கண்ட நாள் முதலாய்-பகுதி-10

..........கண்ட நாள் முதலாய்..........

பகுதி : 10

பவி சொன்னது போலவே ஐந்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தாள்.கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவளுக்கு துளசி விறாந்தையிலேயே காத்திருப்பதை பார்த்ததும் அதிசயமாகிவிட்டது.."இன்னைக்கு மழைதான் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது.."

"ஏன்டி அனல் அடிச்சுகிட்டு இருக்கு,இதில உனக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுதா??"

"அது சரி,நீ இப்படி வழமைக்கு மாறா டான்னு டைமுக்கு வெளிக்கிட்டு நின்னா மழை கொட்டாமா வேற என்ன பண்ணுமாம்??"ஆமா நீ எப்பவும் சொன்ன நேரத்தை விட ஒரு மணித்தியாலம் பிந்தி தானே வெளிக்கிடுவாய்...இன்னைக்கு என்ன ஆச்சு??

"ஏன்டி இது இப்போ உனக்கு ரொம்ப முக்கியமாடி,என்னோட நிலைமை புரியமா...நான் உன்கிட்ட ரொம்ப முக்கியமா பேசனும்னு கூப்பிட்டா இங்க வந்த மொக்கை போட்டுகிட்டு...வா கிளம்பலாம்..

"ஏன் சொல்லமாட்ட நீ கூப்பிட்டதும் ஓடி வந்தேன் பாரு என்னைச் சொல்லனும்,ஏன் இப்படி பறக்கிறாய்...ஆன்டியோடு ஒரு மீட்டிங்க போட்டதும் கிளம்பலாம்.."

"அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை...நீ இப்போ வரப் போறியா இல்லையா??"

"வர முடியாது போடி..நான் ஆன்டியோட டீயைக் குடிக்காம இங்க இருந்து நகருதா இல்லை.."

பவி அங்கிருந்து நகரும் உத்தேசமே இல்லாமல் நின்றதைக் கண்ட துளசி அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் காருக்குள் தள்ளினாள்.."இப்போ எதுக்குடி என்னை இழுத்திட்டு வந்தாய்..?இனி லண்டன் போனதுக்கப்புறம் ஆன்டியோடு டீயை நினைச்சுத் தான் பார்க்க முடியும்...போறதுக்கு முதல் ஆசைதீர குடிக்கலாம்னா விடமாட்டியே??என்று அடுத்தடுத்து கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டிருந்த பவியைப் பார்க்கும் போது துளசிக்கும் பாவமாகத்தான் இருந்தது,இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காரை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு கிளம்பினாள்...

எதுக்காவது பதில் சொல்றாளா பாரு என முணுமுணுத்தவாறே முகத்தை திருப்பிக் கொண்டாள் பவி...காரை பார்க்கின் முன்னே நிறுத்திய துளசி அதற்கு மேலும் அடக்க முடியாமல் அழுது தீர்த்துவிட்டாள்..பார்க்கின் முன்னே கார் நின்றதும் இறங்குவதற்குத் தயாரான பவி துளசி உடைந்து அழுவதைக் கண்டதும் அவளைத் தேற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாள்..

"ஏய் துளசி என்னடி ஆச்சு,எதுக்கு இப்போ அழுகிற...ஏதாவது பிரச்சினையாடி..?சொன்னாத்தானே தெரியும்,இப்படி அழுதிட்டு இருந்தா என்னடி அர்த்தம்??"

அழுகையினூடே நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவள்,கண்ணீர் வழிய சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.துளசி அனைத்தையும் சொல்லி முடித்ததும் பவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.இதற்கு ஏற்ற முடிவை துளசியால் மட்டுமே எடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டவள்,துளசியை ஒரு வழியாக சமாதானப்படுத்தி பார்க் கன்டீனுக்கு அழைத்துச் சென்றாள்...

சூடாக இரண்டு டீ கப்புக்களை வாங்கிக் கொண்டு துளசியின் முன்னே அமர்ந்தவள் அவள் டீ குடித்து முடியும் வரை அமைதியாகவே இருந்தாள்..அங்கே துளசியின் மனமோ அந்த டீயைப் போல் கொதித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேர அமைதிக்குப் பின் பவியே பேச்சைத் தொடங்கினாள்..

"இரண்டு நாளைக்கப்புறம் அப்பாகிட்ட என்ன சொல்லுறதா முடிவு பண்ணியிருக்கிறாய்..?"

"தெரியல...எந்த முடிவுக்கும் என்னால வரமுடியல பவி...ஒரே குழப்பமா இருக்கு.."

"ம்ம்...அன்னைக்கு நீ பீச்சில மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்த போதே நினைச்சன்,உன் மனசு உன்கிட்ட இல்லைனு..ஆனா கொஞ்ச நாள் போனா நீயாவே சரியாகிடுவாய்னு தான் நான் அதை பத்தி ஒன்னும் சொல்லல...ஆனால் அதுவே இப்படி பெரிய பிரச்சனையா வந்து நிற்கும்னு நான் எதிர்பார்க்கல.."

"சரி இப்போ நடந்ததை விடு...கொஞ்சம் பிராக்டிக்கலா யோசி துளசி..நீ அன்னைக்கு பீச்சில அவனோட முகத்தைக் கூட பார்க்கல...அவன் யாரு??எப்படி இருப்பான்??என்ன செய்யுறான்னு எதுவுமே உனக்கு தெரியாது...இப்படி யாருன்னே தெரியாத ஒருத்தனை காதலிக்கிறேன்னு சொன்னா உன் வீட்டில ஒத்துப்பாங்களா??"

"ம்ம்...இதை எதுவுமே பார்க்காம வாறதுக்கே பேர் தானே காதல்.."

"இந்த வசனமெல்லாம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கும்,ஆனா நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு அவனை எங்கேனு போய் தேடுவ??இல்லை அவன பார்க்கிறவரைக்கும் இப்படியே எத்தனை நாளைக்கு உன்னால காத்திட்டிருக்க முடியும்?சரி இது எல்லாத்தையும் விட அவன் வேற யாரையாவது காதலிக்கலைனோ இல்லை கல்யாணமாகலைனோ என்ன நிச்சயம்..??"

பவி இறுதியாகச் சொன்னவற்றை துளசியின் மனம் ஏற்க மறுத்தது..அவன் யார் எவரென்று அவளுக்கு தெரியாமலிருக்கலாம்...ஆனால் அவன் அவளுக்கு மட்டுமே சொந்தமானவன் என்பதில் அவளுக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை...

துளசியை பார்க்கவே வேதனையாக இருந்தது பவிக்கு...எதற்குமே உடைந்து போகாதவள் இன்று உயிரே இல்லாதவள் போல் இருப்பதைக் காண அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது..பவிக்குத் தெரியும் இப்போது அவள் கூறுவது அனைத்துமே துளசியை மிகவும் காயப்படுத்துமென்று...ஆனால் அவளுக்கும் துளசியின் மனதை மாற்ற வேறு வழிகள் தெரியவில்லை...

"இங்க பாரு துளசி இப்போ நான் சொல்றது உனக்கு கஷ்டமாய் இருக்கலாம்..ஆனால் யாருக்குமே அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமைந்திடுவதில்லை....நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம வாழ்க்கையை அமைச்சுக்கிறது நம்ம கையில தான் இருக்கு..யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக உன்னோட வாழ்க்கையையும் பாழாக்கிகிட்டு,உன் குடும்பத்தோட சந்தோஷத்தையும் எடுத்துகிட்டு உன்னால நிம்மதியா வாழ்ந்திட முடியுமா??"

நீ எப்பவுமே சொல்லுவியே உன் அப்பாவோட செலக்சன் முதல்ல பிடிக்காது...ஆனால் அது தான் உனக்கு எப்பவுமே பெஸ்டா இருந்திருக்கின்னு...அது மாதிரி இதையும் நினைச்சிக்கோ,இப்போ உன்னால இந்த வாழ்க்கையை ஏத்துக்க முடியலைனாலும் எப்போ உனக்கு அந்த வாழ்க்கையை வாழனும்னு தோனுதோ அப்போ அரவிந்தனோட சேர்ந்து வாழத் தொடங்கு...உனக்கே உனக்கான வாழ்க்கை உனக்காக மட்டுமே காத்துகிட்டிருக்கு..தேவையில்லாததை யோசிச்சு அந்த அழகான வாழ்க்கையை மிஸ் பண்ணிடாத....

"இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை..இனி முடிவெடுக்க வேண்டியது நீ தான்...உன்னோட வாழ்க்கையில மத்தவங்க கருத்து தான் சொல்ல முடியும்....ஆனா வாழப்போறது நீ மட்டும் தான்....யோசிச்சு நல்ல முடிவா எடு.."

பவி சொன்ன அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள்...அவள் சொல்லி முடித்ததும் கிளம்பலாம்னு சொன்னாள்....அவளுக்கு இப்போது சிறிது நேரத் தூக்கம் தேவைப்பட்டது...அதனால் வீடு வந்து சேரும் வரை மௌனமாகவே வந்தாள்..

துளசியை வீட்டில் கொண்டுவந்து விட்ட பவி அவள் உறங்கச் சென்றதும் துளசியின் அம்மாவோடு கதைத்துவிட்டே சென்றாள்..
பவி சென்றதும் துளசியின் அறையை எட்டிப் பார்த்த கலைவாணி அவள் நிம்மதியாகத் தூங்குவதைக் கண்டதும் கதவை லேசாக சாத்திவிட்டுச் சென்றார்....அவரது மனம் பவி சொன்னது போல் எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டுமென எண்ணிக் கொண்டது...


தொடரும்.....

எழுதியவர் : அன்புடன் சகி (13-Jun-17, 8:41 am)
பார்வை : 716

மேலே