கவிதைத் துளிகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா சிவானந்தம் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கவிதைத் துளிகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. சிவானந்தம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
41F2, பழனியாண்டவர் கோயில் தெரு, கோவில்பட்டி – 628 501.
பேச : 94866 08131 பக்கம் : 40, விலை : ரூ. 30.
*******
‘கவித்துளிகள்’ என்ற ஹைக்கூ கவிதை நூல் சிந்தனைத் துளிகள். நூலிற்கு பேராசிரியர் க.கருத்தப்பாண்டி அவர்கள் தந்துள்ள அணிந்துரை அழகுரை. திரு. நம். சீனிவாசன் மதிப்புரை நன்று. நூலாசிரியர் கவிஞர் சிவானந்தம், கல்கி, பாக்யா, கவிதை உறவு, பொதிகை மின்னல் போன்ற இதழ்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இதழ்களில் ஏற்கனவே படித்து இருந்த போதும் மொத்தமாக நூலாகப் படிக்கும் போது சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்.
இன்றைக்கு நியாயமான வழக்குகள் கூட தோற்று விடுகின்றன. மனம் வேதனையடைகின்றனர். பலர் தீர்ப்பால் பாதிப்பும் அடைகின்றனர். குற்றம் இழைத்தவர்களும் விடுதலையாகி விடும் நிலையும் நாட்டில் நடந்து வருகின்றது. அவை பற்றிய விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ நன்று.
கண்ணகியின் வழக்கு
தள்ளுபடி – போதுமான
சாட்சியங்கள் இல்லை.
கேள்விப்பட்ட பழமொழிகளை, பொன்மொழிகளை வெட்டியும், ஒட்டியும் ஹைக்கூ வடிப்பது ஒரு யுத்தி. அந்த வகையில் அமைந்த ஹைக்கூ ஒன்று.
பசித்துப் புசி
பசிக்கிறது
புசிக்க?
சாதி ஒழிய வேண்டும் என்று உதடுகள் பேசினாலும் உள்ளத்தில் சாதியப்பற்றுடன் திகழும் பலரை நாம் இன்று நடைமுறையில் காண்கின்றோம். அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
காலையில் சமபந்தி விருந்து
மாலையில் தன் சாதி
மாநாடு.
காதலை கதையில் ரசிப்போம், திரைப்படத்தில் போற்றுவோம். ஆனால் நாம் விரும்பும் காதல், நமது சகோதரிக்கு காதல் வந்து விட்டால், எதிர்ப்பு அலை வீசுவோம். இந்த வாழ்வியல், உளவியல் எதார்த்தம் உணர்த்திடும் ஹைக்கூ.
காதலைப் போற்றுவோம்
காதலை வாழ்த்துவோம்
நம் வீட்டில் நுழையாத வரை.
நாட்டில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டைகள் வருகின்றன. எந்த ஒரு மதமும் வன்முறை போதிக்கவில்லை. வன்முறை போதித்தால் அது மதமே அன்று. அன்பே மதம் என்கிறோம். ஆனால் அன்பை மறந்து மோதி வீழ்வது முறையா?
மனிதநேயம் மலரும் போது
மதவேற்றுமைகள்
மரித்துப் போகும்!
காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை என்று சொல்லுமளவிற்கு பெரும்பாலான கவிஞர்கள் காதலைப் பாடி வருகின்றனர். நூல் ஆசிரியர் கவிஞர் சிவானந்தமும் காதலைப் பாடி உள்ளார்.
விழித்திருந்தால் உன் நினைவு
உறங்கினால்
உன் கனவு!
படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே கொண்டாட வேண்டும். பாராட்ட வேண்டும். உரிய மதிப்பை வழங்கிட வேண்டும். கேரளாவில் மதிப்பது போல தமிழகத்தில் படைப்பாளிகள் மதிக்கப்படவில்லை என்பது வருத்தமான உண்மை. பாரதியை இன்று உலகமே கொண்டாடுகின்றது. ஆனால் வாழும் காலத்தில் பாரதியை யாரும் மதிக்கவில்லை. பசியால் பல நாட்கள் வாடி உள்ளார். புலமையும், வறுமையும் சேர்ந்தே இருந்துள்ளது. அதனை உணர்த்தும் ஹைக்கூ நன்று.
ஐந்திற்கும் பத்திற்கும்
கஷ்டப்பட்ட பாரதிக்கு
இருபதாயிரத்தில் விழா!
இன்றைக்கு அரசியல் ஆடம்பர அரசியலாகி விட்டது. பணம் உள்ளவர்களுக்கே அரசியலில் இடம். சின்ன மீனைப் போட்டு தங்க மீனை எடுக்கும் தொழிலாகி விட்டது அரசியல். அன்று தொண்டு செய்திட அரசியலுக்கு வந்தனர். இன்று பணம் சுருட்டவே அரசியலுக்கு வருகின்றனர். அரசியலில் இனிவரும் காலம் நல்லவர்களுக்கு இடம் இல்லை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
கட்சியிலிருந்து
நீக்கப்பட்டார்
காந்தியவாதி!
மதுவை விடவும் மிகவும் கொடியது புகை பிடித்தல். நடிகர்களைப் பார்த்து புகை பிடிக்கும் பழக்கத்தை பழகி விட்டு, விடமுடியாமல் தொடர்ந்து புகை பிடித்து வாழ்நாளைக் குறைத்து வருகின்றனர் பலர்.
இருமிக் கொண்டே
பிடிக்கிறான்
பீடி!
நூலாசிரியர் கவிஞர் இரா. சிவானந்தம் அவர்கள் பிறர் எழுதிய ஹைக்கூ கவிதைகளையும் படிக்க வேண்டும். அவர்கள் போல எழுதாமல் மாறுபட்டு எழுத வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய ஹைக்கூ.
அமாவாசையன்று
நிலவு
எதிர் வீட்டு சன்னலில்!
கவிஞர் இரா. சிவானந்தம் எழுதிய ஹைக்கூ!
அமாவாசையில்
நிலவு
காதலி!
இரண்டும் ஒன்று போலவே இருப்பதை உணர முடியும். வருங்காலங்களில் இது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.
சென்னையில் மழையின் காரணமாக வெள்ளம் வந்து மக்கள் அடைந்த துன்பத்தை எளிதில் மறந்து விட முடியாது. அதற்குக் காரணம் ஏரி, குளங்கள் தூர் வாராதது மட்டுமல்ல. ஏரிகளின் மீதே அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டிய அவலமும் ஆகும். அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
ஏரியை ஆக்கிரமித்தவர்களை
ஆக்கிரமித்தது
வெள்ளம்!
பெற்ற தாய் தந்தையரை மதிக்கும் எண்ணம், இன்றைய இளைய தலைமுறைக்குக் குறைந்து வருகின்றது. நம் நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெருகி வருவது பெருமையல்ல அவமானம்.
நடு வீட்டில் நாய்!
முதியோர் இல்லத்தில்
தாய்!
மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். ஒன்று வந்ததும் மற்றொன்றை மறந்து விடுவது இயல்பு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
ஊழலை மறைத்தது
மற்றொரு
பெரிய ஊழல்!
நூலில் அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நன்று. பாராட்டுக்கள். பின் அட்டையில் உள்ள பாரதியை போற்றுவோம் கவிதை நன்று. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதி நூல்கள் படைக்க வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (6-Jun-17, 7:57 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே