குறும்படம்---- அபுயுலா க்ரிலோ--- வெட்டுக்கிளிப் பாட்டி

தண்ணீர் தனியார்மயமாதலையும் மக்களுக்குச் சொந்தமான அனைத்து இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழலின் மூலம் கைப்பற்றி தமது லாப வேட்டைக்கு எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் உலகெங்கிலும் உள்ள யாருக்கும் புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்ட குறும்படம் அபுயுலா க்ரிலோ (வெட்டுக்கிளிப் பாட்டி).

பொலிவியாவில் 2000 வருடம் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டது. அதன் விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அதை எதிர்த்து கோபகன் நகரில் அமைதி ஊர்வலம் நடத்தினர். ஆனால் அரசு ஆயுதப் படைகள் அவர்க்ளை குறிவைத்துத் தாக்க, பேரணி கலவரமாக மாறியது. தளராமல் தொடர்ந்த பொலிவிய மக்கள் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.

அந்த அனுபவத்தினால் உந்தப்பட்ட பொலிவியாவின் இளம் அனிமேஷன் கலைஞர்க்ள், டென்மார்க் அனிமேஷ்ன் பள்ளி ஒன்றின் உதவியுடன், தண்ணீர் தனியார்மயமாதல் பற்றிய அருமையான, கூர்மையான குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.

பொலிவியாவின் நாட்டுப்புறக் கதை ஒன்றின் பாத்திரமான “வெட்டுக்கிளிப் பாட்டி” என்ற மூதாட்டி எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து நீர் மேகம் வருகிறது, அவர் பாடும் போது அங்கு மழை பொழிகிறது. மழை பெய்வதால் பயிர் செழிக்கிறது, வளம் பெருகிறது, மக்கள் செழிப்பாக வாழ்கிறார்கள்.

ஒரு முறை மக்கள் அவரை அவமானப்படுத்தியதன் காரணமாக வெட்டுக் கிளிப் பாட்டி பாடியபடி நகரம் நோக்கி சென்று விடுகிறார். நகரத்தில் அவரைப் பிடிக்கும் கார்ப்பரேட் ஆசாமிகள் அவரை பாட வைத்து, பொழியும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்க ஆரம்பிக்கிறார்கள்.

வெட்டுக்கிளிப் பாட்டி ஓரிடத்தில் அடைபட்டு விட்டதால், நாட்டில் தண்ணீர் பஞசம் தலை விரித்து ஆடுகிறது. ஆனால் பாட்டி இருக்கும் இடமோ கார்ப்பரேட் நிறுவனம். அந்த நிறுவனம் பாட்டியைக் கொடுமைப்படுத்தி அவரது கண்ணீரையும் பாட்டிலில் பிடித்து மக்களுக்கு விற்கின்றது, தண்ணீரின் விலையையும் ஏற்றிக் கொண்டே போகிறது.

பாட்டி தப்பிக்க முனைந்தாலும் முடியவில்லை. பாட்டி அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த மக்கள் ஒன்று திரண்டு பேரணியாக அவரை விடுவிக்க வருகிறார்கள்.

தனியார் நிறுவனமோ அரசு உதவியுடன் போலிசை மக்கள் மீது ஏவுகிறது. இறுதியில் போலீஸ் தோற்கடிக்கப்பட்டு மக்கள் போராட்டம் வெற்றி பெறுகிறது. பாட்டி சுதந்திரமாக பாடிக் கொண்டு வெளியில் நடக்க பெருமழை பெய்து தண்ணீர் பெருகி சுதந்திரமாக ஓடுகிறது.



இந்தியாவின் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா “இலவசமாக கிடைப்பதால் தான் மக்கள் தண்ணீரை வீணாக்குகிறார்கள். தண்ணீரை தனியார் மூலம் விற்பதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்கிறார்.

தண்ணீரை வீணாக்குவது சாதாரண மக்கள் அல்ல அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆடம்பர விடுதிகளிலும், பணக்கார வீடுகளிலும்தான் நீச்சல் குளங்கள், குளிக்கும் தொட்டிகள் என்று தண்ணீரை பெருமளவு வீணடிக்கின்றனர்.

ஆனால், அரசு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்து இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தவும் வீணாக்கவும் அனுமதிக்கிறது.

சுற்றுச் சூழல் பற்றியும் இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றிப் பேசும் தன்னார்வக் குழுக்கள் பெரு நிறுவனங்களிடமே நிதி உதவியும் நன்கொடையும் பெற்றுக் கொள்கின்றன. யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களையே புரவலர்களாக கொண்டு செயல்படுகின்றன தன்னார்வ குழுக்கள்.

தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்ட வழியை நடைமுறையில் நிரூபித்துக் காட்டிய பொலிவிய மக்களின் அனுபவப் பாடத்தை பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம்.

முதலாளிகளின் பிடியில் இருக்கும் போது அவர்களது லாப வேட்டைக்காக விஷத்தையும் வக்கிரத்தையும் உமிழும் கலை, மக்கள் கலைஞர்கள் கையில் செய்திகளையும், சுரண்டல்களையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறது என்பதையும் இந்தக் குறும்படம் நமக்குச் சொல்லுகிறது.

எழுதியவர் : (31-May-17, 5:57 am)
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே