பிடித்த உணவு - பழங்கஞ்சி
சட்டி தேவை இல்லை
சுற்றிவிட எண்ணெயும்
தேவை இல்லை
சட்னியும் தேவையில்லை
காலை பரபரப்பில்
கால் வலிக்க
நின்று செய்ய
வேண்டியதில்லை
ஆனாலும் இன்று
காலை பொழுதில்
இதை தேடுவாரில்லை
பிரட் ஐ கடிக்கிறார்கள் '
சீரேல்ஸ் விழுங்குகிறார்கள்
சீரழிந்து போகிறது
வயிறும் வாழ்க்கையும்
எதையோ சாப்பிட்டு
வாழப்பவர்களாவது பரவாயில்லை
எதையும் சாப்பிடாமல்
தெருக்கடை சாயாவோடு
வேலைக்கு செல்வோர்
இன்று எத்தனை
எத்தனை இங்கு
காலையில் பசிப்பதில்லை
என்று பெருமை பரப்பும்
இன்றய தலைமுறையை
பார்த்து கோபம்கொள்ளவா
காலையில் சாப்பிடுவதில்லை
நானெல்லாம் என்பது
நாகரிகமாக மாறிப்போனது
நகரங்களின் நிலைமை
இதுதான் இன்று
அஞ்சு மணி விடிகாலையில்
அரக்க பறக்க வயல்
வேலைக்கு போன
ஆத்தா எத தின்னு போனா
குவளையில் ஊற வச்ச
மிஞ்சி போன சாதம்
இல்லை இல்லை
மிச்சம் வரணும் னு
அதிகமாய் சாதம் வடிச்சு
அந்தி இரவில் அதை
பானையில் ஊற வச்சு
சின்ன வெங்காயமும்
பச்சை மிளகும் கடிச்சு
குடிச்ச பழங்கஞ்சின்
சுவை மறக்குமோ
வெங்காயம் காரம் னு
குழந்தை நான்
சொல்லி நிற்க
சின்ன கருப்பட்டியும்
தந்து சிரிப்பா
கொஞ்சம் வெங்காயம்
நிறைய கருப்பட்டி னு
அள்ளி அள்ளி
குடிச்ச கஞ்சு சுவை
இன்றும் ஒட்டித்தான்
கிடக்குது நாக்கில்
வயிறு ரொம்ப
சாதம் தீர்ந்துபோக
அந்த பழங்கஞ்சு
தண்ணிய குடிக்க
அந்த வயிறு
குளிருமே அழகாய்
காலம் கஞ்சை
மறக்க சொல்லித்தந்தது
அம்மா அவள்
காலம் வரை
கஞ்சை மட்டுமே
குடித்தாள் காலையில்
கடவுள் கூப்பிடும்வரை
கட்டையாக தான்
திரிந்தாள் நோய்நொடி
வலி தெரியாமலே
என் மனைவி
வந்து சேர்ந்தாள்
வாய்க்கு ருசியாக
டிபன் தந்தாள்
என் குழந்தை
கஞ்சு என்றால்
என்ன என்று தான்
கேட்கும் இன்று
காலம் கஞ்சு
என்ற உணவை
மறக்க சொல்லித்தந்தது
கூடவே அது
நோயில்லாத வாழ்வின்
உணவு என்பதை
இல்லை என்றது
இல்லாத ஏழைகளின்
உணவு என்று
தப்பு பாடம்
நடத்தி நகர்ந்தது
நம்பி ஏமாந்தது
மனித கூட்டமும்
மந்தை மந்தையாய்
நகர்ந்து சென்றது
நூடுல்ஸ் பக்கம்
நிறத்தை இழந்து
நிஜத்தை மறந்து
திரியும் இந்த
மனித கூட்டம்
நான்கு நிமிடத்தில்
மைதா உப்புமாவும்
இரண்டு நிமிடத்தில்
மைதா நூடுல்ஸ்சும்
சாப்பிட்டு திரிந்தாலும்
ஒரு நிமிடத்தில்
பழங்கஞ்சி செய்யலாம்
என்று ஏன்
நினைக்க தவறியது
யாரோ விளம்பரத்தில்
சொல்வதை தேடி
வாங்கி உண்ணும்
நாம் தேட வேண்டியது
நம் பண்டைக்கால
உணவு பழக்கவழக்கங்களை தான்
என்று எப்போது உணரபோகிறோம்
அதன் முதல் துளியாய்
பழங்கஞ்சின் துளி
உங்கள் விரல் பட்டு
உங்கள் வயிறு நோக்கி
பயணிக்கட்டும் இன்று
என் எழுத்து மைத்துளி
ஈரம் காயும் முன்
பின்குறிப்பு:
படைப்பு பிடித்திருந்தால் மறந்துவிட்ட பழங்கஞ்சில் கொஞ்சம் மீன்குழம்பு கலந்து சுவைத்து பாருங்கள் ஒருநாள்.
யாழினி வளன்...