வயது வந்தவர்களுக்கு மட்டும்

===============================
கொக்கணி பாக்குவெட்டி
வெற்றிலை உரல்,
தைலம், மூக்குப்பொடி, சுருட்டு
ஊன்றுகோல் எல்லாம் தாத்தா
பாட்டியினுடையதென்று
பொருட்களை வைத்தே
முதியவர்களை அளக்கிறோம்.

வழுக்கைத் தலை ,நரைத்தமுடி
பொக்கைவாய் ,பார்வை மங்கள்,
தள்ளாடும் நடை, நாக்குத்தடுமாறல்
என்பவற்றால் வயோதிபத்தை
அடையாளப் படுத்துகிறோம்

வாதம் பக்கவாதம், வாயுத்தொல்லை ,
இருமல், குருடு, செவிடு என்று
நோய்களையும் வயோதிபத்தின்
குறியீடாக்கி வைக்கிறோம்.

வாழ்க்கையின் முதிர்ச்சி,
அனுபவத்தின் பள்ளிக்கூடம்,
சுமைதாங்கிகளின் ஓய்வு ,
ஏடுகள் இல்லாத அகராதி
என்றெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடிய
முதுமையின் சித்திரங்களை
முதியோர்மனைச் சுவர்களில்
வரைந்துவிட்டு எப்போதாவது
எட்டிப்பார்க்கிறோம்.

ஊன்றுகோலாய் இருப்போமென்று
நம்பியிருந்த அவர்களுக்கு நாமொரு
ஊன்றுகோலை வாங்கிக் கொடுத்துத்
திரும்புவதை நம் பிள்ளையும்
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்பதை நாமும் மறந்தே போகிறோம்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-May-17, 2:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 142

மேலே