முகமூடிகள் - டைரி

முகமூடிகள் (டைரி)
=========================
எனக்கென்ன பிடிக்கும் என்று
இதுகாறும் யாரும்
என்னிடம் அகவியதில்லை
அப்படி கேட்டாங்கன்னா
ஒரே ஒரு விஷயம் தான் சொல்லுவேன்
ஒவ்வொரு நியூ இயர் தொடங்கும் முன்பு
எங்க ஊருல ஒரு இடத்துல
மழைபெய்யும்
அந்த மழைக்காக
காத்திருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்
இப்போல்லாம்
அதை ரொம்ப மிஸ் பண்றேன்
அதுப்போலத்தான், அவளும், ம்ம்ம்
யார்னு கேக்காதீங்க ம்ம்
சொல்லவே மாட்டேன் ஆமா :)


நேற்றும்,
மழை பெய்திருந்தது
நேற்றும்,
உதய அஸ்தமனம் இருந்தது,
ஆகாய சந்த்யையில்,
நேற்றும்,
உயர்ந்த பூக்களுடைய மரங்கள்,
பூக்களைப் பொழிந்தன,
ஆனால், அவை எப்போதும்
என்னுடையதாக இருந்ததில்லை
காரணம்,
நேற்றுவரை நான் காதலை அறிந்திருக்கவில்லை
இன்னெப்போதோ,
என்னுள் தொடங்கிவிட்ட
காதலிலூடே, நான் அறிகிறேன்,
இன்று பெய்த மழைக்கு, அவள் வாசமிருக்கு,
இன்று உதித்த
சூரிய கதிர்க்கோல்களில்,
அவள் ஸ்பரிசமிருக்கு,
இன்று பொழிந்த மலர்ச்சரங்களில்
அவள் சிலிர்ப்பிருக்கு,
இன்றெல்லாம்
சில வார்த்தைகளை பேசத் துவங்கும்போது,
அதில் கவிதையிருக்கு ம்ம்,
அதன் பின்னாலான, ஒவ்வொரு நாளும்,
சற்று நேரத்தே தொடங்கட்டுமே,
என்று ஆசைப்படுகிறேன்,
பகற்பொழுதுகள், தீராதே போகட்டுமே
என்று பிரார்த்திக்கிறேன்,
ஏது ஜீவ ஜாலத்திலும், மனசு உணரப்படும் வார்த்தை,
அவள் விழியசைவுகள்,

எப்போதும் போலில்லாமல்,
பதிவில்லாத அழகோடு,
என்னை, அடுத்து அடுத்து அவள் வரும்போது,
அதுவரையில்லாத,
ஒரு நிமிஷ பதற்றத்துடன் தெரிகிறேன்,

சட்டைப்பையை
காலியாக்கி வைத்திருக்கிறேன்
சிரிப்புதிர்ப்பாள்,
பிடித்துக்கொள்ளலாம் என்று,
பேருந்தில்,
பயணச்சீட்டு எடுத்துவிட்டு
சில்லறையில்லாத
ஒருவன்
நடத்துனரிடம் முழிப்பதைப்போல
சாவுகிராக்கி
முழிப்பு முழிக்கிறேன்,
அவள் உண்மைகளுக்கு முன்னால்,
அவளை
கடக்கும்வரைதான்,
நான் அழகு,
அவளைக் கடந்துவிட்டப்பின்னால்
அவள் மட்டும்தான்
எப்போதும் அழகாய் தெரிகிறாள்,

புத்தக அலமாரியில்
பிடித்த புத்தகங்களைப்போல
அவள் பெயரை
அகவரிசையில் (alphabetical )
வரிசாக்கிரமம் செய்கிறேன்
உலகத்திற்கு
ஏதோ புதுமொழி கிடைத்தது,
நெருங்கிய நண்பன்
வாசித்துவிட்டு சொல்கிறான்
இது புதிய கெட்டவார்த்தைப்போலிருக்கே என
ஆம், அவள்
மனசுக்குப்பிடித்த
புதிய கெட்டவார்த்தைதான்,
தோணல்,
மனதிடம் சொல்லிக் கொண்டது,

இந்த ஆசைகளை,
இதோ சொல்லிவிடுகிறேன்,
இந்த வருடம் சொல்லிவிடுகிறேன் ,
என்கிற கதையில்,
டைரி,
எண்ணிக்கை
உயர்ந்துகொண்டே இருந்தன,
அப்படித்தான்,
எங்கோ வைத்து, சந்திக்கையில்,
ஒருமித்து நாம்,
நம் பெயர்களை சொல்லிக் கொண்டபோது,
நம் பெயர்கள்
விபத்துக்குள்ளாகின, இதயங்களும் ,

எங்களோடு நீயில்லை,

இன்றும்,
நம் நண்பர்களோடு,
அந்த விளையாட்டை,
விளையாட மறப்பதில்லை,
பிடித்த விஷயத்தை,
துண்டு சீட்டில் எழுதிவிட்டு,
குலுக்கிப்பார்த்து,
ஒரு சீட்டை எடுக்கும்போது,
உன் எல்லா பிறந்த நாளிலும், என் பெயரே வரும்,
யார் உன்னோடு,
ஊர்ச்சுற்ற வருவது என்பதில்,
அப்போதும்
எனக்குத் தெரியாது,
எல்லா சீட்டிலும்,
என் பெயரே எழுதப்பட்டிருக்குன்னு,

அப்போதுபோலவேதான்,
இன்றும்
நான் வானவில் ரசிக்கிறேன்,
நடுவிலுள்ள,
பச்சை நிறம் நீ,
உனக்கடுத்துள்ள மஞ்சளின் நிறம் நான்,
அடுத்தடுத்த ஐந்து நிறங்கள்,
நம் குழந்தைகள்,,
வானவில்லின் ஏழு நிறங்களை,
ஏழு கிழமைகளுக்கு,
பெயரிட்டு அழைக்கிறேன்,
அது இன்றுவரை,
யாருக்கும் தெரியாது,

உன் கல்லறை போர்த்திய சலவைக்கல் குளிர்ச்சி,
உன்னை அணைக்கக் கூப்பிடுது
சரி,
நேரமாகிட்டு,
போகட்டுமா ,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (27-May-17, 5:36 am)
பார்வை : 146

மேலே