நெத்தியடி
பரபரப்பான காலை… கணேசனும் , மாலாவும் ஒருவித பதட்டத்துடன் குறுக்கும் நெடுக்குமாய் திரிந்துக்கொண்டு இருந்தனர்… ஆனா இந்த பரபரப்புக்கு காரணமான ஆளு நிம்மதியா தூங்கிக்கிட்டு இருக்கு..அவுங்கதான் நம்ம கதாநாயகி மயூரி..எப்பவும் லேட் தான் எல்லா விசயத்திலும்..சரியான வாலு..இவளுக்குனு ஒரு பட்டாளமே இருக்கு நல்லது கெட்டதுக்கு மட்டும் இல்ல இவளோட வாலு தனத்துக்கும் சப்போர்ட் அவுங்க… சாதனா , மகேஷ் , யாழிசை , மயூரி இந்த நாலுபேரும் ஒரே தெரு தான்… இதுல சாதனா , யாழிசை –க்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கு..நம்ம மயூரிக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகல..இதுதான் இப்ப அவுங்க வீட்ல பெரிய பூகம்பமே…பொதுவா பொண்ண பெத்த எல்லா பெற்றோர்க்கும் இருக்குற கவலைதான்… இன்னைக்கு நடக்குற பரபரப்புக்கான காரணமே மாப்பிள்ள வீட்ல இருந்து பெண் பார்க்க வருவதுதான்… இதுல அப்படி என்ன பெரிய பரபரப்பு-னு தான கேக்குறீங்க..நம்ம மயூரி கண்டிஷன் அப்படி… அவளோட கண்டிஷன் கேட்டு ஓடிப்போன மாப்பிள்ளைய கணக்கு எடுத்தா எறும்பு வரிசக்கட்டி நீளமா போகுறமாதிரி போய்ட்டே இருக்கும் … அப்படி என்ன கண்டிஷன் –னு கேக்குறீங்களா..
கண்டிஷன் ஒன்னு : அவ இப்ப இருக்குறமாதிரியே எப்பவும் எல்லா (முக்கியமா ஆண் ) நண்பர்களோடவும் பேசுறதுக்கு தட பண்ணக்கூடாது…
கண்டிஷன் ரெண்டு : அவ கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு போறத தடுக்கக்கூடாது..முக்கியமா அவளோட சம்பள பணத்த கேக்கக்கூடாது..
கண்டிஷன் மூணு : வரதட்சண வாங்கக்கூடாது
இதாங்க அந்த கண்டிஷன்.. சரி இன்னைக்காவது அவளுக்கு இந்த இடம் முடியுதானு பாப்போம் வாங்க…
“ பிள்ளையாரப்பா ! இன்னைக்காவது என் பொண்ணுக்கு நல்ல புத்திய குடுத்து வர மாப்பிள்ளைப் பையன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைப்பா.உனக்கு ஆயிரம் தேங்கா உடைக்குறேன்..”
“ என்ன மாலா அத்த இன்னைக்கும் நூறு தேங்கா வேண்டுதலா ! “ என நக்கலா மகேஷ் சிரிக்க மாலாவுக்கு கோபம் வந்தது..
“ சாமிக்காரியத்த நக்கல் பண்ணாதனு எத்தனவாட்டி சொன்னாலும் நீ கேக்கவே மாட்டேங்குற மகேஷ். “
“ சரி சரி கோவப்படாதீங்க… அந்த வாலு ரெடி ஆகிட்டாளா அத்த ? .மாப்பிள்ள வீட்ல இருந்து எப்ப வராங்க ? “
“ அவதான ! நல்ல ரெடியானளே, நீதான் போய் அவள கெளப்பிவிடனும்.
இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா. மணி 8 ஆச்சு இன்னும் எழுந்திரிக்கல.. மாப்பிள்ள வீட்ல இருந்து சரியா 10 மணிக்கு வந்துடுவாங்க. இவள வச்சுக்கிட்டு என்னதப்பண்ணுறது ? தனியா நாதான் கஷ்டப்படுறேன்.. “
“ cool cool அத்த.என்ன வேலை இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நா பண்ணுறேன்..”
“ நீ எனக்கு பண்ண வேண்டிய ஒரே உதவி அவள எப்படியாவது 10
மணிக்குள்ள ரெடியாக வை..அது போதும். “
“ ஹாஹா கொஞ்சம் கஷ்டமான வேலை தான்.. என் அத்தைக்காக இதுக்கூட செய்யமாட்டேனா…சரி வாங்க வீட்டுக்கு போவோம்… “
வீட்டு வாசலில் ” அடடே உன்ன தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் மகேஷ்…”
“ ஹாய் மாமா , நல்லா இருக்கீங்களா “
“ இவ்வளவு நேரம் நல்லா இல்ல ! இப்பதான் நீ வந்துட்டீயே இனி நல்லா இருப்பேன்.…சீக்கிரமா போய் அவள எழுப்பி கெளம்ப சொல்லு பா.. “
“ இதோ போறேன் மாமா..”
எதிர் வீட்டில் பாக்கியாவும் நிர்மலாவும் பேசிக்கொண்டு இருந்தனர்..
“ ஏய் பாக்கியா இந்த கூத்து எங்கயாவது நடக்குமா டீ.. இந்தப்பய வந்து தான் அந்த மயூரி ரெடி ஆவாளாம்..பெத்தவங்க பேச்ச கேக்குறத விட இவன் தான் அவளுக்கு பெருசுனா இவனையே கல்யாணம் பண்ணிவைக்க வேண்டியதுதான..நானே ரெண்டுபேரையும் நிறைய இடத்துல ஒன்னா பாத்து இருக்கேன்..எனக்கே சந்தேகமா இருக்கு இதுங்க ரெண்டும் லவ் பண்ணுதுங்களோனு… நா மட்டும் இல்ல நம்ம தெருவே பேசுது டீ..ஆனா பாரு இந்த மகேஷ் அப்பா அம்மாவும் , இந்த மயூரி அப்பா அம்மாவும் அந்தமாதிரி ஒன்னுமே இல்லனு பெருமையா சொல்லிக்கிட்டு திரியும்க.
நமக்கு பிள்ளைய வளர்க்க தெரியலையாம்…இவுங்களுக்கு தான் அவுங்க பிள்ளைங்க பத்தி தெரியல.. நீ இன்னைக்கு பாரு இந்த இடமும் அமையாது இதுங்க கடைசில எல்லார் மூஞ்சுலையும் கரியப்பூசிட்டு ஓடிப்போகதான் போதுங்க.. என்ன டீ நா இவ்வளவு பேசுறேன் நீ வாயே தெறக்கல… “
“ எதுக்குக்கா எனக்கு வம்பு ! நானும் போனவாரம் இப்படி பேசி தான் நல்லா வாங்கிக்கட்டிக்கிட்டேன்.. “
“ என்னடி சொல்ற என்ன ஆச்சு..”
“அது ஒரு பெரிய கத .. உள்ள வா சொல்றேன்.. ”
அங்கு மயூரி வீட்டில்..
” மயூரி ! மயூரி சீக்கிரம் எழுந்திரி , மணி 8 ஆச்சு டி… “
“ இன்னும் கொஞ்ச நேரம்மா..அவுங்க 10 மணிக்கு தான வராங்க நா முப்பது நிமிசத்துல ரெடி ஆகிடுவேம்மா..”
“நீதான ! உன்னப்பத்தி எனக்கு தெரியாத ஒழுங்கா எழுந்திரி மகேஷ் கூட வந்துட்டான்…”
“ அத்த ஒரு நிமிஷம் நகருங்க ” என்றாவாரே மயூரி முகத்தில் தண்ணீரை ஊற்றினான் மகேஷ்…
சட்டுனு கோபத்தில் மயூரி ” எருமமாடு ! வந்துட்டீயா நீயும் இனி அவ்வளவு தான் என்ன ஒரு வழி ஆக்கிடுவீங்க ” என கத்திக்கொண்டே ரெடியாக புறப்பட்டாள்..
“ ஆமா , என்னமாதிரி ஆளு இல்லாட்டி உன்னைய யாரல அடக்கமுடியும் வாலு…”
“ அது என்னவோ உண்மை தான் மகேஷ் ! பேசாம இவள நீயே கட்டிக்கோயேன் டா..இவ உனக்கு மட்டும் தான் அடங்குறா… ”
“ அய்யய்யோ ! ஆரம்பிச்சுட்டீங்களா , அத்த எத்தனவாட்டி சொன்னாலும் கேக்கமாட்டிக்குறீங்க.இப்படி பேசாதீங்க நாங்க நல்ல ப்ரெண்ட்ஸ்!..தயவு செஞ்சு அத அசிங்கப்படுத்தாதீங்க..ஒரு பையனும் பொண்ணும் ப்ரெண்ட்ஸா இருந்தா ஒன்னு காதல்-னு நினைக்குறீங்க , இல்ல கல்யாணம் பண்ணி வைக்க பேசுறீங்க…உங்க நல்லநேரம் அவ இங்க இல்ல..இல்லாட்டி ஒரு வழி ஆக்கிடுவா…போன மாசம் நீங்க இப்படி பேசிதான் உங்கக்கிட்ட ஒரு மாசம் அவ பேசவே இல்ல..மறந்துட்டீங்களா!..
“ இல்லடா எதும் மறக்கல..எங்க மனசுல இருந்த ஆசைய சொன்னேன்…”
“ நீங்க கவலப்படாதீங்க அத்த என்னவிட அவளுக்கு நல்லபையன் கிடைப்பான் பாருங்க…”
“ சரி பார்ப்போம்..”
“ என்ன மகேஷ் பழையபடி அத்த உன்ன கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லுறாளா.. “
“ ஆமா மாமா..அவ அப்படிதான் டா அந்தகாலத்து கட்ட..இந்த காலத்து பிள்ளைங்கள புரிஞ்சுக்க தெரியாத பட்டிக்காடு.. “
“ ஆமா இவரு மட்டும் அப்ப பெரிய பட்டணத்து ஆளு பாரு..என்ன பொண்ணு பாக்க வரும்போது பட்டிக்காடு மாதிரி தான வந்தீங்க..ஏதோ என்ன கல்யாணம் பண்ணி தான் உங்களுக்குள்ள இவ்வளவு மாற்றம்.. ஆமா தெரிஞ்சுக்கோங்க..”
“ சரி சரி இப்ப நீங்க சண்டைய ஆரம்பிக்காதீங்க..மணி 9.30 ஆச்சு இந்த மயூரி ரெடி ஆகிட்டாளா-னு பாத்துட்டு வரேன்..நீங்க மாப்பிள்ள வீட்டுக்கு போன் பண்ணி எங்க வந்துட்டு இருக்காங்க-னு கேளுங்க மாமா..”
“ சரிடா நீ போய் அவ ரெடி ஆகிட்டாளா-னு பாரு..”
“ மயூரி! மயூரி! “
“ இருடா வரேன் !” என்றவாரே கதவை திறந்தாள்..
“ என் கண்ணே பட்டுடும் போலயே ! ” என்றவாறே திருஷ்டி எடுத்தான்..
“ இதோட 50 திருஷ்டியாவது எடுத்து இருப்பீயா இப்படி.? “
” .ஹாஹா ! ஆமால.. “
“ ஹ்ம்ம் இன்னைக்கு இந்த காரணம் வச்சு ஆபிசுக்கு கட் அடிச்சுட்டியா..”
” அடிப்பாவி ! என்ன இப்படி சொல்ற , என் கிளோஸ் பிரெண்ட பொண்ணு பாக்க வரும் போது நா இல்லனா எப்படி..”
“ இப்படியே சொல்லி சொல்லி உன் லீவு கணக்கு எகுறுது..நானே நாளைக்கு உன் ஆபிஸ் போய் உன் வேலைய காலி பண்ணுறேன் பாரு…”
“அடிப்பாவி ! சரி செய் செய்.. நானே எப்படி டா அங்க இருந்து தப்பிக்குறது-னு யோசிச்சுட்டு இருந்தேன் நீயே ப்ரியா ஹெல்ப் பண்ணுறேனு சொல்லுற வேணாணு சொல்லுவேனா…”
“ உன்ன..... “ என்றவாரே அவன் காதை திருவினாள்…
“ ஹே விடு டி..வலிக்குது நான் சும்மாதான் சொன்னேன்..அப்படி வா வழிக்கு..
சரி டி இன்னைக்கு இந்த பையனாவது ஒகே பண்ணுமா தாயே…
”பார்ப்போம்..”
” என்னது பார்ப்போமா..”
” ஆமா , என் கண்டிஷன் –க்கு ஒகே சொல்லிட்டா எனக்கு ஒகே தான்…”
“ சுத்தம் இந்தவாட்டியும் கோவிந்தா தான் போல…எங்களுக்காக உன் கண்டீஷன் –லா ரிலாக்ஸ் பண்ணிக்கமாட்டீங்களா மிஸ் மயூரி ..”
“ முடியாது , யாருக்காகவும் நான் பண்ணமாட்டேன்..என்னோட கண்டீஷன் –ல என்ன தப்பு இருக்குனு நீயே சொல்லு.. “
“ தப்பு எதுவும் இல்ல..பட் இதுக்கு-லா ஒகே சொல்லனும் –னா அந்த ஆண்டவன் மேல இருந்து ஒருத்தன அனுப்புனாதா உண்டு..அதுக்குள்ள நீ கிழவி ஆகிடுவ… ”
“ அப்ப நீ சாமியார் ஆகிடுவ அப்படிதான ஹா ஹா.. “
“ சிரிமா நல்லா ! உன்கூட ப்ரெண்ஷிப் வச்சிக்கிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்… “
“ இன்னும் என்ன வேணும் சொல்லு .. ”
“ ஒன்னும் வேணாம் தாயே நீ வாய மூடிட்டு இரு அது போதும்.. “
“ அது ரொம்ப கஷ்டம் ஆச்சே..ஹாஹா.. ”
“ சரி சாதனா , யாழிசைக்கு தெரியுமா வாலு ? நீ பேசுனியா… “
“ தெரியும் டா , நேத்தே பேசிட்டேன் உன்னையும் கேட்டதா சொன்னாங்க…
அவுங்க கல்யாண வாழ்க்கைய பாத்துதான் நான் இப்ப தெளிவான முடிவு எடுத்து இருக்கேன்..நாம நாலு பேரும் எப்படிலா இருப்போம்..இப்ப பாரு அவுங்க உன்கிட்ட பேசக்கூட முடியல..ஏன் ! என் கிட்டக்கூட பேசமுடியல..
அவுங்க புகுந்த வீட்ல 78 கண்டிஷன்! இப்படி ஆம்பள ப்ரெண்ட் கூட என்ன பேச்சு..? எந்த ப்ரெண்ட்னாலும் கல்யாணத்துக்கு முன்னாடி வரதான்..இப்படி-லாம் அடிமை பண்ணுறாங்க…இந்த மாதிரி ஆணாதிக்கம் உள்ள கணவர் எனக்கு வரக்கூடாது!அதான் இவ்வளவு கண்டிஷன்..”
“ ஹ்ம்ம் புரியுது டி.!ஆனா உனக்கும் வயசாகுது..அத்த மாமாக்கும் வயசாகுது..வயசான காலத்துல அவுங்களும் கடமைய முடிச்சிட்டு நிம்மதியா இருக்கனும்..நீ அதலாம் கொஞ்சம் யோசிச்சு முடிவெடு.. “
“ இதுல யோசிக்க எதுவும் இல்ல…எந்த பொண்ணாவது கல்யாணத்துக்கு அப்பறம் இந்த ப்ரெண்ட்டோட அந்த ப்ரெண்ட்டோட -லாம் பேசாத –னு கண்டி ஷன் போடுறாங்களா..?ஏன் ஆபிஸ்-ல கூட லேடீஸ் ப்ரெண்ட்ஸ் இருக்கதான் செய்வாங்க..அதுக்காக நாங்க பேசக்கூடாது-னு சொல்லுறோமா? நாங்களும் அப்படி சொன்னா தான் தெரியும் அந்த வலி..இப்ப வந்த இவுங்களுக்காக 25 வருஷமா பழகுன உங்கள என்னால எப்படி தூக்கிப்போட முடியும் சொல்லு…”
” ஆஹா இப்ப இருக்க பொண்ணுங்கலாம் ரொம்ப உஷார்மா..அவுங்க தான் அவுங்க வீட்டுக்காரர் ப்ரெண்ட்ஸ அவுங்க கிட்ட இருந்து பிரிக்குறாங்களாம்…பசங்க தான் இப்ப பாவம்.. “
“ ஹே! அதுக்காக எல்லா பொண்ணுங்களும் அப்படிதானு சொல்லாத..அது அவுங்க அண்டர்ஸாண்டிங்-ல பிரச்சனனு தான் சொல்லுவேன்..கல்யாணம் ஆன பொண்டாட்டிக்கு குடுக்குற டைம் அவுங்களுக்கு குடுத்தா இப்படி பிரச்சனையே வராது..எப்பவும் ப்ரெண்ட்ஸ் பத்தியே பேசிட்டு அவுங்க கூடவே டைம் ஸ்பெண்ட் பண்ணுறதால தான் இந்த பிரச்சனை..இத யாரும் சரியா புரிஞ்சிக்குறது இல்ல..ஒரு பொண்ணுக்கு கல்யாணம்-லா சும்மா இல்ல..
இவ்வளவு நாள் உரிமையா வாழ்ந்த இடத்தவிட்டு ஒரு புதிய இடத்துக்கு போய் செட் ஆக நாள் ஆகும்..அதுக்கு அப்ப அவ கணவன் தான் நல்ல உறுதுணையா இருக்கனும்..ஆனா அவுங்களே எப்ப பாத்தாலும் ப்ரெண்ட்ஸ் கூடவே டைம் ஸ்பெண்ட் பண்ணா அவளுக்கு லோன்லியா இருக்கும் அப்பதான் பிரச்சன ஆரம்பம் ஆகும்..அதுக்காக ப்ரெண்ட்ஸ விட சொல்ல-ல.
எல்லாருக்கும் டைம் equal ஆ பகிர்ந்துக்கனும்..போன் –லயே இருக்குறத விட்டு பக்கதுல இருக்க மனுஷங்க கிட்ட பேசி சிரிச்சு பழகனும்..”
“சரிமா பாட்டி! இந்த டாப்பிக்க விடு , எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போது..கார் சத்தம் கேக்குது நா போய் பாத்துட்டு வரேன்..”
“ அதான ! நல்லது சொன்ன உடனே பாட்டி –னு சொல்லுறது..இது மெச்சூர் திங்க்கிங்..சரி சரி மிஸ் மயூரி..”
“ அப்படி வா வழிக்கு “ என மயூரி சிரித்தாள்..
“ ஹே மாப்பிள்ள வீட்ல வந்துட்டாங்க..கொஞ்சம் பொண்ணுமாதிரி நட டி கொஞ்சம் நடி டி..”
“ ஓய் ஒழுங்கா ஓடிடு ! இல்ல காத திருவிடுவேன்..”
“ அம்மாடி! “ என மகேஷ் வாசலை நோக்கி ஓடினான்..
கணேசனும் மாலாவும் மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்களை வரவேற்றனர்.
” வணக்கம்..வாங்க! வாங்க!..உள்ள வாங்க…”
“ ஹாய் பாஸ்! உள்ள வாங்க ” என மகேஷ் மாப்பிள்ளை பையன வெல்கம் பண்ணிணான்..அந்த மாப்பிள்ளை ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு மகேஷை ஒரு பார்வை மேலும் கீழுமாய் பார்த்தான்..
“ வழி-ல ரொம்ப ட்ராப்பிக்கா இருந்துச்சா “ என கணேசன் மெல்ல பேச்சைத் தொடங்க..
“ அப்படிலா இல்ல சார்! கோவில் போய்ட்டு நேரா இங்க வர கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு..” என மாப்பிள்ளை அப்பா கூறினார்..
“ பரவாயில்லங்க..நல்ல காரியம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி கடவுள் ஆசிர்வாதம் ரொம்ப முக்கியம் ” என மாலா கூற
“ யாரு இந்த பையன் உங்க பையனா ? “ என மாப்பிள்ளை அம்மா கேட்க
“ என் பையன் மாதிரிங்க ! எங்களுக்கு பிறக்கல ஆனா எங்க பையன் தான்…என் பொண்ணுக்கு சின்ன வயசுல இருந்து நல்ல தோழன்..” என கணேசன் கூறினார்..
“ ஓ அப்படியா ! ரொம்ப சந்தோஷங்க..தம்பி என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?”
என மாப்பிள்ளை அப்ப கேட்க ..
“ நா பத்திரிக்கையாளரா இருக்கேன் அங்கிள்.”
“ ரொம்ப சந்தோஷம் தம்பி ”
“ சரி பொண்ண கூப்பிடுங்க ,நாங்க எங்க மருமகள பார்க்கவேண்டாமா..” என நிகிலேஷ் அப்பா கூறினார்.
கணேசனுக்கு சற்று நெருடலாக இருந்தது..
“ அதுக்குள்ள மருமகளா ! முடிவுவே பண்ணிட்டாங்க போல..இனி நம்ம பொண்ணு கைலதான் எல்லாமே இருக்கு-னு மனசுக்குள்ள பொலம்பிட்டு
மாலா நம்ம பொண்ண கூட்டிட்டு வாம்மா ” என கூறினார்
“ சரிங்க..”
மாலா மயூரியை கூட்டிக்கொண்டு வர மாப்பிள்ளை கண் மயூரியை வைத்தக்கண் மாறாது அவள் மீதே இருந்தது..
“ பொண்ணு மகாலெட்சுமி மாதிரி இருக்கா ” என மாப்பிள்ளை அம்மா கூறி மயூரியிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தாள்..
“ உன் பெயர் என்னமா “ என கேட்க
“மயூரி” எனக் கூறினாள்..
“ இவன் தான் என் பையன் நிகிலேஷ்..நல்லா பார்த்துக்கோ மா..உனக்கு எதாவது பேசனும்-னா பேசிக்கோ மா..”
“ கண்டிப்பா நான் பேசணும்மா ” என நிகிலேஷ் கூற இருவரையும் அருகில் இருந்த அறைக்குள் அனுப்பினர்..போகும் முன்பு நிகிலேஷ் மகேஷ் கிட்டவும் நா பேசணும் நீங்களும் வாங்க என கூறினான்..
மயூரியும் மகேஷ்ம் இது என்னடா புதுசா இருக்கு என விழித்தனர்…
“ அவர்கிட்ட பேச என்ன இருக்கு பா ? “என மாலா கேட்க
“ இருங்க அத்த நாங்க பேசிட்டு வந்து உங்களுக்கு சொல்லுறேன் ” என நிகிலேஷ் இருவருடன் உள்ளே சென்றான்… நிகிலேஷ் அப்பா அம்மாவிற்கும் ஒன்றும்
புரியவில்லை…
அறையின் உள்ளே நிகிலேஷ் பேசத்தொடங்கினான்..
“ஹாய் படிஸ் ! எப்படி இருக்கீங்க..”
“ நாங்க நல்லா இருக்கோம் , பட் என்கிட்ட பேச உங்களுக்கு என்ன இருக்கு பாஸ்..என மகேஷ் கேட்க..
“ இருக்கு பாஸ்! வெயிட்..என்ன மயூரி நீங்க எதும் பேச மாட்டீங்களா ? ”
மயூரிக்கு என்ன சொல்லுறது –னு புரியாம அப்படியே பார்த்துட்டு இருந்தா..
“ நீ பேசாட்டியும் உன் கேள்வி உன் கண்ணுலையே தெரியுது மயூரி ” என நிகிலேஷ் பேச்சை தொடர்ந்தான்.. முதல்ல உங்க ரெண்டுபேர்கிட்டையும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்…
“ மன்னிப்பா ! எதுக்கு பாஸ் ? நீங்க என்ன தப்பு பண்ணீங்க ? ”
“ இருங்க பாஸ்! அததான நான் சொல்லவரேன்..”
“ சரி சொல்லுங்க…”
“ ஒரு வாரத்துக்கு முன்னாடி நீங்க ரெண்டுபேரும் முருகன் கோவிலுக்கு வந்தீங்க.. ”
“ ஆமா பாஸ் அப்ப நீங்க எங்கள முன்னாடியே பாத்து இருக்கீங்களா ? ”
“ ஆமா ! உங்களையும் பாத்தேன் உங்க களங்கம் இல்லாத மனசையும் பாத்தேன்.”
“ .என்ன சொல்லுறீங்க ஒன்னும் புரியல பாஸ்..”
” நீங்க ரெண்டுபேரும் கோவில் –ல சாமி கும்பிட்டு இருக்கும் போது ஒரு அம்மா உங்க ரெண்டு பேரையும் தப்பா பேசுச்சு பக்கத்துல இருந்த அம்மாக்கிட்ட…அதக்கேட்டு மயூரி விட்ட அடி இன்னும் எனக்கு மறக்கல..அவுங்களுக்கு விழுந்த அடி எனக்கு விழுந்தமாதிரி இருந்துச்சு..என்னோட வீணாபோன எண்ணத்துக்கு சரியான பதிலடியா இருந்துச்சு..”
“ ஓ பாக்கியம் அக்காவ சொல்லுறீங்களா பாஸ்..அது எப்பவும் அப்படி தான் எல்லாரையும் தப்பான கண்ணோட்டத்தோட பாக்குறதே பொழப்பு…ஆமா நீங்க என்ன நினச்சீங்க? நாங்க லவ்வர்ஸ்-னா? ”
“ ஆமா பாஸ் ! அப்புறம் மயூரி அந்த அம்மா கிட்ட சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னோட எண்ணத்துக்கு சரியான செருப்படியா இருந்துச்சு..அன்னைக்கே சாரி கேக்கனும்-னு நினச்சேன்..ஆனா நீங்க ரொம்ப கோவமா இருந்தீங்க..இந்த காலத்து பையன் நானே இப்படி தப்பா நினச்சுட்டேனு ரொம்ப மனசுக்கு ஒரு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு.. அதான் உங்களையும் கூப்பிட்டு சாரி கேட்டேன்..”
“ சூப்பர் பாஸ்.. பரவாயில்ல விடுங்க..ஒரு சிலப்பேர் சரி இல்லாத காரணத்தால நல்ல எண்ணத்தோட பழகுற எங்களையும் அப்படிதான் பார்க்க தோணும்.. நாங்க சின்ன வயசுல இருந்து நல்ல ப்ரெண்ட்ஸ்…”
” ஒரு நிமிஷம் இரு மகேஷ்..மிஸ்டர் நிகிலேஷ் ! எனக்கு உங்கக்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்.. “ என் மயூரி கூற
“ ஹப்பா ! இப்பவாது பேசுறீங்களே..கேளுங்க..”
“ பாஸ் அவ சரியான வாயாடி ! வாய தெறந்தா மூடுறது ரொம்ப கஷ்டம்..
போக போக தெரியும்” என நக்கல் செய்தான்..
அவனை முறைத்தவாறே ” மகேஷ் நீ கொஞ்சம் அமைதியா இருக்கீயா ! “ என மயூரி சீறினாள்..
“ சரி ! சரி ! நீங்க பேசுங்க , நா யெஸ்கேப் ஆகுறேன் ” என மகேஷ் செல்லும் போது நிகிலேஷ் தடுத்தான்..
“ பாஸ் இங்க நடந்த விஷயத்த நான் தான் வந்து சொல்லுவேன்..நீங்க போனதும் கேட்டா நிகிலேஷ் வந்து சொல்லுவானு சொல்லிடுங்க.. “
“சரிங்க பாஸ் “ எனக்கூறிக்கொண்டே மகேஷ் சென்றதும் , மயூரி பேச்சை தொடர்ந்தாள்…
“ மிஸ்டர் நிகிலேஷ் ! அப்ப நீங்க எப்படி என்ன பொண்ணு பாக்க வந்தீங்க..
ஏற்கனவே என் பையோடேட்டா வந்துச்சா இல்ல கோவில்-ல பாத்து புடிச்சுப்போய் வந்தீங்களா ? ”
“ ரெண்டுமே… “
“ ரெண்டுமேனா புரியல…”
“ முதல்ல உங்க பையோடேட்டா வந்துச்சு..அதுக்கு அடுத்த ரெண்டு நாள்-ல தான் உங்கள கோவில்-ல பார்த்தேன்…உங்க கண்ணுலையும் பேச்சுலையும்
உள்ள உண்மைய புரிஞ்சிக்கிட்டேன்..ஐம் எக்ஸ்டீரிமிலி சாரி..”
“ ஓ சரி…பரவாயில்ல! இப்ப புரிஞ்சுகிட்டீங்களே அது போதும்..அப்பறம் என்னோட கண்டிஷன் பத்தி தெரியுமா ? “
“ தெரியும் ! அந்த ப்ரோக்கர் என்கிட்ட மட்டும் தனியா வந்து சொன்னாரு..முதல்ல உங்க கண்டிஷன் கேட்டதும் திமிரு புடிச்ச பொண்ணு-னு நினச்சேன் ! ஆனா கோவில்-ல நீங்க பேசுனதுலாம் கேட்டப் பிறகு அதுக்குள்ள ஒரு காரணம் இருக்கும் –னு புரிஞ்சுகிட்டேன்..எனக்கு எல்லாத்துக்கும் ஓகே தான்.. “
“ ஹ்ம்ம் நீங்க சொல்லுறது சரிதான் எல்லாத்துக்கும் ஒரு காரணம்
இருக்கு..நீங்க கேட்கலனாலும் என்ன காரணம்-னு சொல்லுறது என் கடமை..”
கண்டிஷன் ஒன்னு:
நா இப்ப இருக்குறமாதிரியே என் ப்ரெண்ட்ஸ்கூட பேசுவேன்..
” ஒரு பொண்ணு மட்டும் கல்யாணம் ஆகிட்டா அவ ப்ரெண்ட்ஸ்ஸ விட்டு வரணுமா?? என் கூட இன்னும் ரெண்டு பேர் ப்ரெண்ட்ஸா இருந்தாங்க..
கல்யாணத்துக்கு அப்பறம் என்கிட்டக்கூட ரொம்ப பேசமுடியல..அதுக்கு தான் இந்த கண்டீஷன்.. நா இப்ப எப்படி இருக்கேனோ அப்படியே என்ன ஏத்துக்கனும்…”
” சரிதான் , இத நா ஆல்ரெடி ஆமோதிச்சி தான் உங்க ரெண்டுபேர்க்கிட்டையும் மன்னிப்பு கேட்டேன்… ”
” ஹ்ம்ம் சரி.. ”
கண்டிஷன் ரெண்டு:
கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு போறத தடுக்கக்கூடாது..முக்கியமா என் சம்பள பணத்த கேக்கக்கூடாது…
”நா வேலைக்கு போறதே என்னோட ஒரு குறிக்கோள்-காக தான்..எத்தனையோ பேர் படிக்க முடியாம மருந்து செலவுக்கு கூட காசு இல்லாம கஷ்டப்படுறாங்க..அவுங்களுக்கு உதவுற நோக்கத்துல நானும் மகேஷ் சேர்ந்து ஒரு அமைப்பு உருவாக்கி அதுமூலமா உதவி பண்ணிட்டு இருக்கோம்..
அதுக்கு தான் எங்க சம்பள பணம் பயன்படுத்துறோம்…இப்ப இருக்க சில பசங்க –லாம் வேலைக்குப் போற பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்க விரும்புறாங்க..காரணம் அளவுக்கு அதிகமான ஆசை.. வீடு காரு-னு சீக்கிரமே வாழ்க்கை-ல செட்டில் ஆகனுமாம்..ஆனா அவுங்க மனைவி வேலைக்கு போய் கஷ்டப்பட்டு குடும்பத்தையும் பாத்துக்கிட்டு கேடுக்கெட்ட சமூதாயத்தையும் (பஸ் , ஆபிஸ் –ல கேடுக்கெட்ட மனுசங்களையும்) சகிச்சிக்கிட்டு வாழுற வாழ்க்கை-லாம் அவுங்க கண்ணுக்கு தெரியல..எங்க அப்பாவுக்கு கூட அப்பலாம் சம்பளம் கம்மிதான்..ஆனா எங்க அம்மாவ ராணி மாதிரி பார்த்துக்கிட்டார்..அதுக்காக எல்லாரையும் குறை சொல்ல-ல..ஒரு சிலர் அப்படி..ஆனா நா கண்டிப்பா வேலைக்கு போவேன் அதுவும் என் குறிக்கோள்-காக தான்..நா கொஞ்சம் வேறமாதிரி..என்னோட வாழ்க்கை –னு என்னால சுயநலவாதியா இருக்கமுடியாது..நா சின்ன வயசுல இருந்து நிறைய கஷ்டப்படுறவங்கள பாத்து இருக்கேன்..அவுங்களுக்கு எதாவது செய்யனும் –னு என்னோட சின்னவயசு கனவு..அதுக்கு இப்ப தான் பிள்ளையார் சுழி போட்டு இருக்கேன்..இன்னும் நிறைய பண்ணனும்..நம்மளால அடுத்தவங்க சந்தோஷமா இருக்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சி கோடி ரூபா கொடுத்து வாங்குற பங்களா கார்-லக்கூட கிடைக்காது….”
” சூப்பர்ங்க…இன்னை-ல இருந்து என்னையும் அதுல சேர்த்துக்கோங்க..
உங்களுக்கு என்ன பிடிச்சாலும் பிடிக்காட்டியும் இனி ஒரு ப்ரெண்டா என்னோட சப்போர்ட் எப்பவும் இருக்கும் ”
” ரொம்ப சந்தோஷம்…சரி அடுத்து ”
மூணாவது கண்டிஷன்:
வரதட்சணை வாங்கக்கூடாது..
” அது என்னவோ தெரியல உலகம் எவ்வளவு மாறுனாலும் இந்த ஒரு விஷயம் மாறவே மாட்டேங்குது..ஒரு பொண்ணு உயிரோட உயிரா இருக்க குடும்பத்த விட்டு இன்னொரு குடும்பத்த தன் குடும்பமா ஏத்துக்கிட்டு வரா..அதுக்கு நம்ம சமூதாயம் குடுக்குற மரியாத இவ்வளவுதானா? சொல்லப்போனா பொண்ண எடுக்குற உங்கக்கிட்ட பணம் கேட்கனும்..25 வருஷமா அன்போட பாசமா சீராட்டி வளர்த்தப் பொண்ண அப்படியே சும்மா அனுப்புறாங்க..ஆனா எந்த அப்பா அம்மாவாது இப்படி கேட்டு இருக்காங்களா?காரணம் அவுங்க பொண்ண உங்கக்கிட்ட விக்கல..உங்க வீட்ட வாழவைக்க அனுப்புறாங்க..ஆனா நீங்க மட்டும் ஏன் காசு வாங்கி பொண்ண அசிங்கபடுத்துறீங்க?…இதவிட ஒரு பொண்ண அவமானப்படுத்த முடியாது..இப்ப இருக்குற பசங்க-ள்ளாம் இந்த விஷயத்துல பொண்ணுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க…ஆனா ஒரு சிலர் அப்பா அம்மாக்கு பயந்து பேச மறுக்குறீங்க… “
” உண்மை தான் மிஸ் மயூரி…கண்டிப்பா நானும் இந்த விஷயத்துல சப்போர்ட்டிவ்..நான் மட்டும் இல்ல என் அம்மா அப்பாவும் இந்த விஷயத்துல எனக்கு சப்போர்ட்டிவ் தான்…அவுங்களுக்கு இந்த வரதட்சணை-ல ஈடுபாடு கிடையாது.. ”
” ரொம்ப சந்தோஷம்.. அப்ப உங்களுக்கு என் கண்டிஷன் எல்லாத்துக்கும் சரி தானே ? எந்த மறுப்பும் இல்லையே “ என மயூரி கேட்டாள்
“ உண்மையா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..இப்படி ஒருப் பொண்ண என் வாழ்க்கை-ல பார்த்ததுக்கு… எனக்கு பூரண சம்மதம்..உங்களுக்கு ? “
” ஹ்ம்ம்.. அதுக்கு முன்னாடி உங்க அப்பா அம்மா கிட்டையும் பேசணும்.. “
“ எனக்கு புரியுது மயூரி நீங்க எதப்பத்தி பேசப்போறீங்கனு..வாங்க நானே எல்லாத்தையும் சொல்லிடுறேன்.. “ எனக் கூறிக்கொண்டே இருவரும் வெளியே சென்றனர்…
“என்னடா நிகிலேஷ் பேசிட்டீயா ? இவ்வளவு நேரம் என்னப்பேசிட்டு இருந்தீங்க ? அந்த தம்பி-ய எதுக்கு உள்ள கூட்டிட்டுப்போன ? “ என நிகிலேஷ் அம்மா கேள்விக்கணைகளைத் தொடுக்க…
”அம்மா எனக்கு மயூரி-ய முன்னாடியே தெரியும்மா.. “
“அப்படியா எப்படி டா..என்கிட்ட சொல்லவே இல்ல நீ “
“ உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கட்டுமே-னு சொல்ல-ல.. “
“ எப்படி தம்பி என் பொண்ண உங்களுக்கு தெரியும் ? “ என மாலா கேட்க..
“அத்த அது ஒரு பெரிய கதை.. “
”அந்தக்கதைய எங்களுக்கும் சொல்லுடா “ என நிகிலேஷ் அப்பாவும் ஆவலாய் கேட்க..கணேஷன் கண்ணும் காதும் கூர்மையாய் நிகிலேஷ் மேலேயே இருந்தது…
”சீக்கிரம் சொல்லுங்க பாஸ் எல்லாரும் ஆவலா இருக்காங்க…அங்க இருந்து நா வந்தது-ல இருந்து என்ன விஷயம் –னு கேட்டுட்டே இருந்தாங்க..நீங்க சொல்லக்கூடாது-னு சொன்னதால நா எதும் சொல்ல-ல..அதான் எல்லாரும் சஸ்பென்ஸ் தாங்காம இருக்காங்க”
“ஹா ஹா சரி மகேஷ்..இப்ப ஒவ்வொன்னா சொல்லுறேன்.. “
நிகிலேஷ்க்கு அன்றைய நிகழ்ச்சி மனஓட்டத்தில் ஓட ஆரம்பித்தது..அதை அவ்வாறே வாய் வழியாய் மொழிப்பெயர்க்க ஆரம்பித்தான்..
“போனவாரம் வெள்ளிக்கிழமை நான் கோவில் போனேன்..அப்பதான் நா மயூரியையும் மகேஷையும் பார்த்தேன்..முதல்ல பாக்கும் போது நா அவுங்கள தப்பா காதல் ஜோடி-னு நினச்சு கோவில்-ல கூட இவுங்க தொல்ல தாங்கலனு மனசுக்குள்ள திட்டிட்டு இருந்தேன்..அப்பதான் ஒரு லேடி மயூரியையும் மகேஷையும் சேர்த்து அசிங்கமா திட்டிட்டு இருந்துச்சு ஒரு அம்மாக்கிட்ட…அப்ப திடீர்-னு யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்துல மயூரி அவுங்கள ஓங்கி ஒரு அறை விட்டா..அறையோட விடாம நல்ல வார்த்தையால குத்தி கீறிட்டா..
“ என்னடி தெரியும் எங்களப்பத்தி ? வாய்க்கு வந்தமாதிரி பேசுற..நானும் நம்ம பக்கத்து வீட்டு அக்காவாச்சேனு அமைதியா போனா ரொம்ப ஓவரா பேசுற…ஒரு பையனும் பொண்ணும் சேர்ந்து போனா அவுங்க லவ்வர்ஸ்ஸா ? ஏன் நீ உன் அண்ணாக்கூட போனதே இல்லையா ? உன் தம்பிக்கூட போனது இல்லையா ? ”
“ நா போய் இருக்கேன்..ஆனா அவுங்க என்னோட உண்மையான அண்ணா தம்பி டி..இவன் அப்படியா ? எவ்வளவு திமிரு இருந்தா என்ன அடிச்சு இருப்ப?இரு உன் அப்பாட்ட போய் சொல்லுறேன் “
“ஹே என்ன மிரட்டுறீயா தாராளமா போய் சொல்லிக்கோ இன்னொரு அடி எங்க அப்பா தருவாரு..நல்ல வாங்கீக்கோ…என்ன சொன்ன நீ ! இவன் என் சொந்த அண்ணணா தம்பியா இல்ல தான்..ஆனா இவன் அதுக்கும் மேல..சின்னவயசுல இருந்து என்கூடவே இருக்கான்…ஆனா இதுவர ஒரு தப்பான பார்வைக்கூட என்ன பார்த்தது இல்ல..இதுலாம் உனக்கு சொன்னாலும் புரியாது.. கூட பிறந்தவங்கக்கூட ஏன் சில சொந்த அப்பாவே பொண்ணுங்கக்கிட்ட தப்பு செய்யுறக்காலம் இது..ஆனா ஒருநாள் கூட இவன் என்க்கிட்ட தப்பா பேசுனது இல்ல தப்பா பழகுனது இல்ல..அதலாம் உன்கிட்ட நிரூபிக்கனும்-னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்ல…எங்களப்பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் கிடையாது..நீ இதுமாதிரி திரும்பி பேசிட்டே இருந்தா உன்ன போலீஸ்க்கிட்ட கம்ப்ளைன் பண்ணி உள்ளத்தள்ளிடுவேன்..
ஜாக்கிரதை..உங்கள மாதிரி ஆளுங்க தான் பெண் சுதந்திரம் கெடவே காரணம்… உங்க பேச்சுக்கும் பொய்கதைக்கும் பயந்து எத்தனப்பெண்கள் தன் சொந்த அண்ணாக்கூடவே வெளியப்போக கூச்சப்படுறாங்க தெரியுமா ? ..ஒரு தங்கச்சிக்கு அண்ணாங்கிற சொந்தம் எவ்வளவு வரம் தெரியுமா ? ஒரு சினிமாக்குக்கூட அண்ணாக்கூட தனியா போக முடியல.. படம் பார்க்கதானே நீங்கப் போறீங்க ?..ஆனா யாரு யார்க்கூட வந்து இருக்கா–னு வேவுப்பாக்குறது தான் வேலையா போச்சு உன்னமாதிரி ஆளுக்கு… யாருனே தெரியாத ஒரு பொண்ணையும் பையனையும் ஒடனே லவ்வர்ஸ்-னு முடிவு பண்ணிடவேண்டியது..ஏன் அண்ணாக்கூட ப்ரெண்ட்ஸ் கூடலா வரமாட்டோமா ?அதக்கூட விடுவோம் , ஏன் பக்கத்துக்கடைக்கு கூட போக முடியல… போற வழியிலயே இது யாரு ? இது யாரு?–னு ஒரு நூறுப்பேர்க்காவது பதில் சொல்லிட்டுதான் கடைக்கே போக வேண்டி இருக்கு…கூடப்பிறந்தா தான் அண்ணா-னு இல்ல .. சித்தி பெரியப்பா வழிலையும் அண்ணா இருக்காங்க..அவுங்கலாம் எப்பவாது தான் வருவாங்க..இவன் என் அண்ணா-னு இனி எல்லாருக்கும் தெரியுற மாதிரி ஒரு போர்டு போட்டுக்கிட்டு தான் வெளியப்போனும் போல… அண்ணா தம்பி –னு சொல்லிட்டு பழகுனா தான் அது சரியான ரிலேஷன்சிப் –னு நினைக்குறத முதல்ல நிறுத்துங்க..வெறும் வாயால அண்ணா-னு சொல்லிட்டு தப்பா பழகுற டிக்கெட்டும் இருக்குங்க..அவுக்கள-லாம் நம்புங்க…எங்கள மாதிரி உண்மையா இருக்க ஆளுங்க-ல அசிங்கப்படுத்துறதே வேலையா போச்சு...இந்த மாதிரி புனிதமான உறவுகள புரிஞ்சிக்க நல்ல மனசு வேணும்..அதுலாம் உனக்கு எங்க இருக்கு..எப்ப பார்த்தாலும் அடுத்த வீட்டு-ல என்ன நடக்குது-னு இந்த வீட்ல என்ன நடக்குது-னு வேவு பாக்குறது தானே உன் முழு நேர வேலையே…இனிமே யாரையாவது தப்பா பேசி புரளி கிளப்புன-னு கேள்விப்பட்டேன் இன்னும் நாலு அறை சேர்த்து விடுவேன்..பார்த்துக்கோ..போய் உன் வீட்டு வேலையப்பாரு.. “ என மயூரி கோவமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..
” இது தான் நடந்துச்சு” என மகேஷ் பேச்சை முடிக்க
” அப்படியா ! யாரு அந்த பொம்பள-னு சொல்லு நானும் நாலு அறைவிடுறேன்..என் மருமகள் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் முத்து…நானும் என்னோட சின்ன வயசுல இதுமாதிரி நிறைய அனுபவிச்சு இருக்கேன்..என் அண்ணாக்கூட எங்கையும் வெளியப்போகவே விடமாட்டாங்க..நிறைய கட்டுப்பாடு..ஆனா அப்ப என் மருமகள் மாதிரி தைரியமா எதிர்க்க முடியல..எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்படி ஒரு புதுமையான மருமகள் எனக்கு கிடைக்கப்போறானு..ஆனா உன் மேல கொஞ்சம் கோபம் தான் டா..எப்படி நீ அப்படி நினச்சு இருக்கலாம்? நா உன்ன அப்படியா சொல்லிக்குடுத்து வளர்த்தேன்..” என நிகிலேஷ் அம்மா கூற
“சாரி அம்மா அதுக்கு தான் ரெண்டு பேரையும் உள்ள கூட்டிட்டுப்போய் மன்னிப்பு கேட்டேன்..இப்பவும் கேட்குறேன்..ரெண்டுப்பேரும் என்னை மன்னிச்சுடுங்க “
“ அட விடுங்க பாஸ் .. “ என மகேஷ் சமாதானம் செய்தான்..
“ அட என்ன மாப்பிள்ள இதுக்கு போய் சாரி-லாம் சொல்லிட்டு என் பொண்ணு தப்பா எடுத்துக்க மாட்டா..யாருடீ அது இப்படி பேசுனது உங்கள” என மாலா கேட்க
“ அந்த பாக்கியம் அக்கா தான் “ என மயூரி கூறினாள்
“அவளுக்கு இதே வேலையா போச்சு.. “ என கணேசனும் திட்ட..
“சரிங்க சம்பந்தி விடுங்க..சிலப்பேர் அப்படித்தான்..நாம இந்த காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடனும் .. உங்கப்பொண்ண எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு..இனி நீங்கதான் சொல்லனும்..”
“எங்களுக்கும் பரிபூர்ண சம்மதம்.. என்னமா மயூரி உனக்கும் சம்மதம் தானே ? “ என கணேசன் கேட்க..
”இருங்கப்பா இன்னும் இருக்கு “ எனக்கூறினாள்..
எல்லோரும் இன்னும் என்ன இருக்கு என அவளையே பார்த்தனர்..அவள் கூற நினைப்பதைப் புரிந்து கொண்டவனாய் நிகிலேஷ் சிரித்துக்கொண்டு பேசத்தொடங்கினான்..
“அத நான் சொல்லுறேன் அப்பா ..மயூரிக்கு ஒரு மூணு கண்டிஷன் இருக்கு..அத சொல்லத்தான இப்ப வந்தீங்க மயூரி ?”
“ஆமா அது உங்க அப்பா அம்மாக்கும் கண்டிப்பா தெரியணும்..அவுங்களும் முழுமனசா அத ஏத்துக்கணும்..அப்பதான் என் முடிவு சொல்லமுடியும்..”
”இவ அடங்கவே மாட்டா..கொஞ்சம் அந்த கண்டீஷன் லாம் போடாம இருந்தா என்ன? நல்ல இடம் கைவிட்டு போய்டக்கூடாது பிள்ளையாரப்பா… “ என மாலா மனதிற்க்குள்ளே புலம்பினாள்..
”என்னக் கண்டிஷன் மா ? “ என நிகிலேஷ் பெற்றோர்கள் கேட்க
“ அத நான் சொல்லுறேன்..” என நிகிலேஷ் ஒவ்வொன்றையும் கூறி அதற்கான காரணத்தையும் கூறினான்…
அதைக்கேட்டு முடித்ததும் நிகிலேஷ் அம்மா சட்டென்று வேகமாய்
எழுந்தாள்..எல்லாரும் திரு திருவென விழித்தனர்..
”போச்சு போச்சு அந்த அம்மாக்கு இது பிடிக்கலப்போல “ என மாலா மனதிற்க்குள் புலம்பிக்கொண்டே மயூரியை பார்த்தாள்
” என்ன ஆச்சு டி ஏன் எழுந்துட்ட ? “ என நிகிலேஷ் அப்பா கேட்க
“இருங்க நான் மயூரிக்கு ஒன்னு கொடுக்கனும் “-னு சொல்லிக்கொண்டே அவள் அருகே சென்றாள்..
எல்லாருடைய கண்களும் ஐஸ்க்கட்டியால் உறைந்ததுபோல மயூரி மீது இருந்தது..அருகே சென்றவள் சட்டென மயூரியை கட்டி அணைத்து முத்தமிட்டாள்..எல்லோருக்கும் அப்பொழுது தான் உயிரே வந்தது..
“இப்படி ஒரு மருமகள் இல்ல இல்ல இனி இவ என் பொண்ணு..நா போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கேன்..அதான் இப்படி ஒரு பொண்ணு எனக்கு கிடச்சி இருக்கா.. எங்களுக்கு பூரண சம்மதம் உன் கண்டிஷன் –க்கு..உனக்கு என் பையன பிடிச்சி இருக்காம்மா ? “ என நிகிலேஷ் அம்மா கேட்க
“ எனக்கும் பரிபூர்ண சம்மதம் “ என மயூரி கூறினாள்
“சூப்பர் பாஸ் வாழ்த்துக்கள் “ என மகேஷ் நிகிலேஷ்க்கு வாழ்த்துக்கூறினான்..
” நன்றி மகேஷ் “
“உண்மையா நாங்க தான் குடுத்து வச்சி இருக்கோம்..இப்படி ஒரு நல்ல சம்பந்தம் கிடைக்கும்-னு கனவு-லக்கூட நினச்சிப்பாத்தது இல்ல..
இவக்கண்டிஷன் காரணம் காட்டி எவ்வளவோ இடம் போய்டுச்சு..
ரொம்பக்கவலையா இருந்தேன்..இப்ப தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு “ என மாலா கூற
“போனவங்க போகட்டும் சம்பந்தி அவுங்களுக்கு இந்த பொக்கிஷம் பத்தி தெரியல…அவுங்கலாம் பணப்பேய்கள்.. “ என நிகிலேஷ் அப்பாக்கூற
“சரியா சொன்னீங்க !நானும் என் பொண்ணும் இதே தான் இவக்கிட்ட ஒவ்வொரு தடவையும் சொல்லுவோம்..ஆனா புரிஞ்சிக்கமாட்டா..இப்பவாது புரிஞ்சி இருப்பா “ என கணேஷன் கூற
“ ஆமாங்க..எப்படியோ இனி என் கவலை-லாம் முடிஞ்சுது..”
“அத்த எப்படி முடியும் பிள்ளையாருக்கு தேங்கா உடச்ச பிறகுதான முடியும் “ என மகேஷ் நக்கல் செய்தான்
“சரியா சொன்ன மகேஷ் ” என கணேஷன் கூறிக்கொண்டே சிரித்தார்..
“சரிங்க சம்பந்தி நல்ல நாள் பாத்து நிச்சயம் வச்சுக்குவோம்..சீக்கரமா என் மகள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக ஆசையா இருக்கு “ என நிகிலேஷ் அப்பா கூறினார்..
“அதுக்குள்ள என்ன அவசரம் அப்பா..எனக்கு மயூரிக்கிட்ட ஒன்னு கேட்கனும் இருங்க..” என நிகிலேஷ் கூற இன்னும் என்ன இருக்கு என அனைவரும் விழித்தனர்..
“ மயூரி உங்களோட எல்லா கண்டிஷன்-க்கு எனக்கு சம்மதம் இல்ல..இப்பதான் யோசிச்சுப் பாத்தேன்..தப்பு பண்ணிட்டேனு தோணுச்சு..உங்க மூணாவது கண்டிஷன் –ல எனக்கு உடன்பாடு இல்ல..எனக்கு நீங்க வரதட்சணை தந்தே ஆகனும் “ என நிகிலேஷ் கூற
அனைவரும் உறைந்துபோய் அவனையே பார்த்தனர்…
“ஹே என்னடா இப்படி சொல்லுற…உன்ன அப்படியா நாங்க வளர்த்தோம்.. ? “ என நிகிலேஷ் அப்பா அம்மா சீற
“இருங்க அப்பா அம்மா..எனக்கு வரதட்சணை வேணும்-னு தானே சொன்னேன்..அதுல என்ன தப்பு..என்ன வேணும்-னு கேட்டீங்களா ? “
மகேஷ் குழம்பியவனாய் “என்ன பாஸ் எப்பவும் சஸ்பென்ஸ் தான ? தேங்கா உடைக்குறமாதிரி பட்டுனு சொல்லுங்க..எங்களுக்கு மண்ட காயுது “
மயூரியும் குழம்பிய நிலையில் நிகிலேஷை பார்த்துக்கொண்டு இருந்தாள்
”கூல் , எனக்கு வரதட்சணையா மயூரியோட அன்பு தான் வேணும் “ என நிகிலேஷ் கூற அனைவரும் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தனர்..
“இதுக்கு தான் இவ்வள்வு பில்டப்பா ..ஏண்டா கொஞ்ச நேரத்துல எங்கள கதிகலங்க வச்சுட்டீயே “ என நிகிலேஷ் அப்பா கூறினார்
“ சும்மா அப்பா மயூரி-ய கொஞ்சம் வம்பு பண்ணேன்..”
“ நல்லா பண்ணிங்க போங்க..எங்களுக்கு உயிரே போய்டுச்சு “ என மகேஷ் கூற..
“என்னடி மாப்பிள்ள கேட்ட வரதட்சணைய தர உனக்கு சம்மதம் தானே “ என மாலா கிண்டலாய் மயூரியிடம் கேட்டாள்
“எனக்கு சம்மதம் இல்ல அம்மா .. “ எனக்கூறினாள்
“அட அடுத்த குண்டா .. இனி எந்த சஸ்பென்ஸ்-ம் வேண்டாமா..நாங்களாம் வயசானவங்க…எங்க இதயம் தாங்காது ..சொல்ல வேண்டியத முழுசா சொல்லு
“ என கணேசன் கூற
” என் அன்பு மட்டும் அவருக்கு போதும்மா அப்பா..ரொம்ப கஞ்ச தனமா-ல இருக்கு…என்னையே அவருக்கு வரதட்சணையா தரேனு சொல்லுங்க “ என மயூரி முடிக்க..எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது
“பாத்தீயா டா என் மருமகள அழகா உனக்கு பதிலடி தந்துட்டா “ என நிகிலேஷ் அம்மா அப்பா நக்கல் செய்தனர்..
போதும் பா இதுக்கு மேல வரதட்சணப்பத்தி பேசாதீங்க…முடியல என மகேஷ்
கூற அனைவரும் சிரித்தனர்….
---------------------------------------------------------சுபம்------------------------------------------------------