புரியாணி பக்கட்

உயர்ந்தோர் தாழ்ந்தோர் வாழும் அந்த நகரத்தில் குப்பைக்கு குறைவில்லை. உடைந்த பொருட்கள், பழைய சஞ்சிகைகள் . பத்திரிகைகள், கார்ட் போர்ட் மட்டைகள். பொம்மைகள் இப்படி பாவனைக்கு உதவாது என்று நிராகரிக்கப்பட்டவை நகரத்தின் ஒதுக்குபுறத்தில் தஞ்சம் அடையும் குப்பைகள் சேரும் இடம் அது. சேரிக்கு அருகாமையில் இருந்த படியால் சேரி வாழ் சிறுவர்களின் புதை பொருள் ஆராச்சிக்கு தினமும் உட்பட்ட இடம் அது. சிறுவர்களோடு பொட்டி போட்டுக் கொண்டு சொறி நாய்கள் , பறவைகளும் தமக்கு ஏதும்’ உணவு கிட்டாதா என வட்டமிடும் குப்பைக் குவியல்.

செல்வம் பதினெட்டு வயது சிறுவன். பெயருக்கு பொருத்தமான செல்வம் அவனுக்கு இல்லாவிட்ட்டாலும் சுய கௌரவம் உள்ள சிறுவன். கை நீட்டி பணம் சம்மா பிச்சை எடுக்காதவன். மற்றைய வசதியான சிறுவர்களை போல் படிக்கச் சந்தர்ப்பம் கிட்டாதவன். அனால் படித்து கொம்பியூட்டர் துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். புத்திசாலி.

செல்வம் பிறந்த வீட்டில் தாயை இழந்தவன். இரு சகோதரிகள். ஒரு அண்ணன். குடும்பத்தில் மூத்தவள் செல்வி. அடுத்தவள் லட்சுமி அதற்கு அடுத்தது முருகன். தந்தை வேலன் மூட்டை சுமக்கும் கூலி. செல்வத்தின் அண்ணன் முருகன் பல வீடுகளில் கூலி வேலை செய்பவன். செல்வத்கின் போக்கிட்கு எதிர்மாறானவன். செல்வியும் லட்சுமியும் பல வீடுகளில் வேலைக்காரிகளாக வேலை செய்து வாழ்பவர்கள். இவரில் ஒருவராவது பாடசாலைக்குச் சென்று படிக்க வசதி இல்லாதவர்கள். அவர்கள் பதினெட்டு வயதுக்கு மேல்பட்டவர்கள் என்பதால் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவாகி இருந்தது அடிகடி தேர்தலின் போது ஒரு வருமானத்தை அக் குடும்பத்துக்கு கொடுத்தது.

வேலன் குடும்பம் வாழ்வது குப்பை கூடத்துக்கு அருகே வரிசையாக உள்ள ஓலை குடிசைகளில் ஓன்று. அங்குள்ள இருபது குடிசைகளில் வாழ்பவர்கள் பாவனைக்கும் குளிப்பதுக்கும் தேவையான தண்ணீரை நம்பி வாழ்வது எதோ ஒரு அரசியல் வாதியின் உபயத்தால் தோன்றிய இரு தண்ணீர் பைப்புகள் மட்டுமே. அருகே அழுக்கு நீர் ஓடும் சிற்றாறு, குளிப்பதற்கும் உதவியது..

செல்வன் குப்பை மேட்டில் உள்ள பழைய பத்திரிகைகள், கார்ட் போர்ட் மட்டைகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் ஜாடிகள்; பால், ஐஸ் கிரீம், பிளாஸ்டிக் கொள்கலன்கள்; அலுமினியம், போன்ற மென்மையான பானம் கேன்கள் மற்றும் படலம் தட்டுகள் போன்ற; மற்றும்.எஃகு கேன்கள். அகியவற்றை பக்குவமாக சேகரித்து. மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைக்கு கொடுப்பதுண்டு.அதில் கிடைக்கும் வருமானத்தை சேமித்து ஒரு பாவித்த சைக்கில் வாங்கி வீடுகளுக்கு பாலும், பத்திரிகை கொடுக்கும் திட்டத்தை செயல் படுத்த சுமார் 2000 முதல் 2500 ரூபாய் வரை முதல் அவனுக்குத் தேவைப்பட்டது, அப்பணம் அவனிடம் இல்லை. தந்தையிடமோ அல்லது சகோதரங்களிடமோ பணம் கேட்க அவனது சுய கௌரவம் இடம் கொடுக்கவில்லை. உழைத்து சேமித்து வாங்குவதே அவன் முடிவு.

]நண்பன் ரூபன் தனது பத்திரிகை, சஞ்சிகை வீடுகளுக்கு போடும் அனுபவத்தை செல்வனுக்கு சொன்னான்.
“ செல்வா நான் சுமார் தினமும் 2௦௦ வீடுகளுக்கு பேப்பர் போடுவேன். சில வீடுகளுக்கு சஞ்சிகையும் சேர்த்து போடுவேன். எந்த வீடு என்று நினைவில் வைத்திருக்கவேண்டும். சில வீடுகளில் உள்ளவர்கள் லீவில் போவதால் அந்த லீவு நாட்களில் பேப்பர் போடா வேண்டாம் என்பார்கள். இதெல்லம் குறித்து வைத்து கொள்ளவேண்டும். அப்பார்ட்மன்ட் கட்டிடத்தில் பேப்பர் போடுவதனால் சில சமயம் லிப்ட் வேலை செய்யா விட்டால் பல படிகள் எறி இறங்க வேண்டி வரும். காலை 5 மணிக்கு வேலை ஆரம்பித்தால் 9 மணிக்கு பேப்பர் 200 வீடுகளுக்கு போட்டு முடித்து விடுவேன். ஒரு நாளைக்கு சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் காலை சாப்பாட்டுக்குப் பின் மற்ற வேலைகள் செய்யத் தொடங்குவேன்” என்றான் ரூபன்..
“ உனக்கு எவ்வளவு சம்பளம் மாதம் கிடைக்கும்’?

“ மாதம் கடைக்காரன் பத்திரிகை. அல்லது சஞ்சிகை விலையின் 25 விகிதம் தருவார். மாதம் சுமார் 1௦௦௦ ரூபாய் கிடைக்கும் ’

“ சைக்கில் உன்னுடையதா? செல்வன் கேட்டான்.

“ இல்லை பேப்பர் கடைக்காரனது. அதுக்கு வாடகை பணமாக சிறு தொகை தரும் கூலியில் கழிப்பான்”

“ எனக்கு அது விருப்பம் இல்லை. என் சொந்தத்தில் சைக்கில் வைத்திருக்க விருப்பம் எவ்வளவு விலை வரும் ரூபன்”?

“ புது சைக்கில் 4000 முதல் 4500 வரையும் பாவித்த சைக்கில் 2000 முதல் 2300 ரூபாய் மட்டில் வரும்.”

“ நான் உழைத்து’ சேமித்த காசு 1200 ரூபாய் இருக்கு இன்னும் சிறிது காலத்தில் பாவித்த சைக்கில் வாங்க சேர்த்து விடுவேன். அப்போ என்னை உன் பேப்பர் கடைக்காரருக்கு அறிமுகப் படுத்துவியா”?

“ஏன் செல்வா உன் சகோதரங்க்ளிடமோ அல்லது உன் அப்பாவிடமோ சைக்கில் வாங்க மிகுதிப் பணத்தைக் கடனாக தரும் படி கேட்டுப்பாரேன்”

“ எனக்கு மற்றவர்களிடம் கடன் கேட்பது பிடியாது” செல்வா தன் சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் பதில் சொன்னான்.

*******

தந்தை வேலன் அறிமுக படுத்திய ஹனீபா முதலாளியின் சாப்பாட்டுக் கடையில் வாடிக்கையாளர்கள் உணவு உண்டபின் விட்டுச் செல்லும் பிளேட்டுகளையும் சமையல் அறை பாத்திரங்களையும் கழுவுவதும், கடையில் சேரும் குப்பையை சுத்தப் படுத்தவதும் அவனது மிகுதி நேர வேலையாகும். ஹனீபா முதலாளியின் புஹாரி ரெஸ்டுரன்ட் புரியாணியுக்கு பிரபல்யமானது. வெகு தூரத்தில் இருந்து புஹாரிக்கு புரியாணி சாப்பிட வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஒரு பக்கெட் புஹாரி மட்டன் புரியாணியின் விலை 200 ரூபாய். புரியாணியின் மணம் மூக்கை துளைக்கும். அதோடு காரமான சட்னியும் ஒரு அவித்த முட்டையும் கொடுப்பார்கள். செல்வனுக்கு வேலை முடிந்து வீட்டுக்கு’போகும் போது ஒரு பக்கெட் வங்கிக் கொண்டு போக வேண்டும் போல் இருக்கும். அனால் அதன் விலை, அவனுக்கு ஒரு நாளைக்கு ஹனீபா முதலாளி கொடுக்கும் சம்பளத்துக்கு கட்டுப்படியாகாது. மற்றவர்கள் ரசித்து சாப்பிடுவதை பார்த்து பெரு மூச்சு விட்டுச் செல்வன் போவான்.
******
திடீரென செல்வன் வாழும் தொகுதியின் மாநில சட்டமன்ற உறுப்பினர் இறந்ததால் இடைத் தேர்தல் வந்தது. தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு ஒரே குசி. வேலை செய்யாமல் வருமாமனம் வரும். சில சமயம் அரை போத்தல் சாராயமும், ஒரு பக்கெட் புரியாணியும் இலவசமாக கிடைக்கும். அதோடு குறைந்தது 2000 ரூபாய் பணம் ஒரு வாக்காளருக்கு கிடைக்கும். வேலன் குடும்பத்தில் 5 வாக்குகள் இருப்பதால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய் போட்டி இடும் கட்சி தரலாம். “எங்கள் வீட்டு ஓலை கூரையை தகரத்துக்கு மாற்றி விடலாம் அதோடு மூட்டைகள் ஏற்றி கொண்டு போக நீ ஒரு தள்ளு வண்டியும் வாங்கிவிடலாம் அப்பா” முருகன் கணக்குப் போட்டு தந்தைக்குச் சொன்னான்.

“சீ இதுவும் இரு பிழைப்பா அண்ணா?. அரசியல்வாதிகளின் புரியாணி பக்கட்டையும் தரும் காசையுமா நாம் நம்பி வாழ்கிறோம். எமக்கு என்று சுய மரியாதை என்று உண்டு. எனக்கு அரசியல்வாதிகள் தரும்
லஞ்சம் வேண்டவே வேண்டாம்” செல்வன் விமர்சித்தான்.

“ என்னடா சொல்லுகிறாய். அவர்கள் தரும் பணத்தில் நீ பேப்பர் போட புது சைக்கில் வாங்கலாம். அது மட்டுமல்ல 200 கொடுத்து மட்டன் புரியாணி வாங்க யார் பணம் தருவினம்”? முருகன் சொன்னான்.

“அண்ணா எனக்கு அப்படி வரும் பணத்தில் சைக்கில் வாங்கவோ புரியாணி வாங்கவோ அவசியம் இல்லை” கோபத்தில் பதில் சொலிவிட்டு செல்வம் போய்விட்டான்
இந்த வாக்குவாதம் நடந்து ஒரு கிழமைக்குள் செல்வம் புஹாரி ஹோட்டல் புரியாணி பக்கட்டை பிரித்து ரசித்து உண்பதைக் கண்ட முருகன்

“ என்னடா செல்வம் . யார் உனக்கு விலை உயர்ந்த மட்டன் புரியாணி பக்கட்டைத் தந்தது”?

“ என்னுடைய ஹனீபா முதலாளி ரம்ளானுக்கு அவர் ஹோடேலில் வேலை செய்த ஆறு பெருக்கும் புரியாணி பக்கட்டும் 1000 ரூபாயும் பரிசாகத் தந்தவர் அண்ணா” என்றான் மகிழ்ச்சியோடு.

“ உண்மையாகவா’?
“ அவர் ஒரு நல்ல மனிதர். அரசியல்வாதிகள் போல் இல்லை. தொழிலாளிகளை மதிப்பவர். அதனால் தான் அவருக்கு பிஸ்னஸ் பிரமாதமாக நடக்குது அண்ணா” செல்வன் சொன்னான்.

******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் – கனடா) (13-Jun-17, 7:25 am)
பார்வை : 361

சிறந்த கவிதைகள்

மேலே