ராக்காயி கிழவி

”அய்யய்யோ நான் என்னா பண்ணுவேன். ஏஞ்சொத்தக் காணாமே. இதக் கேப்பாரு ஆருமில்லயா? பொத்திப் பொத்தி வச்சிருந்தனே. இப்பிடிப் பொசுக்குன்னு களவாண்டுட்டுட்டானுங்களே. பக்கத்து வீட்டு இருளாயிக்குக் கூட எரவல்(இரவல்) கொடுத்ததில்லயே. நான் என்னா பண்ணுவேன். யாத்தே நான் என்னா பண்ணுவேன்” என்று அந்த நடு வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார் ராக்காயி கிழவி.
உள்ளே முகநூலில் அரட்டையில் இருந்த கிழவியின் பேத்தி எழுந்து வந்து “ஏ கெழவி இப்ப என்னத்துக்கு எழவு வீடு மாதிரி இப்பிடி நடு வீட்ல ஒக்காந்து ஒப்பாரி வச்சுக்கிருக்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“அடியே மீனாச்சி எவனோ களவாண்டுட்டாண்டி. அத என் அப்பன், ஆத்தா எனக்கு சீதனமாக் குடுத்தாக. எம்பிள்ள மாதிரி வச்சிருந்தேன். வாடி அந்த மாசாணியம்மன் கோயில்ல போயி காசு வெட்டிப் போட்டுட்டு வந்துரலாம். எந்தப் பயபுள்ள எடுத்துச்சோ. அத எடுத்தவகளுக்கு……” என்று பாட்டி சாபம் கொடுப்பதில் முனைய, முகநூலில் பாதி அரட்டையில் இருந்து எழுந்து வந்த மீனாட்சி “(இந்தக் கெழவிய எப்பிடி அடக்குறது? ஆங்..) இங்க பாரு அப்பத்தா. இப்பிடி ஏதாச்சும் பொருள் காணாமப் போயிட்டா நம்ம ஊருப் போலிஸ் ஸ்டேசன்ல சொல்லிரு. அவங்க கண்டுபுடிச்சுத் தருவாங்க. காசு வெட்டிப்போட்டாக் கூட நேரமாகும்” என்று யோசனை சொல்ல..
அடுத்த சீன்ல..
அந்தத் தெருவில் புழுதி பறக்க.. ஆட்டோவில் இருந்து இறங்கிய கிழவி, ஏற்கனவே முடிந்திருந்த தலையை அவிழ்த்து ஒரு தட்டு தட்டி, உதறி மீண்டும் முடிந்துகொண்டு, ‘இந்தா வாரேன்’ என்பது போல சேலையை இழுத்துக் சொருகிக்கொண்டு ஒரு புயல் போல உள்ளே நுழைந்தாள்.
அப்போது அந்த ஆட்டோக்காரன் கிழவியின் தோளைத் தட்டி “ஆத்தா என்னா கெளம்பிட்ட?” என்றான்.
“அப்பறம் என்னா செய்யச் சொல்ற?” என்று கேட்டாள்.
“துட்டக் குடுத்துட்டுப் போ”
“உஷ்” என்று வாயில் கையை வைத்துக் காட்டிவிட்டு உள்ளே செல்ல முற்பட்டாள்.
“ஏ கெழவி துட்டக் குடுத்துட்டுப்போ நா அடுத்த சவாரிக்கிப் போகணும்”
“ஏலே ஏண்டா இப்பிடி ஏ உசுர வாங்குற? அங்கனயே செத்த(சற்று) நேரம் நில்லு. என்னயக் கொண்டுபோய் எங்க வீட்ல விட்டுட்டு ஒன் துட்ட வாங்கீட்டுப் போ”
(இவ்ளோ Build-Up கொடுத்து உள்ள போனா அங்க ஒரே போலிஸ்காரர் உக்காந்து குனிஞ்சு என்னத்தயோ எழுதிட்டிருந்தார்)
கிழவி வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவர். “வாங்க பாட்டி…என்ன விசயம்” என்றார்.
”என்னத்த வாங்க சொல்ற. என் பொருள எவனோ களவாண்டுட்டான். கண்டுபுடுச்சுக்குடு”
”மொதல்ல ஒக்காருங்க. என்னா காணாம்போச்சுன்னு கம்ப்ளைண்ட்…ம்..புகார் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் குடுங்க. கண்டுபுடிச்சுத் தாரோம்”
கிழவி பெருவிரலை ‘Thumps up’ செய்து காட்டி “கைநாட்டுதேன். எங்கன வக்கணும்னு சொல்லு வக்கிறேன். எழுதவெல்லாம் வராது” என்றார்.
”இதுவேறயா? சரி நானே எழுதுறேன். சொல்லு ஒன் பேரென்ன?” என்று சலித்திக் கொண்டு கேட்டார்.
“ராக்காயி”
“ஒகே”
“ஒகேய் இல்லடா செவுட்டுப் பயலே. ராக்காயி”
”ப்ச்..சரி…ராக்காயி….அடுத்து உன் வயசென்னா? நீ எங்கருந்து வார? அப்பிடின்ற வெவரம் சொல்லு”
“வயசு அறுவத்தி ஏழரை. மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்துத் தெருவுலதேன் வீடு. வேப்பமரத்துவீடு எதுன்னு கேட்டா கைப்பிள்ள கூட கைகாட்டும்”
”என்னத்தத் தொலச்ச?”
“தொலக்கல..களவாண்டுட்டானுங்கன்னு சொன்னேன்ல்ல”
“சரி..என்னத்தக் காணோம்?”
“ஒரல”
“(கேஸப் பாரு ஒரலக் காணோம்.. அண்டாவக் காணோம்ன்னு..ச்சே) ஒரல மட்டும் காணாமா? இல்ல கொழவியும் காணாமா?”
”ஒரலும் கொழவியும்தேன். எவனோ எடுத்துட்டுப் போயி வச்சுக்கிட்டுப் போக்குக் காட்டிட்டு இருக்கான். அது என்னான்னு நீதேன் தொலக்கித் துப்பணும்.”
”என்னாது?”
“இது…துப்புத் தொலக்கணும்”
“ஒரல எங்கன வச்சிருந்த? வீட்டுக்குள்ளயா? இல்ல வெளியிலயா?”
”எப்பயும் போல சுருக்குப் பையிலதேன்”
போலிஸ்காரர் எழுந்தேவிட்டார். “என்னாது? ஒரலச் சுருக்குப் பையில வச்சிருந்தயா? என்னா கெழவி ஒரல்ற? ச்சீ..உளறுற?..வெய்யில்ல வந்ததுல மண்டக் கொழம்பிருச்சா?”
“ஆமாண்டா..சுருக்குப்..”
“ஆமாவா?”
”அதில்லடா. வெத்தலய இடிச்சு வாயில போட்டுட்டு அந்த ஒரலையும் கொழவியையும் என் சுருக்குப் பையிலதேன் வச்சிருந்தேன்னு சொன்னேன்”
(வெத்தல இடிக்கிற ஒரலுக்குத்தேன் இம்புட்டு அலப்பறையா?)”ஏ கெழவி என்னா ரகள பண்றயா? போ அதக் கழுவி ஓட்டுமேலயோ, கோட்டச்சொவத்துலயோதான் காயவச்சிருப்ப. போய்த் தேடு கெடச்சுரும். ஆளுகளப் பாரு”
“நீ வெத்தல இடிக்கிற ஒரலுதானன்னு லேசா நெனச்சிராத தம்பி. இதுக்குப் பின்னாடி ஒரு அரசியல் சதியே இருக்கும்ன்னு எனக்கு உள்ள ஒரு பச்சி(பட்சி) சொல்லுது”
”பஜ்ஜியாவது போண்டாவாவது. சும்மா காமெடிப் பண்ணாம போ கெழவி. வீட்ல தேடு கெடச்சிரும்”
”ஏலே வீடு பூரா ராவிட்டேன்(தேடிட்டேன்) கெடக்கலடா” என்று ‘கடல்லயே இல்லயாம்’ என்ற ரீதியில் கிழவி சொல்ல, பொறுமை இழந்தப் போலிஸ்காரர்,
’(இதக் கொஞ்சம் ரஃப்ஃபாதான் டீல் பண்ணணும்)’ என்று நினைத்துக் கொண்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கோபமாக வைத்துக் கொண்டு “ஏ கெழவி அங்க பாத்தியா? எல்லாம் பிரம்பு. ஒன்னொன்னும் ஒன் ஒசரத்துக்கு இருக்கு. எடுத்து வெளாசுனேன் அதுல ஒரு அடிக்கி நீ தாங்க மாட்ட. ஒழுங்கா ஓடிப் போயிரு” என்று மிரட்டினார்.
அதே தினுசில் கிழவியும் “என்னா மெரட்டிப் பாக்குறயா? நீ என்னா மெரட்டுனாலும் என் ஒரலு கெடக்காம நான் இங்க இருந்து நகரமாட்டேன்” என்று கால்மேல் காலைப் போட்டுக்கொண்டி இன்னும் வசதியாக உட்கார்ந்து கொண்டாள்.
“இன்னக்கி எந்தக் கழுத மூஞ்சில முழிச்சேன்னு தெரியலயே” என்று தலையில் கையை வைத்துக் கொண்டு போலீஸ்காரர் உட்கார்ந்துவிட்டார்.
அப்போது வெளியே ஒரு இருசக்கர வாகனத்தை ’சடன் ப்ரேக்’ போட்டு நிறுத்திவிட்டு ஒருவன் வேகமாக உள்ளே வந்தான்.
வந்தவன்(கிழவியின் பேரன்) “ஏ கெழவி இங்க என்னா அலப்பறையக் குடுத்துக்கிட்டு இருக்க”
“ஏலே என் வெத்தல இடிக்கிற ஒரலக் காணாம்டா. அதேன் இங்க புகார் குடுக்கலாம்னு வந்தேன்”
“புகார் குடுக்க வந்த மூஞ்சியப் பாரு. நேத்து நீயும் அந்த இருளாயி கெழவியும் எங்கன ஒக்காந்துப் பேசிக்கிட்டு இருந்திங்க”
“நேத்து…இருளாயியோட….நம்ம வேப்பமரத்தடியிலதேன் உக்காந்து பேசினோம்”
“அங்க அப்பா எப்பயும் ஒக்காருர சேர் இருந்துச்சா?”
“ஆமா இருந்துச்சு. இப்ப அதுக்கு என்னா?”
“நீ அதுலதான் ஒன் பொக்கிசத்த வச்சிட்டு மறந்துட்ட. அங்கிட்டுப் போன அம்மாவோ, மீனாச்சியோ போற போக்குல துண்ட அது மேல போட்டுட்டுப் போய்ட்டாங்க. அது தெரியாம அப்பா அது மேல ஒக்காந்து..”
“அய்யய்யோ”
“பதறாத அப்பத்தா. உன் மகனுக்கு ஒன்னுமில்ல”.
“என் ஒரலு என்னாச்சு”
“பக்கி..ஒன்னய எல்லாம்…வா..” என்று கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். “ஏலே இருடா இந்தா வாரேன்” என்று உள்ளே திரும்பி
“போலீஸ் தம்பி ஒங்கள ரெம்பத் தொல்ல பண்ணிட்டேன். ச்சாரி பண்ணிக்க” என்றார்.
“ஆத்தா..தாயே..நீ மொதல்ல எடத்தக் காலி பண்ணு” என்று கும்பிடு போட்டு அனுப்பிவைத்தார் அந்தப் போலிஸ்காரர்.
….
மனோதினி

எழுதியவர் : மனோதினி (24-May-17, 11:09 am)
சேர்த்தது : மனோதினி ஜெ
பார்வை : 1193

மேலே