அவளென் காதலி

அவளும் மலரும் அழகில் ஒன்று
=அவளை மலராய் முகரும் வண்டு
பவளம் முத்து பளிங்கு என்று
=பார்க்கும் அனைத்தும் அவளில் உண்டு
தவழும் தென்றல் காற்றின் ஸ்பரிசம்
=தானும் அவளின் குணத்தில் உண்டு
அவலம் தீர்க்கும் அமுதம் பொழியும்
=அன்பு முகில்போல் அலைவ துண்டு
மொழிகள் இல்லாக் கவிதை தன்னை
=மொழியும் இமையின் மொட்டுக் குள்ளே
அழியா இன்பம் அனைத்தும் பதுக்கி
=அரங்கம் இன்றி ஆட வைப்பாள்
விழியின் வலையில் வழுக்கி விழுந்து
=விரக மீனாய் துடித்துக் கிடப்பாள்
சுழியுள் சிக்கும் சருகாய் நெஞ்சை
=சுழற்றி இழுக்கும் சுகத்தில் திளைப்பாள்
ஆசை கனலை அழகாய் மூட்டி
=அதிலே இளமை உருக வைப்பாள்
மீசைத் துடிக்க மிருது வாக
=மெல்லிய காற்றில் முத்தம் வைப்பாள்
பாசை இன்றிப் பழகிப் பேசி
=பக்குவ மாக உயிரைக் கொன்று
ஓசை இன்றி திருமணம் முடித்து
=ஓடிச் சென்ற அவளென் காதலி.
*மெய்யன் நடராஜ்