பௌத்தமும் தமிழும் -

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் கண்டோம். அந்தப் பௌத்த ஆசிரியர் பாலிமொழியில் பல நூல்களை இயற்றி வைத்தனர் என்பதையும் அறிந்தோம். ஈண்டு, பௌத்த ஆசிரியர் தமிழ்மொழியில் என்னென்ன நூல் இயற்றியுள்ளார் என்பதை ஆராய்வோம்.

இப்போது தமிழில் உள்ள பௌத்த நூல்கள் மிகச் சில. இலக்கியத்தில் ஒன்றும் இலக்கணத்தில் ஒன்றும், ஆக இரண்டு நூல்களே இப்போது முழுநூலாக எஞ்சி நிற்கின்றன. ஏனைய நாலைந்து நூல்களின் பெயர்மட்டும் வழங்கப்படுகின்றனவேயன்றி நூல் முழுவதும் கிடைக்கப் பெற்றிலம்.

ஜைனரும், பௌத்தரும் தத்தம் மதக் கொள்கைகளை அந்தந்த நாட்டுத் தாய்மொழி வாயிலாகப் பரவச் செய்தனர் என்று 'பௌத்தரும் தமிழும்' என்னும் அதிகாரத்தில் கூறினோம். அங்ஙனமாயின், தமிழ்மொழியிலும் அவர்கள் பல நூல்களை இயற்றிவைத்தனர் என்பதில் யாதோர் ஐயமுமில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் உரகபுரம் (உறையூர்), பூம்புகார், பூதமங்கலம் முதலான இடங்களில் தங்கி, பௌத்தமத ஊழியம் புரிந்துவந்த பேர்பெற்ற புத்ததத்தர் என்னும் தமிழ்ப் பௌத்தர், பாலி மொழியில் பாலி மொழி நூல்களுக்குப் பல உரைகள் எழுதியிருப்பதில், தென்னாட்டில் வழங்கிய பல பௌத்தக் கொள்கைகளை எடுத்துக் கூறியிருக்கிறார் என்றும், அவற்றை அக்காலத்திலிருந்த தமிழ்ப் பௌத்த நூல்களினின்றும் எடுத்திருக்கக்கூடும் என்றும் ரைஸ் டேவிட் என்னும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். நீலகேசி உரையிலும், வீரசோழிய உரையிலும் பௌத்தமதச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில பாடல்கள் எந்த நூலினின்று எடுக்கப்பட்டன என்பது அறியக்கூடாமல் இருக்கின்றது. எனவே, பண்டைக்காலத்தில், பௌத்தமதம் தமிழ்நாட்டில் வழங்கி வந்தபோது, பௌத்தரால் இயற்றப்பட்ட பல தமிழ்நூல்கள் இருந்தன என்பதில் ஐயமில்லை.

அங்ஙனமாயின், அந்த நூல்கள் இப்போது எங்கே? இவ்வினாவுக்கு விடைபெறுவது கடினமன்று. பௌத்த மதத்துக்குப் பெரும் பகைஞராக இருந்தவர் ஜைனரும் வைதீகரும் என்பதனை ஆறாம் அதிகாரத்தில் அறிந்தோம். பௌத்த மதத்தின் பிறவிப் பகைஞராகிய இவர்களால் பௌத்த நூல்கள் அழிவுண்டன போலும். பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற சமயப்போரில், வைதீக மதம் ஜைன மதத்தை அழித்துவிட்ட போதிலும், சில ஜைனர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் அருகிக் காணப்படுகின்றனர். இவ்வாறு எஞ்சி நின்ற ஜைனரால் ஜைனமத நூல்கள் சில இறந்துபடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், பௌத்த மதம் ஜைன மதத்தைவிடக் கடுமையான வீழ்ச்சியை அடைந்துவிட்டது. பௌத்தத் தமிழ் நுல்களைப் போற்றிப் பாதுகாக்கத் தமிழ்ப் பௌத்தர் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்ப் பௌத்த நூல்கள் எவ்வாறு உயிர் பெற்றிருக்கும்? அவை யாவும் 'கொலை' செய்யப்பட்டன. இப்போது எஞ்சி நிற்கும் இரண்டொரு பௌத்த நூல்கள் எவ்வாறு தப்பிப் பிழைத்திருக்கின்றன என்பது பெருவியப்பாக இருக்கின்றது. தமிழ்நாட்டுப் பௌத்த ஆசிரியர் இயற்றிய பாலிமொழி நூல்கள் மட்டும் எவ்வாறு இன்றும் நின்று நிலவுகின்றன என்றால், அவை இலங்கை, பர்மா முதலான தேசத்துப் பௌத்தர்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்ப் பௌத்த நூல்களைப் போற்றுவதற்குத் தமிழ்ப் பௌத்தர் இல்லாதபடியால் அவை இறந்துவிட்டன.

பௌத்த நுல்களை இழந்துவிட்டோம். அஃதாவது, தமிழ் இலக்கியச் செல்வத்தின் ஒரு பகுதியைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. ஒரு நாடு தனது பொருட்செல்வத்தை இழந்து வறுமைப்படுவதைவிட இலக்கியச் செல்வத்தை இழந்துவிட்டது பெரிதும் வருந்தத் தக்கது. இலக்கியங்கள் மறைந்துவிட்டன என்றால் அவற்றில் கூறப்பட்ட கருத்துக்களும் இறந்துவிட்டன என்பது பொருள். என்ன செய்வது? சென்றது சென்றுவிட்டது. இனி தமிழில் இப்போது எஞ்சியுள்ள பௌத்த நூல்களைப்பற்றி ஆராய்வோம்.


1. மணிமேகலை:

தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. சிந்தாமணி, சிலப்பதிகாரம் இரண்டும் ஜைனரால் இயற்றப்பட்டன. மணிமேகலை, குண்டலகேசி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. இந்த இரண்டில் மணிமேகலையைத் தவிர மற்றது இறந்துவிட்டது. மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றென்று கூறப்படுகின்றபோதிலும், இது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையது. இதனை,

'மணிமே கலைமே லுரைப்பொருண் முற்றிய
சிலப்பதிகார முற்றும்'

என்னும் சிலப்பதிகார வஞ்சிக்காண்டக் கட்டுரைச் செய்யுட் பகுதியினால் அறியலாம். எனவே, சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் ஒரே காப்பியம் என்று கூறினும் பொருந்தும். ஆயினும், ஆன்றோர் இவையிரண்டனையும் செவ்வேறு காப்பியங்களாகவே கொண்டனர்.

மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார். (இவரது வரலாற்றினை 11 அம் அதிகாரத்தில் காண்க.) இந்நூல் முழுவதும் ஆசிரியப்பாவினால் அமைந்தது. 'கதை பொதி பாட்டு' என்னும் பதிகத்தைத் தவிர்த்து, 'விழாவறை காதை', முதலாகப் 'பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை' இறுதியாக முப்பது காதைகளையுடையது. இதற்கு மணிமேகலை துறவு என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், இளங்கோ வேந்தர் என்னும் இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அறந்கேற்றினார். இவற்றை,

"இளங்கோ வேந்த னருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் டமிழ்த்திற மணிமே கலைதுற
வாறைம் பாட்டினு ளறியவைத் தனனென்"

எனவரும் பதிக ஈற்றடிகளால் அறியலாம்.

மணிமேகலை பல திறத்தானும் சிறப்புடைய நூல். சொல் வளமும் பொருள் ஆழமும் செறிந்து திகழும் இந்நூல் வெறும் இலக்கியம் மட்டும் அன்று. பண்டைத் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், கலைகளையும், நாகரிகத்தினையும் அக்காலத்திலிருந்த சமயங்கள் அவற்றின் கொள்கைகள் முதலியவற்றையும், அக்கால வழக்க ஒழுக்கங்களையும் ஆராய்வதற்கு இது பெரிதும் பயன் படுகிறது. இந்த மணிமேகலை நூல் தமிழ்த்தாய்க்கு அணிசெய்யும் மணிமேகலையாகவே இலங்குகின்றது. இந்த நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு; (இணைப்பு காண்க.)

சுவைமலிந்த இச்செந்தமிழ் நூலை முதன் முதல் அச்சிற்பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை யவர்களாவர். 1894 ஆம் ஆண்டுக்கு நேரான 'விஜய தனுர் ரவியில் இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 - அணாவுக்கு விற்கப்பட்டது. மகாவித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் தம்மிடமிருந்த ஏட்டுச் சுவடியைமட்டும் ஆராய்ந்து வெளியிட்ட நூலாதலின், இதில் சிற்சில பிழைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பிள்ளையவர்கள் பதிப்பு வெளிவந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், டாக்டர் உ. வே சாமிநாத ஐயரவர்கள் பல பிரதிகளை ஆராய்ந்து 1898 ஆம் ஆண்டில் அரும்பத உரையுடன் இந்நூலை அச்சிற் பதிப்பித்தார்கள். ஐயரவர்களுக்கு உதவியாயிருந்த பல ஏட்டுப் பிரதிகளுள் மகாவித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் உதவிய பிரதியும் ஒன்றாகும். பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலைப் புத்தகத்தையும் ஐயரவர்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், எக்காரணத்தினாலோ ஐயரவர்கள், பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலையைப் பற்றிக் குறிப்பிடாமலே விட்டார்கள். பிள்ளையவர்களின் பதிப்பில் காணப்பட்ட பிழைகள் பலவும் ஐயரவர்களின் பதிப்பில் திருத்தப்பெற்றன. எஞ்சி நின்ற ஒரு சில பிழைகளும் இரண்டாவது, மூன்றாவது பதிப்புகளில் திருத்தப்பெற்றன. இந்த அருமையான சிறந்த செந்தமிழ் நூல் இறந்துபடாமல் உய்வித்தருளிய இரண்டு பெரியாருக்கும் தமிழ்நாட்டின் நன்றி என்றும் உரியதாகுக.

இந்நூல் நடையினை அறியக் கீழே சில பகுதிகளை எடுத்துக்காட்டுவோம். புகார்ப்பட்டினத்தின் உவவனம் என்னும் பூஞ்சோலையைக் கூறும் பகுதி இது:-

'குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையுந்
திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும்
நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங்
குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய வுவனந் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென்'
(மலர்வனம் புக்க காதை 160-171)

மேற்சொன்ன உவவனத்திற்குச் சென்றது மணிமேகலைக்கு அதுவே முதல் தடவையாதலின், அவளுடன் சென்ற சுதமதி என்பவள், அப் பூஞ்சோலையின் இயற்கை எழிலினை மணிமேகலைக்குக் காட்டி விளக்குகின்றாள், அப்பகுதி இது:-

'பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்
கிருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்
மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்!
மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப்
பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்
றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்ன மாங்கினி திருப்பக்
கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்
கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்!
இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம் போல்
விரை மலர்த் தாமரை கரைநின் றோங்கிய
கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த
வால்வெண் சுண்ண மாடிய திதுகாண்!
மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து
தாதுண் வண்டின மீது கடி செங்கையின்
அஞ்சிறை விரிய வலர்ந்த தாமரைச்
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்
கெறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி
மறிந்து நீங்கு மணிச்சிரல் காண்! எனப்
பொழிலும் பொய்கையுஞ் சுதமதி காட்ட
மணிமே கலையம் மலர்வனம் காண்புழி'
(பளிக்கறை புக்க காதை. 1-26)

2. வீரசோழியம்:

இஃதோர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தை சிறுபான்மை தழுவித் தமிழ் ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாக கூறுவது. இதனை இயற்றியவர் புத்தமித்திரனார். இந்நூற்கு உரை எழுதியவர் இவர் தம் மாணவராகிய பெருந்தேவனார். (நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறுகளை 11ஆம் அதிகாரத்தில் காண்க.) புத்தமித்திரனாரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின், இதற்கு இப்பெயர் வாய்ந்தது. இதனை, 'எதிர்நூல்' என்பர்.

இதற்கு 'வீரசோழியக் காரிகை' என்னும் பெயரும் உண்டு. எழுத்ததிகாரம், சந்திப்படலம் என்னும் ஒரே படலத்தையுடையதாய் 28 செய்யுள்களையுடையது. சொல்லதிகாரம், வேற்றுமைப்படலம் (9 செய்யுள்), உபகாரப் படலம் (6 செய்யுள்), தொகைப்படலம் (8 செய்யுள்), தத்திதப்படலம் (8 செய்யுள்), தாதுப்படலம் (11 செய்யுள்), கிரியாபதப்படலம் (13+2 செய்யுள்) என்னும் ஆறு படலங்களையுடையது. ஏனைய பொருள், யாப்பு, அணி என்னும் மூன்று அதிகாரங்களும் முறையே பொருட் படலம் (21 செய்யுள்), யாப்புப்படலம் (36 செய்யுள்), அலங்காரப்படலம் (41 செய்யுள்), என்னும் ஒவ்வொரு படலமுடையன. இவற்றையன்றி மூன்று பாயிரச் செய்யுள்களையுமுடையது.

இது வழக்கொழிந்த இலக்கண நூல்களுள் ஒன்று. கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தை இயற்றிக் கச்சிக் குமரகோட்டத்தே அரங்கேற்றுங் காலத்தில், அப்புராணத்தின் முதற் செய்யுளில் வருகிற 'திகடசக்கரம்' என்னும் சொற்புணர்ச்சிக்கு இலக்கணங் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர்களுக்கு இந்த வீரசோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்டதென்றும், பின்னர் அவையிலுள்ளோர் அப் புணர்ச்சியை ஒப்புக் கொண்டனரென்றும், ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இவ்வரலாற்றினின்றும் அக்காலத்திலேயே இந்நூல் வழக்கொழிந்து விட்டதென்பதை நன்குணரலாம். இது இயற்றப்பட்ட காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.

இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்குச் சிறிது உதவி புரிகின்றன. சோழர்கள் கூடல் சங்கமம் முதலிய இடங்களில் அயல்நாட்டு வேந்தரை வென்ற செய்திகள் இவ்வுரையில் காட்டப்படும் மேற்கோட் செய்யுள்களினால் விளங்குகின்றன. இச் செய்திகளைக் கல்வெட்டுச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம், உதயணன் காதை, நியாய சூடாமணி, புதியா நுட்பம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், வச்சத்தொள்ளாயிரம் முதலிய நூல்களின் பெயர் இவ்வுரையில் கூறப்படுகின்றன. புத்தரைப்பற்றிய அழகான பாடல்கள் யாப்புப் படல உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் இணைப்பில் சேர்க்கப்பட்ட செய்யுள்களில் பல இவ்வுரையினின்றும் எடுக்கப்பட்டவையே.

போற்றுவோரின்றி இறந்துபட்ட சில நூல்களைப் போன்றே இந்நூலும் இறந்துபட்டிருக்கும். நற்காலமாக, இறக்குந்தறுவாயிலிருந்த இந்த நூலினைக் காலஞ்சென்ற ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் அச்சிற் பதிப்பித்துப் புத்துயிர் கொடுத்தார்கள். 1881 ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பிக்கப்பட்டது இப்புத்தகம்.

அகத்திய முனிவர், சிவபெருமானிடத்தில் தமிழைக் கற்றார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. ஆனால், பௌத்தராகிய புத்தமித்திரனார், அகத்தியர் அவலோகிதீஸ்வரர் (போதி சத்துவர்) இடத்தில் தமிழ் கற்றதாகக் கூறுகிறார்.

"ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்தமிழ்"

என்று இவர் தமது வீரசோழியப் பாயிரத்தில் கூறுவது காண்க. அன்றியும், அவலோகிதரே தமிழ்மொழியை உண்டாக்கினார் என்றும் இவர் கூறுகிறார். "பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த்தமிழ்" என்று இவர், கிரியாபதப்படலக் கடைசிச் செய்யுளில் கூறுவது காண்க.

கீரா சந்தேஸ்யம் என்னும் செய்யுள் நூல் சிங்கள மொழியில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், இலங்கையரசன் பராக்கிரமபாகு VI (கி.பி. 1412-1467) காலத்தில் இயற்றப்பட்டது. இலங்கையிலே தோட்ட கமுவா என்னும் இடத்தில் இராகுலதேரர் தலைமையில் ஒரு கல்லூரி நடைபெற்றிருந்ததென்றும், அக்கல்லூரியில் சமஸ்கிருதம், பாலி, சிங்களம், தமிழ் மொழிகள் பயிலப்பட்டன என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. சோழமன்னர் இலங்கையைக் கைப்பற்றி அரசாண்ட காலத்தில், இலங்கையில், தமிழ்நாகரிகம் போற்றப்பட்டதோடு, தமிழ் மொழியையும் சிங்களவர் கற்று வந்தனர் என்பது தெரிகிறது.

இலங்கையிலே சிங்களவர் தமிழ் பயின்றபோது, பௌத்தராகிய அவர்கள், பௌத்தரால் இயற்றப்பட்ட வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கணத்தைக் கற்றிருக்க வேண்டும். ஏனென்றால் சிங்களவர் சம்ஸ்கிருதம் படிக்கும் போது, சந்திரகோமினி என்னும் பௌத்தர் இயற்றிய சம்ஸ்கிருத இலக்கணத்தைத்தான் கற்பது அவர்கள் வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழ் கற்பதற்குப் பௌத்தர் இயற்றியவீரசோழிய இலக்கணத்தைத்தான் கற்றிருக்கவேண்டும். அன்றியும், ஸிததஸங்கரா என்னும் சிங்கள மொழி இலக்கணம் கி.பி 13ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இந்நூலில், இரண்டாம் வேற்றுமையைக் கூறுகிற பகுதி, வீரசோழியத்தைப் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனால் இந்த இலக்கணநூல், பௌத்தர்களால் போற்றப்பட்டதென்பது விளங்குகின்றது.

மாதிரிக்காக, இந் நூலினின்றும் சில செய்யுள்களைக் காட்டுவோம்:-

'மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்குந் தொடரவொண்ணாதவன் தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே.'

'ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க
நீயு முளையோ வெனிற்கரு டன்சென்ற நீள்விசும்பில்
ஈயும் பறக்கு மிதற்கென் கொலோசொல்லு மேந்திழையே!'

'நாமே வெழுத்துச்சொ னற்பொருள் யாப்பலங் காரமெனும்
பாமேவு பஞ்ச வதிகார மாம்பரப் பைச்சுருக்கித்
தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயராற்
பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே.'

(பாயிரம்)

'அறிந்த வெழுத் தம்முன் பன்னிரண் டாவிகளான, கம்முன்
பிறந்த பதினெட்டுமெய், நடுவாய்தம், பெயர்த்திடையா
முறிந்தன யம்முத லாறும், ஙஞண நமனவென்று
செறிந்தன மெல்லினம், செப்பாத வல்லினந் தேமொழியே.

இந்நூல் உரைப் பகுதியினுன்று மாதிரிக்காகக் கீழ்கண்ட பகுதியைத் தருகிறோம். இது, பொருட் படலத்தில், 'நாற்குலப் பக்கம்' என்னும் தொடக்கத்தினுடைய 19ஆவது செய்யுள் உரை:

(சந்தி 1)

'களவழி களத்திலழிவு. குரவையாவது, இன்றேர்க் குரவையிட்டாடுதல். ஆற்றலாவது, ஆரியரணாத் தன் பகைமிகையை மதியாது பொரும் ஆற்றல். வல்லாண் பக்கமாவது, பகை வென்று விளங்கி மதிப்பெரு வாகை வண்டாரத்துப் பெறுவான் செங்களத்துப் புலர்ந்து மாய்தல். வேட்கையார் பக்கமாவது, விருந்தோம்பலு மழலோம்பலு முட்பட வெண்வகைத்தாம் பக்கம். மேன்மையாவது, பெரும்பகை தாங்குமேன்மை. அது அருளோடு புணர்ந்த வகற்சியாம்.

'புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாஅது
முலைமறா அக் குழவி வாங்கி வாய்ப்படுத்
தீரையெனக் கவர்ந்தது நோக்கி யாங்க
வேரிளங் குழவிமுன் சென்று தானக்
கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய
வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்
பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
ஆருயிர் காவல் பூண்ட
பேரருட் புணர்ச்சிப் பெருமை தானே.'

பொருளாவது, அறம் பொருளின்ப மூன்று பொருளினும் விடாமற் புணர்ப்பது. காவலாவது, பிழைத்தோரைத் தாங்குதல். துறவாவது, தவத்தினை வென்ற பக்கம். அஃதாவது

'வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கும்
அருளின் றீந்தே னுரைப்பநனி நெகிழ்ந்து
மலரினு மெல்லி தென்ப வதனைக்
காமர் செவ்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்ந்தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே.'

கொடை யென்பது,


'பாசடைப் போதிப் பேரருள் வாமன்
வரையா ஈகை போல யாவிருங்
கொடைப்படு வீரக் கொடைவலம் படுமின்
முன்ன ரொருமுறைத் தன்னுழை யிரந்த
அம்பி லரக்கர் வேண்டளவும் பருக
என்புதொறுங் கழிப்பிந் தன்மெய் திறந்து வாக்கிக்
குருதிக் கொழும்பதங் கொடுத்தது மன்றிக்
கருசிமிட் பட்ட கள்ளப் புறவின்
மாய யாக்கை சொல்லிய தாற்றன்
உடம்பு நிறுத்தக் கொடுத்தது மன்றி' எனவரும்.


படையாளர் பக்கமாவது, கருதறியும் படையாளர் பக்கம். ஒற்றுமையாவது, சிறியோர் நாணப் பெரியோர் கூறிய கூறுபாட்டிற் கழிமனத்தை யொற்றுமை கொள்ளல். 'மற்று' மென்றமையால், எட்டியல் சான்றோர் பக்கமுட்படக் கண்டுகொள்க. எட்டியலாவன:


'அழுக்கா றிலாமை யவாவின்மை தூய்மை
யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை - யிழுக்காத
நற்புலமை யோடு நடுவு நிலைமையே
கற்புடைய வெட்டுறுப்புக் காண்'


என்றமையா லறிக. சான்றோர் பக்கமாவது, பகைவர் கண்ணுந் தன்பாலார்கண்ணு மொப்புமையாகப் பாசறையுள்ளாச் சால்புடைமை கூறுதல். அஞ்சாச் சிறப்பென்பதுமது. பிறவு மன்ன.

3. குண்டலகேசி:

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய இந்த நூல் இப்போது இறந்துவிட்டது. 'தருக்கமாவன: ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க' என்று யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர் 'மாலை மாற்றே சக்கரம் சழிகுளம்' என்னும் சூத்திர உரையில் கூறியிருப்பதனால் 'குண்டல கேசி' தருக்கநூல் என்பது அறியப்படும். எனவே, பௌத்த சமயச் சார்பான இந்நூல் தருக்க வாயிலாக ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைக் கண்டிபதாகும். இது பெரும்பான்மையும் விருத்தப் பாவினால் இயற்றப்பட்டதாகலின், இதனைக் 'குண்டலகேசிவிருத்தம்' என்றும் கூறுவர். 'குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத்தமாம்' என்பது வீரசோழிய (யாப்பு. 23 ஆம் பாட்டு) உரை. எனினும், இடையிடையே கலித்துறைச் செய்யுள்களும் விரவியிருந்தன என்பது "குண்டல கேசி விருத்தம் ... முதலாயினவற்றுட் கலித்துறைகளு முளவாம்" என வரும் வீரசோழிய (யாப்பு. 21 ஆம் செய்யுள்) உரையினால் விளங்குகின்றது. "குண்டலகேசி ..முதலாகவுடைய வற்றிற் றெரியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக் கவி செய்வானுக்கு அப்படியல்லாதாகாதென்பது. அன்றியும், அவை செய்த காலத்து அச் சொற்களும் பொருள்களும் விளங்கியிருக்கும் என்றாலும் அமையுமெனக் கொள்க" என்ற வீரசோழிய (அலங். 4 ஆம் செய்யுள்) உரைக் குறிப்பினால், இக் காவியத்தில் பொருள் தெரியாத சொற்கள் சில இருந்தன என்பது விளங்குகின்றது.

இந்நூலாசிரியர் நாதகுத்தனார் என்பவர். இதனை நீலகேசி 344 ஆம் பாட்டுரையில் 'புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு' என்னும் குண்டலகேசிச் செய்யுள் அடியை எடுத்துக்காட்டி, நாதகுத்தனார் வாக்கெனக் குறிப்பிடுவதனால் அறியலாம். (கீழ்க்காணும் மாதிரிச் செய்யுள் 3 ஆவது காண்க.)

மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி மணிமேகலை என்பவளின் பெயரையே அக் காப்பியப் பெயராகச் சூட்டினமை போல, இக் காவியத் தலைவியின் பெயர் 'குண்டல கேசி' என்பதாகலின், இக் காப்பியத்திற்குக் குண்டலகேசி என்னும் பெயர் சூட்டப்பட்டது. குண்டலகேசி என்பவள் புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில் வடநாட்டிலிருந்த ஒரு பெண் துறவி. இப்பெண்மணியின் வரலாறு பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூலாகிய 'தேரிகாதையிலும்' 'தம்ம பதா', 'அங்குத்தரநிகாயா' என்னும் நூலிலும், நீலகேசி என்னும் ஜைனத் தமிழ் நூல் (286 ஆம் செய்யுள்) உரையிலும் கூறப்பட்டிருக்கின்றது. குண்டலகேசியின் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:

இராசகிருகம் என்னும் நகரத்தை அரசாண்ட அரசனின் மந்திரிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்குப் பத்திரை எனப் பெயரிட்டுப் பெற்றோர் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். இவ்வாறு வளர்ந்த அப்பெண் மகவு பெரியதாகி மணம் செய்யத்தக்க வயதடைந்தது. ஒருநாள், இப்பெண் மாளிகையின் மேற்புறத்தில் உலாவியபோது, தெருவழியே கட்டழகு மிக்க காளையொருவனை அரசனது சேவகர் கொலைக்களத்துக்கு அழைத்துக்கொண்டு போவதைக் கண்டாள். கண்டு அக்காளையின் மேற் காதல் கொண்டாள். அவன் அரசனின் புரோகிதன் மகன். வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத் தண்டனை அடையப்பெற்றுக் கொலைக்களத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக்குற்றவாளியின் மேல் காதல் கொண்ட பத்திரை, 'அவனையே மணம்புரிவேன்; அன்றேல் உயிர்விடுவேன்', என்று பிடிவாதம் செய்தாள். இதனையறிந்த இவள் தந்தை கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டுக்கொண்டு வந்து நீராட்டி ஆடையணிகளை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணஞ்செய்வித்தான்.

மணமக்கள் இருவரும் இன்பமாக வாழுங் காலத்தில் ஒருநாள், ஊடல் நிகழ்ச்சியின்போது பத்திரை தன் கணவனைப் பார்த்து, "முன்பு கள்வன் அல்லனோ?" எனக் கூறினாள். அவன், அவள் தன்னை இகழ்ந்ததாகக் கருதிமிக்க சினங்கொண்டான். ஆயினும், அதனை அப்போது வெளியிற் காட்டாமல் அடக்கிக்கொண்டான்.

பின்னர், ஒருநாள் அவன் பத்திரையை அழைத்து, அவளிடம் தன் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும் பொருட்டு அருகிலிருந்த மலையுச்சிக்குப் போக விரும்புவதாகவும் அவளையும் உடன்வரும்படியாகவும் கூறினான். அவளும் இசைய இருவரும் மலையுச்சிக்குச் சென்றனர். மலையுச்சியினை அடைந்தவுடன், அக் கொடியோன் அவளைச் சினந்து நோக்கி, 'அன்று நீ என்னைக் கள்வன் என்று கூறினாயன்றோ? இன்று உன்னைக் கொல்லப் போகிறேன். நீ இறக்குமுன் உனது வழிபடு கடவுளை வணங்கிக்கொள்', என்றான், இதனைக் கேட்டுத் திடுக்கிட்ட அவள், 'தற்கொல்லியை முற்கொல்ல வேண்டும்' என்னும் முதுமொழியைச் சிந்தித்து, அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிபவள் போல நடித்து, 'என் கணவனாகிய உன்னையன்றி எனக்கு வேறு தெய்வம் ஏது? ஆதலின், உன்னையே நான் வலம்வந்து வணங்குவேன்', என்று சொல்லி, அவனை வலம் வருவதுபோல் பின்புறம் சென்று, அவனை ஊக்கித் தள்ளினாள். இவ்வாறு அக் கொடியவன் மலையுச்சியினின்றும் வீழ்ந்து இறந்தான்.

இதன் பிறகு, பத்திரை உலகத்தை வெறுத்தவாளாய் ஜைன மதத்தில் (நிகண்ட மதத்தில்) சேர்ந்து துறவு பூண்டாள். அந்த மதக்கொள்கைப்படி, துறவியான பத்திரையின் தலைமயிரைக் களைந்துவிட்டார்கள். ஆயினும், மீண்டும் தலையில் மயிர் வளர்ந்து சுருண்டு காணப்பட்டது. ஆகவே, 'சுருண்ட மயிரினையுடையவள்' என்னும் பொருள்படும் 'குண்டலகேசி' என்று அவளைக் கூறினர். இப்பெயரே பிற்காலத்தில் இவளுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட்டது. சில வேளைகளில் இவளது இயற்கைப் பெயரையும் காரணப்பெயரையும் ஒருங்கு சேர்த்துப் 'பத்திரா குண்டலகேசி' என்றும் சொல்வதுண்டு.

ஜைன மதத்திற் சேர்ந்த குண்டலகேசி ஜைனர்களிடம் சமய சாத்திரங்களையும் தர்க்க நூல்களையும் கற்றுத்தேர்ந்து, சமயவாதம் செய்யப் புறப்பட்டு, சென்ற விடமெங்கும் நாவல் நட்டு, வாதப்போர் செய்து வெற்றி கொண்டு வாழ்ந்தாள். (வாதப்போர் செய்வோர் நாவல் மரக்கிளையை ஊர் நடுவில் நட்டு வாதுக்கழைப்பது அக்கால வழக்கம்.) இவ்வாறு நிகழுங்கால், ஒருநாள் ஓர் ஊரையடைந்து, அவ்வூர் நடுவில் மணலைக் குவித்து நாவல் மரக் கிளையை நட்டு, உணவு பெறுவதற்காக வீடுதோறும் பிச்சைக்குச் சென்றாள். அவ்வமயம் புத்தர் தமது சீடர்களுடன் அவ்வூர்க்கருகிலிருந்த ஒரு தோட்டத்தில் வந்து தங்கினார். அவருடைய சீடர்களில் சாரிபுத்தர் என்பவர் உணவுக்காக அவ்வூர்க்குட் சென்றார். சென்றவர் அங்கு நாவல் நட்டிருப்பதைக் கண்ணுற்று, அதன் காரணத்தை அங்கிருந்தவர்களால் அறிந்து, அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அக் கிளையினைப் பிடுங்கி எறியும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

பின்னர், உணவுகொள்ளச் சென்ற குண்டலகேசி மீண்டும் திரும்பிவந்தபோது, தான் நட்ட நாவல் மரக்கிளை வீழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என்பதனை யறிந்து, அவ்வூர்ப் பெரியோரை அழைத்து, அவை கூட்டச் செய்து, சாரி புத்தருடன் வாதம் செய்யத் தொடங்கினாள். நெடுநேரம் நடைபெற்ற வாதத்தில் குண்டலகேசி வினாவிய வினாக்களுக்கெல்லாம் சாரிபுத்தர் விடையளித்தார். பின்னர், சாரிபுத்தர் வினாவிய வினாவுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றதாகச் சொல்லி, அவர் காலில் விழுந்து வணங்கி, அவரை அடைக்கலம் புகுந்தாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் பார்த்து, " என்னிடம் அடைக்கலம் புகாதே; என் குரு புத்த பகவானிடம் அடைக்கலம் புகுவாயாக." என்று சொல்லி, அவளை அழைத்துச் சென்று, அவளைப் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதுவே குண்டலகேசி என்னும் தேரியின் வரலாறு.

இந்தக் குண்டலகேசி பௌத்தமதத்தைச் சேர்ந்த பிறகு சமயவாதம் செய்யப் புறப்பட்டு, ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைத் தருக்க முறையாகக் கண்டிப்பதாக இயற்றப்பட்டது தான் குண்டலகேசி காப்பியம் என்பது. இந்தக் குண்டலகேசி நூலுக்கு விடையிறுத்து, ஜைன மதக் கொள்கையை நாட்ட இயற்றப்பட்டது நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி இயற்றப்படாமலிருந்தால் நீலகேசியும் இயற்றப்பட்டிராது. இப்போது நீலகேசி நூல் அழியாமல் இருக்க, குண்டலகேசியோ மறைந்துவிட்டது. இது சமயப் பொறாமையின் விளைவு. சமயப் பகை தமிழ்நாட்டில் பெருந்தீங்கு விளைத்திருக்கின்றது. நினைத்தால் மனம் பதறுகின்றது. குண்டலகேசியை இழந்துவிட்டது தமிழ் இலக்கியத்துக்குப் பெருங்குறையே. ஏனென்றால், தமிழ்நாட்டின் பழக்கவழக்கங்கள், சரித்திரக் குறிப்புகள், அக்காலத்திலிருந்த சமயங்கள், அவற்றின் கொள்கைகள் இவற்றையும், அக்காலத்தில் தமிழ்நாட்டுப் பௌத்தமதக் கொள்கைகளையும், அம் மதத்தின் நிலைமையையும் தெரிவிக்கக் கூடிய ஒரு நூலை நாம் இழந்துவிட்டோம். இந்த நூல் இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை.

குண்டலகேசி மறைந்துவிட்டது. ஆயினும், பல நூல்களினின்றும் தொகுக்கப்பட்ட 'புறத்திரட்டு' என்னும் நூலில் குண்டலகேசிச் செய்யுட்கள் காணப்படுகின்றன. அன்றியும், தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை என்னும் இவற்றில் குண்டலகேசிச் செய்யுள்கள் சில மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. செய்யுள் நடைமாதரிக்காக, அவற்றுட் சிலவற்றைக் கீழே தருகின்றோம்:


கடவுள் வாழ்த்து


"முன்றான் பெருமைக்க ணின்றான் முடிவெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா
னன்றே யிறைவ னவன்றாள் சரணங்க ளன்றே."


அவையடக்கம்



"நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்ககில்லார்
தீக்குற்ற காதலுடையார் புகைத்தீமை யோரார்
போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறுவேற்கென்
வாய்க்குற்ற சொல்லின் வழுவும்வழு வல்லவன்றே."

"எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல்
தினைப் பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவுமாகி
நுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ."

"வகையெழிற் றோள்க ளென்று மணிநிறக் குஞ்சியென்றும்
புகழெழ விகற்பிக் கின்ற பொருளில்லா மத்தை மற்றோர்
தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயர்ந் துடைத்து மென்பார்
அகையழ லழுவந் தன்னை நெய்யினா லவிக்க லாமோ."

"அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக்
கனவினை யுவர்ப்பு நீராற் கடையற வலித்து மென்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மென்று நிற்பார்
புனவினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார்."

"பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங்
காளையர் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும்
மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி
நாளுநாட் சாகின் றோமால் நமக்குநா மழாத தென்னோ."


4. சித்தாந்தத் தொகை

இஃது, இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. இது பௌத்தமதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனத் தெரிகின்றது. இதனை இயற்றியவர் இன்னார் என்பதும், ஒருவரா பலரா என்பதும் தெரியவில்லை. இயற்றப்பட்ட காலமும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் என்னும் சைவசமய நூலுக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரையில் பரபக்கம் சௌத்திராந்திகன் மதம் 2.3.1 பாட்டுகளின் உரை கீழ்கண்ட செய்யுளை இந்நூலிருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றார்:


'அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப்
பொருண் முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்றன்
அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார்
மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ.'


'மருடரு மனம் வாய் மெய்யிற் கொலைமுதல் வினைப்பத்தாமே என்பது சித்தாந்தத் தொகை' என்று நீலகேசி, புத்தவாதச் சருக்கம் 64 ஆம் பாட்டுரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர இந்நூற் செய்யுள்கள் வேறொன்றும் கிடைக்கவில்லை.

5. திருப்பதிகம்

இதுவும் இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. இந்நூல் ஆசிரியர் யாவர், இந்நூல் எத்தனைப் பாக்களைக் கொண்டது என்னும் செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை. இந்நூலின் பெயரைக்கொண்டு இது புத்தர்மீது இயற்றப்பட்ட தோத்திரநூல் என்று கருத இடமுண்டாகிறது. சிவஞான சித்தியார் (பரபக்கம் சௌத்திராந்திகன் மதம், 2ஆம் செய்யுள், மறுதலை, 8 ஆம் செய்யுள்) உரையில் ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள்காட்டி 'இது திருப்பதிகம் எனக் கொள்க' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.


'எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழன்று
எண்ணிகந்த காலங்க ளிருடீர வொருங்குணர்ந்தும்
எண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி
எண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ.'


நீலகேசி உரையாசிரியர் கடவுள் வாழ்த்து உரையில் மேலே காட்டிய செய்யுளையும், கீழ்க்கண்ட செய்யுளையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், இச் செய்யுள்கள் இந்நூலிருந்து எடுக்கப்பட்டன என அவர் குறிப்பிடவில்லை. ஆயினும், அவர் காட்டிய கீழ்கண்ட செய்யுளும் இந்த நூலைச் சேர்ந்ததுதான் என்பதில் ஐயமில்லை.


'என்றுதா னுலகுய்யக் கோளெண்ணினா னதுமுதலாச்
சென்றிரந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக்க
டுன்றினன் பிறக்குந னுளனாயின் மாமேருக்
குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ.'


6. விம்பசார கதை

இந்தப் பெயர்கொண்ட பௌத்தநூல் ஒன்றிருந்த தென்பது நீலகேசி உரையினால் (190 ஆவது பாட்டுரை) அறியப்படும். நீலகேசி உரையாசிரியர் விம்பசார கதையிலிருந்த நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, 'இது விம்பசார கதை என்னும் காவியம்; பௌத்தருடைய நூல்; அதன்கட் கண்டு கொள்க' என்று எழுதியிருக்கின்றார். சிவஞான சித்தியார் என்னும் நூலுக்கு உரையெழுதிய ஞானபிரகாசர் (பர: சௌத்தி: மறுதலை. 5 ஆம் செய்யுளுரை) நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய அதே நான்கடிகளை மேற்கோள் காட்டி, விம்பசார கதையைப்பற்றி அவர் எழுதியவற்றை அவ்வாறே எழுதியிருக்கிறார்.

விம்பசார கதை என்னும் இந்தக் காப்பியம் எத்தனை செய்யுள்களையுடையது, எத்தனை அதிகாரங்களையுடையது, இதனை இயற்றியவர் யாவர் என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும், அவருக்குப் பலவிதத்திலும் தொண்டுசெய்து அவரை ஆதரித்துவந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றினைக் கூறுவது இக் காப்பியம் என்று கருதக்கிடக்கின்றது. விம்பசாரனது வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.

விம்பசாரன் அல்லது பிம்பிசாரன் என்னும் அரசன் இராசகிருகம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு மகதநாட்டை (கி.மு. 542 முதல் 490 வரையில்) அரசாண்டான். அக்காலத்தில் இல்லறவாழ்க்கையைத் துறந்து, துன்பத்தை நீக்கும் வழியைக் காண்பதற்காகச் செல்லும் சித்தார்த்தர் (புத்தர்), இராசகிருக நகரத்திற்குச் சென்றபோது அவரைக்கண்ட விம்பசார அரசன் அவரை அழைத்துச் தன் இராச்சியத்தில் சரிபாதியை அவருக்குக் கொடுப்பதாகக் கூறினான். சித்தார்த்தர், தாம் செல்லும் நோக்கத்தைத் தெரிவிக்க, அவன் அவரது நோக்கம் நிறைவேறிய பிறகு தன்னிடம் வந்து தனக்கு உபதேசம் செய்யவேண்டும் என்று இரந்து வேண்டினான். சித்தார்த்தர் அதற்கு உடன்பட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர், சித்தார்த்தர் புத்தரான பிறகு விம்பசாரனுக்குத் தாம் வாக்களித்ததை நினைத்து, தம் சீடர்களுடன் இராசகிருகத்தின் அருகில் சுபதித்த சேதியத்தில் வந்து தங்கினார். இதனை யறிந்த அரசன் தனது சுற்றத்தாருடன் சென்று புத்தரை வணங்க, அவர் அவர்களுக்கு உபதேசம் செய்தார். அன்று முதல் அரசன் பௌத்த மதத்தை மேற்கொண்டான். அடுத்த நாள் அரசன் புத்தரையும் அவருடைய சீடர்களையும் அரண்மனைக்கழைத்து அவர்களுக்கு விருந்தளித்த பின்னர், அவர்கள் தங்குவதற்கு 'வெளுவனம்' என்னும் தோட்டத்தைப் புத்தருக்குத் தானமாக் கொடுத்தான். அன்றியும், அவன் இறக்கும்வரையில் புத்தருக்கும் அவரது சங்கத்தாருக்கும் பற்பல உதவிகளையும் தொண்டுகளையும் செய்துவந்தான்.

இந்த அரசனுக்கு அஜாத சத்ரு என்னும் மகன் ஒருவன் இருந்தான். இவன் பிறந்தபோது இவனால் அரசனுக்கு மரணம் நேரிடும் என்று நிமித்திகர் கூறினார்.

கௌதம புத்தருக்கு மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தேவதத்தன். அவன் புத்தரின் தாய் வழி மாமனின் மகன். இந்தத் தேவதத்தன், புத்தர் உலகத்தாரால் போற்றிப் புகழப்படுவதைக் கண்டு அவர் மேல் பொறாமை கொண்டான். பௌத்த சங்கத்தின் தலைவராக வீற்றிருக்கும் புத்தரை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய அவாக் கொண்டான். ஆனால், புத்தரும் விம்பசார அரசனும் உயிரோடுள்ள வரையில் தனது விருப்பம் நிறைவேறாதெனக் கண்டு, அவர்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்.

தேவதத்தன் சில சித்திகள் கைவரப்பெற்றவனாகலின், அவன் அரசன் மகன் அஜாத சத்துருவிடம் சென்று, அவன் அஞ்சும்படி சில சித்திகளைச் செய்து அவனைத் தன் வசப்படுத்தி, அரசனைக் கொன்று அரசைக் கைப்பற்றிக் கொள்ளுமாறும், புத்தரைக் கொன்று பௌத்த சங்கத் தலைமைப் பதவியைத் தனக்களிக்குமாறும் அவனுக்குக் கூறினான். இவன் சித்திகளைக் கண்டு இவனிடம் அச்சமும் மதிப்புங்கொண்ட அரசகுமாரன் இவன் கற்பித்த தீச்செயல்களைச் செய்ய உடன்பட்டான்.

தேவதத்தன், அரச குமாரன் உதவியால் சில வில் வீரர்களை ஆங்காங்கேயிருக்கச் செய்து, புத்தர் வழியே செல்லும்போது அவரை அம்பெய்து கொல்லுமாறு ஏவினான். புத்தர் வீதி வழியே சென்றபோது, வில்வீரர்கள் அவர்மேல் அம்பெய்ய முடியாதவர்களாகி விறைத்து நின்றனர். பின்னர், அவர்கள் புத்தரிடம் வந்து அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றனர். தனது நோக்கம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், தானே புத்தரைக் கொல்ல முடிவுசெய்து, அவர் பாதை வழியே செல்லும்போது பெரும்பாறைகளை மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்யவில்லையாயினும் காலில் சிறிது காயத்தை உண்டாக்கின. இதனையறிந்த அவருடைய சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், 'ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது', என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன், அரசகுமாரன் உதவியால், 'நளாகிரி' என்றும் 'தனபாலன்' என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும்போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்வியானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.

இவ்வாறு தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு, அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனையறிந்த அரசன் தன் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப் பதவியினின்றும் விலகிக்கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக்கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்டமில்லாத 'பொதியறை' யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக் கூடாதென்றும், ஒருவரும் அரசனுக்கு உணவு கொடுக்கக் கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவன் மனைவி அவனைக் காணச் செல்லும் போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக்கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக்கொண்டு போனாள். இதுவுங் கண்டறியப்பட்டபோது, அந்த அரசி நீராடித் தன் உடம்பில் 'சாதுர் மதுரம்' என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்ககூடாதென்று தடுக்கப்பட்டது. விம்பசாரன் மனம் கவலாமல் பொதியறையாகிய அச் சிறையில் உலாவிக் கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர் வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக் கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும், அவ்வூழியர் அவ்வாறே செய்தனர். இக்கொடுமையால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கப் பொறாமல், விம்பசாரன் சிறைச் சாலையில் உயிர் நீத்தான்.

விம்பசாரன் உயிர் துறந்த அதே நாளில், அஜாத சத்துருவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையிடத்தில் தந்தைக்கு உண்டாகும் அன்புணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. தன்னையும் தன் தந்தை இப்படித்தானே நேசித்திருப்பான் என்று அவன் கருதி, அவன் தன் தாயிடம் சென்று இதைப்பற்றி வினவினான். அஜாத சத்துரு பிறந்தது முதல் விம்பசார அரசன் எவ்வாறு அவனை அன்பாக நேசித்தான் என்பதனையும் எவ்வாறு கண்ணுக்குக் கண்ணாயும் உயிருக்குயிராயும் போற்றிக் காப்பாற்றினான் என்பதையும் அவள் அவனுக்கு விளக்கிச் சொன்னாள். இவற்றையெல்லாங் கேட்ட அஜாத சத்துரு தான் தன் தந்தையாகிய விம்பசார அரசனைக்கொடுமையாய்ச் சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து வருந்தினான்.
இவ்வரலாற்றினைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த விம்பசார கதை என்னும் காப்பியம் எனத் தோன்றுகின்றது. இஃது இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை. இந்தக் காப்பியத்தினின்று கிடைத்திருப்பன நான்கு அடிகள் மட்டுமே. அவை பின் வருவன:


'உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்
ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்
ஈன்றோன் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்.'


இச்செய்யுள் நடையை நோக்கும்போது, இந்தக் காப்பியம் மணிமேகலையைப் போன்று ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது.


மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

எழுதியவர் : (31-May-17, 7:04 pm)
பார்வை : 1121

மேலே