இப்படியும் ஓர் அழகி எந்தன் காதலி
செந்தாமரை முகத்தாளே
அத்தாமரையில் மொய்க்கும்
இரு கருவண்டுகள் ஒப்ப
மயக்கும் விழிகள் கொண்டவளே
உன்னைப் பார்த்தேன் உன் அழகில்
என்னை மறந்தேன் - இவள் என்ன
காமனுலகிலிருந்து மண்ணிற்கு
வந்த மோகினியோ தேவதையோ
என்று நெஞ்சம் கிளு கிளுக்க
உன்னை மீண்டும் ஒருமுறை
பார்த்தேன் முடிமுதல் கால் வரை
உந்தன் மான்விழி கண்களின்
இமைகள் இரண்டும் இமைத்தன
காதல் மொழிகள் தாங்கிவந்தன
உந்தன் சிவந்த மலர் பாதங்கள்
மண்ணில் தோய்ந்திருக்க நீயோ
என்னைப் பார்த்த வெட்கத்தில் நாணி-உன்
வலது பாதத்தால் ஏதோ கோலங்கள்
மண்ணில் வரைந்து நின்றாய் -நீ
உந்தன் கார்முகில் கூந்தலை
சீவி முடித்து சிங்காரித்து அதில்
நான் விரும்பும் மல்லிகைப்பூ
சரத்தை அழகுபொங்க சூடினாய்
இப்போது மாலைப்பொழுது காலையில்
நீ சூடிய மல்லிகை மாற்றம் கொண்டது
சற்றே வாட தொடங்கியது -இப்போது
உன் இமைகள் அசைந்தமையும்
கால்கள் மண்ணில் படிந்தமையும் நீ
சூடிய பூ விடுவதும் தெளிவாக்கின
அழகியே நீ காமன் உலகு தேவதை அல்ல
இம்மண்ணுலகு நங்கைதான் பேரழகிதான் என்று
மீண்டும் உனைப்பார்த்தேன் மகிழ்ந்தேன்
நீயும் என்னைப் பார்த்தாய் உன் கண்கள்
உன் பதிலை சொல்லாமல் சொல்லிவிட
நமக்குள் காதல் கதிரவன் உதித்துவிட்டான்
இனியென்ன தயக்கம் பெண்ணே
இனிதே தொடர்வோம் நம் காதல் பயணம்
திருமணத்தில் பயணம் முடிந்திட .

