அன்னைக்கோர் பரிசு

தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கும் மாமியரை விரட்ட நினைக்கும் மருமகள்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான்.

குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள்.

குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை.

அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் தனியாக குடியமர்த்தினான்.

குயவனின் மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் அடிக்கடி பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர தந்தை மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான்.

அதை அவன் அம்மாவிடம் கொண்டு கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள்.

தனக்கு மகன் முதலில் மண்பாண்டம் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.

தனது மகிழ்ச்சியில் மகனை பார்த்து இவ்வாறு கேட்டாள்: “மகனே! நீ செய்த தட்டு மிக அருமையா, அழகாயிருக்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் எத்தனையோ விதவிதமான பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?”

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா.! அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் ஆசையாய் முதலில் செய்து கொடுத்தேன்”

வாழ்க்கை ஒருவட்டம். இன்று நாம் பெற்றோர்க்கு செய்வதை நாளை பிள்ளைகள் நமக்கு செய்வார்கள்…இதுவே உண்மை!

முதியோர் அணைப்போம்..
முதியோர் இல்லம் அடைப்போம்.!

எழுதியவர் : முகநூல் (8-Jun-17, 4:52 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 330

மேலே