சாரதியர் கவனத்திற்கு

*************************
உயிருக்கு உலைவைக்கும் வண்ணம்
உருளுகின்ற சக்கரத்தின் எண்ணம்
கயிறின்றித் தூக்கிலிட்டுக்
காவுகொளும் கோரங்கள்
துயிலாமைக் குள்வீழும் கண்ணும்
*
கவனங்கள் சிதறுகின்ற வேளை
காலனவன் காட்டுவன்தன் வேலை
எவனுக்கும் அஞ்சாதார்
எமனுக்கு அஞ்சியேனும்
தவமாகச் செலுத்துவரோ நாளை
*
வாகனங்கள் செலுத்துகின்ற பேர்தான்
வாழ்க்கையையும் செலுத்துகின்ற பேர்தான்
ஆகமொத்தம் உயிரிங்கு
அனைவருக்கு மொன்றாகும்
சாகசங்கள் செய்யாதீர் நீர்தான்
*
விபத்துக்கள் உண்டாக்க வென்றே
விபரீத விளையாட்டுக் கொண்டே
அபகீர்த்தி ஏற்படுத்தி
அபலைகளும் உருவாக்கிச்
சுபமற்ற முடிவாக்கல் நன்றோ?
*
சாரதியின் பத்திரத்தை வாங்கி
சாலைகளின் விதிமீறித் தூங்கி
பாரமெனும் குடும்பத்தைப்
பார்க்கின்றப் பேர்கொன்று
ஈரமின்றி வதைப்பதுவே தீங்கு
*
சிந்தித்துச் செயலாற்ற மறந்து
சிரமேற்றப் பொதுநலனைத் துறந்து
நிந்திக்கும் வகையினிலே
நிகழ்த்துகின்ற விபத்தொன்றைச்
சந்தித்தப் பேர்க்கேது மருந்து
*
பொதுமக்கள் விபத்தாலே மாண்டும்
புரியாமல் மென்மேலும் சீண்டும்
மதுபோதை சாரதியர்
மனமாற்றம் கொள்ளாமல்
புதுப்பாதை இங்கேது மீண்டும்
*
விபத்துகள் உருவாக்கத் தூண்டும்
விபரமிலாச் சாரதியால் மாண்டார்
அபராதம் விதித்தாலும்
அயராமல் பிழைசெய்யும்
சுபமற்ற நிலையினியும் வேண்டாம்
*
மாண்டாரதம் குடும்பத்தார் கண்டே
மனிதாபி மானமது கொண்டே
தாண்டாமை கடைப்பிடித்து
தக்கபடி உயிர்காக்கும்
ஆண்டவனாய் உம்கடமை உண்டே
*
தன்னுயிர்போல் பிறவுயிரு மென்று
தான்நினைத்து வீதிகளில் சென்று
உன்மனைவி உயிர்மக்கள்
ஒவ்வொருவர் முகங்கண்டும்
இன்முகமாய் செலுத்துவதே நன்று
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Jan-25, 1:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 12

மேலே