என் அம்மா

ஒவ்வொருவரும் வேதனையிலும் சாதனையிலும் உச்சரிக்க மறவாத அன்பின் மொழி

ஒரு துளி விந்து சுமந்து என்னை உயிராய் வடித்த படைப்பாளி

தான் கருவுற்ற நாள் முதல் கல்லறை செல்லும் நாள் வரை நம்மை ஓவியமாக்கத் தன்னைத் தூரிகையாக்கிய காரிகை

தன் குருதியில் கூட எனக்காக உணவு சமைத்தவள்
தன் முலைப்பாலோடு அன்பும் அறிவும் வீரமும் ஊட்டியவள்

உயிர்களை நேசிக்கச் சொன்னவள்
உறவுகளை அறிமுகப்படுத்தியவள்

என் விருப்பங்களை வடிவாக்க தன் தேவைகளை சுருக்கிக் கொண்ட தியாகி
நான் பிணிகண்டு படுத்தபோது தன் உறக்கம் தொலைத்தவள்

வான்மழை தழுவும்போது வெளியில் சென்ற பிள்ளைக்காக விண்ணை சபித்த தேவதை அவள்

ஒப்பனையற்ற அழகி அவள்

அப்பாவின் கோபக்குரல் ஒலிக்கும்போது எனக்கான ஆதரவுக்குரல் அவள்

சமையலறை டப்பாக்களில் ரகசிய வங்கி நடத்துபவள்

அவள் முகச்சுருக்கங்களைக் காணும்போதே என் கவலைகளை மரிக்கச் செய்யும் மந்திரம் அவள்

நான் காதலில் தோற்றபோதும் வாழ்க்கையில் தோற்றபோதும் தன் மடியை எனக்கு மருந்தாக்கியவள்

வைரநெஞ்சம் கொண்டவளாய் என்னை வளர்த்தபோதிலும் தன் ஒருதுளி கண்ணீரால் என்னை உருக்குலைப்பவள்

நம் வயது ஏற ஏற நமக்கே குழந்தையாய் மாறும் இயற்கையின் படைப்பு அவள்

கூடு பிரிந்து சென்றபோதும் தன் வளர்ந்த பிள்ளையின் வருகைக்காக காத்திருப்பவள்

தனது வாழ்நாள் முழுவதும் நமது சாதனைக்காக உழைத்த வாழ்நாள் சாதனையாளர்

அவள் வைத்த நெத்திலி மீன்குழம்பு மணம் இன்னும் என் நாசியில்
கூடவே அவள் வியர்வை மணத்துடன்.

எழுதியவர் : (20-Jun-17, 5:20 am)
Tanglish : en amma
பார்வை : 995

மேலே