நிலாச் சோறு
முற்றத்து நிலா ஒளிவெள்ளம் பாய்ச்ச
மொட்டை மாடியில் வட்டமாய் அமர
வற்றாத குளத்துநீர் காற்று பாய்ந்துவர
விண்மீன்கள் அதனில் துள்ள துள்ள
சற்றும் குறையா போட்டியாக தான்
சரசரவென துள்ளியோடும் மீன்களும் ஓட
சற்றும் மனம்கோணா தாயவளும் தட்டில்
சாதத்துடன் குழம்பூற்றி கையில் தந்தாள்!
சாதமும் அமுதாய் இனிக்க இனிக்க
சளைக்காமல் கரங்களிலே தந்தவள் தாய்!
ஆதவன் வரும்வரை அப்படியே கண்துயில
அடுத்தநாள் இரவிற்காய் காத்தே நிற்க
ஏதடா ? நிலாச் சோறு திங்களில் ஓர்நாளே
என்றேதான் அன்னையும் உரைத்த நினைவும்
காதில் விழுந்தே இன்பமாக்கிய அந்நாளை
கணினியில்தான் கண்டுதான் மகிழ்ந்தேனே!
கணினியில் கண்ட காட்சியைப் போல
கண்முன் காட்டிடுவாய் என்றே தான்
கண்ணாள மனைவியின் காதில் போட
காலம் மாறிபோச்சே இன்னும் அந்நாள்
கனவைக் காணுகிறீர் ஒழுங்காய் பிழைப்பு
கண்டுதான் செல்வம் சேர்த்திடுக என்றே
கட்டிய மனைவியும் கறாராய் சொல்ல
கற்கண்டு பிள்ளைகள் ஆமென்றார் தானே!
கவிஞர் கே. அசோகன்