னைக்கு என் சித்தி இப்படி எல்லாரையும் என்கிட்ட இருந்து பிரிச்சது அந்த கண்ணன் தானே, இப்படிப்பட்ட சூழ்நிலையில அவ திருடியா, இல்ல நல்லவளானு எனக்கு யோசிக்க தோணல, எனக்கு அந்த கண்ணனை பழிவாங்கணும்னு மட்டும் தான் தோணுச்சு...அதனால தான் இப்படிலாம் நான் செஞ்சேன்....இன்னுமும் கூட என் மேல தான் தப்புனு நீங்க நினைச்சீங்கனா இங்கிருந்து கிளம்பிடுங்க, இது என் பிரச்சனை, கண்டிப்பா இதே போல நான் எதாவது செய்யவேண்டி வரும், அது உங்களுக்கு தப்பா தான் தெரியும், இந்த பிரச்சனையில் நான் நம்ப பிரெண்ட்ஷிப்பை இழக்க விரும்பல, ஏற்கனவே என் குடும்பம் என்ன விட்டு போய்டுச்சு, இப்போ எனக்கு இருக்க ஒரே உறவு உங்க நட்பு தான் அதையும் நான் இழந்துட்டா இந்த உலகத்துல எனக்கு வாழ எந்த அவசியமும் இல்லாம போய்டும்"
"ராதி எதுக்கு இப்படிலாம் பேசற, உன் பிரச்சனை எங்களோட பிரச்சனை, உன்ன நாங்க தப்பா நினைக்கல, நினைக்கவும் மாட்டோம்.... அந்த கண்ணனை ஒரு கை பார்க்காம நாங்க இங்கிருந்து போறதா இல்ல... நீ முதல அழறதை நிறுத்து, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி, உனக்கு துணையா நாங்க இருக்கோம்"
தன்னோடு துணை நிற்கும் தோழிகளை நன்றி கலந்த பாசத்தோடு பார்த்த ராதி தன் அழுகையை நிறுத்தி விட்டு அடுத்த திட்டத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்...
அன்று இரவு ஒருவரும் சரியாக சாப்பிடவும் இல்லை, பேசிக்கொள்ளவும் இல்லை...கண்ணனோ சாப்பிட வரவில்லை, எங்கோ வேலைவிஷயமாக வெளியில் தங்கிவிட்டான் என்று அவன் தங்கைகள் தான் ராதிக்கு தெரியப்படுத்தினர்...இது தான் ராதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, தன்னையும் தன் குடும்பத்தையும் அழவைத்த கண்ணனையும், அவன் குடும்பத்தையும் கலங்கவைத்துவிட்டாள்...
அடுத்த நாள் விடிந்ததும் எதாவது ஒரு ட்ராமாவை போட்டு கண்ணனை இன்னும் வேதனைப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்தபடியே ராதியும் அவளது தோழிகளும் குளித்து முடித்து ஹாலுக்கு வர அவர்கள் நினைத்ததுக்கு நேர்மாறாய் வீடே பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது....ஒன்றும் புரியாமல் ராதி விழித்துக்கொண்டு இருக்க அங்கு வந்த கண்ணனின் பெரியப்பா தங்களின் குலதெய்வ கோவிலுக்கு போய் வேண்டுதல் நிறைவேற்ற கிளம்பிக்கொண்டிருப்பதாகவும், ராதியும் அவளது தோழிகளும் கூட கோவிலுக்கு வர வேண்டும் என்றும் கூற ராதிக்கு என்ன நடக்கிறதென குழப்பமாக இருந்தது....
"என்னமா இது, நான் சொல்றது புரிஞ்சதா இல்லையா, சீக்கிரம் போய் கிளம்புங்க, நாம மதியத்துக்குள்ள கோவிலுக்கு போயாக வேண்டி இருக்கு, கண்ணனுக்கு கல்யாணம் ஆனா கல்யாணம் ஆன கையோட வந்து குலதெய்வத்துக்கு பொங்கல் வச்சி படையல் போடறதா வேண்டுதல் வச்சிருந்தோம், ஆனா அவசரமா கல்யாணம் நடந்து முடிஞ்சதால அத பத்தி மறந்துட்டோம்,சாமி குத்தமாயிருச்சுமா... அதனால தான் இந்த வீட்ல எதாவது பிரச்சினை வந்துட்டே இருக்கு, நேத்து நைட் தான் கண்ணன் இத ஞாபகப்படுத்தினான், எப்படியோ எல்லா ஏற்பாட்டையும் கண்ணனே செஞ்சிட்டதால நாம இங்கிருந்து கிளம்பினா போதும், சரிம்மா இனி பேச நேரம் இல்ல, சீக்கிரம் கிளம்பி வாங்க, நான் வண்டி ரெடி ஆச்சான்னு பாக்கறேன்"
எதுவும் பேசாமல் ரூமுக்கு வந்த ராதியின் பின்னே அவள் தோழிகளும் வர ராதி கோபத்தில் கதவை மூடிவிட்டு பொத்தென்று கட்டிலில் விழுந்தாள்...
"என்ன ராதி இது, நேத்து நைட் ஒருத்தரும் பேசிக்க கூட இல்லை, இப்போ என்னனா கோவிலுக்கு போய் வேண்டுதல் நிறைவேத்தணும்னு பரபரப்பா கிளம்பிட்டு இருக்காங்க, இவங்கள புரிஞ்சிக்கவே முடியலடி"
"அதாண்டி எனக்கும் கடுப்பா இருக்கு, நாம ஒரு பிளான் பண்ணா அந்த கண்ணன் நமக்கும் ஒரு படி மேல போய் எதாவது பிளான் பண்ணி ஜெயிச்சிடறான், இந்த முறை அவனை விட்ற கூடாது, கோவிலுக்கு போனாலும் சரி, இமயமலைக்கே போனாலும் சரி அவன் எனக்கு பண்ண துரோகத்துக்கு அவனுக்கு சரியான பாடம் கத்துக்குடுத்தே ஆகணும்....நீங்க எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க, கோவில்ல போய் அவனுக்கு சரியான பதிலடி கொடுப்போம்"
ராதி நினைத்தது போல பதிலடி விழ தான் போகிறது, ஆனால் அது கண்ணனுக்கு அல்ல, இந்த ஆட்டத்தின் கதாநாயகிக்கு தான் என்பது ராதிக்கு தெரிய போவதில்லை...