உங்களால் நாதஸ்அ ஒத்து ஊத முடியுமா

பிறந்த நாள் பார்ட்டிகளில் பத்து பலூன்கள் ஊதவே, முழி பிதுங்குது! நாதசுரத்தில் அவ்வளவு நேரம் காற்றை விட்டு எப்படித் தான் ஊதுகிறார்களோ? அதுவும் அவ்வளவு வாசித்தும், கடைசியில் மக்கள் கண்டு கொள்ளவே இல்லை என்றால்?
இருந்தும் நமக்கு மங்கலம் தங்குவதற்காகவே வாசிக்கும் அனைத்து நாதசுரக் கலைஞர்களுக்கும் நமது வந்தனங்கள்!

இசை குறித்த வலைப்பூ என்பதால் மங்கல இசையான, நாதசுரத்தில் இருந்தே தொடங்குவோம்! சென்ற பதிவில் திராச ஐயா, ஷேக் சின்ன மெளலானா அவர்களின் வாத்திய இசையைத் தந்திருந்தார்!

"நாதஸ்" என்று செல்லமாக அழைக்கப்பட்டது ஒரு திரைப்படத்தில்.
நாதஸ்வரம் "நாதஸ்" ஆனால், தவில் என்ன ஆகும்? :-)
இதிலிருந்தே தெரியவில்லையா, தவிலை அவ்வளவு சீக்கிரம் யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என்று! :-)

மற்ற பல வாத்தியம், இசைக் கருவிகளை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் நாதசுரமும், தவிலும் மட்டும், எப்போதும் மங்கல இசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்!
இது ஒன்றே போதும், இவ்விரு கருவிகளின் பெருமையைச் சொல்ல!

நாதசுரம் என்றால் என்ன? ஒத்து ஊதுதல்-ன்னா என்ன?
நான் சொல்வதைக் காட்டிலும், கீழே வீடியோவைப் பாருங்க!
மெளலியின் பிளைட்-172 என்ற நாடகம். அதில் என்னமாய் விளையாட்டா விளக்கறார் பாருங்க! :-)




நாதசுரத்தின் பலமே, இப்போது அதற்குப் பலவீனம்! - என்ன தெரியுமா?

1. இட நெருக்கடி அதிகமாகி வரும் இந்தக் காலத்தில், இதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் வாசிக்க முடியாது.
ஒலி பெருக்கி இல்லாமலேயே அரங்கத்தின் கோடியில் உள்ளவரும் கேட்கக் கூடிய வாத்தியம் இது.
இதுவே அதன் பலவீனமாகிப் போய் விட்டது இப்போது.
ஒரு சின்ன அறைக்குள் வாசித்தால், அவ்வளவு தான்! வந்தது வினை!
உடனே Noise Pollution என்று யாருச்சும் வழக்கு போட்டாலும் போட்டு விடுவார்கள்!

2. இதன் பயிற்சி மிகவும் கடினமானது. தனிமையில் கூடப் பயில முடியாது. சத்தமே ஊரைக் கூட்டி விடும். தப்பும் தவறுமாக பயிற்சியில் வாசித்தாலும், ஊருக்கே தெரிந்து விடும்! :-(

3. இது போதாதென்று பயிலும் மாணவ/மாணவிகள் விடும் மூச்சுக் காற்றை எண்ணிப் பாருங்கள்!
தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் சொல்வது போல், நாபிக் கமலத்தில் (தொப்புள்) இருந்து காற்றை இழுத்து, மேலே ஏற்றி, இழுத்துப் பிடித்து, ஊத வேண்டும். பல நாயனக்காரர்களின் கழுத்தைப் பாருங்கள். வீங்கி இருக்கும்!


நாதசுரத்துக்குப் போட்டியாக அண்மைக் காலங்களில் வந்தவை இரண்டு வாத்தியங்கள்
1. க்ளாரினெட்
2. சாக்ஸ் என்னும் சாக்ஸபோன்
இருப்பினும் மங்கல இசை என்ற இடத்தை, அவற்றால் இன்னும் பிடிக்க முடியவில்லை!
3. இன்னொரு வாத்தியம் - முகவீணை என்று பெயர். இது உருவில் சிறிய, குட்டி நாதசுரம்.

நாதசுரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதா?
இல்லை ஆந்திரா, கர்னாடகம், இன்னும் கேரளத்தில் கூட வாசிக்கிறார்கள்!உலகில் தமிழர் இருக்கும் இடமெல்லாம் வாசிக்கிறார்கள்.

கோவில், கல்யாணம் - இதற்கு மட்டுமே நாதசுரம் என்று இருந்த நிலை மாறிவிட்டது! பல கச்சேரிகளில் வாசிப்பு காண முடிகிறது!
இந்தக் காலத் திரைப்படங்களில் கூட, இசை அமைப்பாளர்கள், இதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
பழனியில் தமிழக அரசின், ஒரு நாதசுரக் கல்லூரியே உள்ளது.
இன்னும் கீபோர்டில், நாதசுரம் வரவில்லை. அவ்வளவு தான்! :-)

நான் இந்த முறை சென்னை சென்றிருந்த போது, ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தின் நண்பர் ஒருவர், ஒரு குட்டி எலெக்ட்ரானிக் (மின்னணு) கருவியைக் காண்பித்தார். பார்ப்பதற்கு ஏதோ பொம்மைக் கப்&சாசர் போல் இருந்தது. அதை எடுத்து நாதசுரத்தின் அடிப்பாகத்தில் பொருத்தினார் மனுசன்.

இப்ப ஊதினா, ஏதோ புல்லாங்குழல் ஊதுவது போல் மெல்லிதாய் வருகிறது நாத சப்தம்! ஆகா...அறிவியல் முன்னேற்றங்களை இது போன்று தொன்மையான இசை வளரப் பயன்படுத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! முயற்சிகள் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வருவதாகச் சொன்னர் நண்பர்!


ஒரு காலத்தில், நாதசுரம்-தவில், சாதியின் பாற்பட்டும் இருந்தது.
சமூகத்தில் அதன் இசைக்கு மயங்கியவர்கள், அதனை இசைக்கும் கலைஞர்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருந்தார்கள்.
ஆனால் இந்தப் போக்கை வெட்டி வீழ்த்தி, நாதசுரக் கலைஞன் ஒரு ராஜாவைப் போல் உலா வர முடியும், அவனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்
TN ராஜரத்தினம் பிள்ளை.






அவரைப் போலவே நாதசுர இசையில் பெரும் புகழ் அடைந்தவர்கள் வெகு சிலரே! காருக்குறிச்சி அருணாச்சலம் இன்னொரு பெரும் மேதை.
இசுலாமிய மதத்தினரான ஷேக் சின்ன மெளலானா, இதைக் கற்க மிகவும் பாடுபட்டார். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு இடையூறுகளோ, அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றிகள்! இப்படி மதங்களை கடந்தது நாதசுர இசை!

பெண்களால், இப்படி "தம்" பிடித்து ஊத முடியுமா?
சேலும் பொன்னுத்தாயி செய்து காட்டினார். உலகமே வியந்தது!

நாதசுரம்-தவில் காம்பினேஷன் களை கட்டத் தொடங்கியது!
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்-வலையப்பட்டி சுப்ரமணியம்,

MPN சேதுராமன்-பொன்னுசாமி,

AKC நடராஜன்,

ஹரித்வாரமங்கலம் பழனிவேல்,

திருவிழா ஜெய்சங்கர்,

மாம்பலம் சிவா என்று கலைஞர்கள் எல்லாம் புகழ் பெறத் துவங்கினார்கள்!
இலங்கை மற்றும் சிங்கையிலும் பெரும் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பெயர்களையும் சொல்லி உதவுங்களேன்!




தில்லானா மோகனாம்பாள் திரைப்படம், மக்களிடையே நாதசுரத்திற்கு ஒரு sensation-ஐ உருவாக்கித் தந்தது. நாதசுரக் கலைஞர்கள் மற்ற எந்தக் கலைஞர்களுக்கும் குறைவானவர்கள் அல்ல என்ற ஒரு நல்ல நிலை உருவாகவும் தொடங்கியது.

சரி, முக்கியமான ஒரு கேள்விக்கு வருவோம்!
நம்மில் எத்தனை பேர், கல்யாணத்துக்குப் போனால், இந்த நாதசுர இசையைக் காது கொடுத்துக் கேட்போம்?

இப்போதெல்லாம் நல்ல சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிக்கிறார்கள். அப்போது கூட நாம் காது கொடுத்துக் கேட்கிறோமா?
சரி, இனி மேலாவது கேட்க, முயற்சி செய்யலாமா?
வாசிப்பு நன்றாக இருந்தால், ஒரு எட்டு போய், "நல்லா வாசிச்சீங்க" என்று சொல்லி விட்டு வரலாமா?

அண்மையில் சென்னையில், நாதசுரத்துக்கு என்றே தனி விழா ஒன்று நடைபெற்றது! ஈழத்து நாதசுரக் கலைஞர் முருகதாஸ் என்பவர், இதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.

எழுதியவர் : (6-Jun-17, 3:06 pm)
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே