அவளுக்கொரு சேதி சொல்லுங்கள்

[வாழ்வின் முற்பகுதியை இன்னதென்று அறியாமலேயே கழித்து விட்டு,பிற்பகுதியை நினைத்து ஏக்கமும்,பயமும் கொண்ட அத்துணை இளைஞர்களின் மனநிலையில் இருந்து என் எழுத்தால் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கிறேன்]


எத்திசையும் சுற்றித் தெரியும் காற்றே!நான் எண்ணியதையெல்லாம் புசித்துக் கொள்ளும் பூக்களே!நாளும் என் மேனி தீண்டிடும் மரஞ் செடி கொடிகளே! வீழும் நட்சத்திரங்களே!சூரிய சந்திரர்களே!காதல் தூதுக்கு தவம் கிடக்கும் இயற்கை சக்திகளே!என் இதயத்தின் ரகசியப் பக்கங்களை முன் திறக்கிறேன்.அவளுக்கு அவசரமாய் ஓர் செய்தி சொல்ல வேண்டும்.இயந்திர உலகத்தில் என் இதயத்தில் ஓரத்தில் உள்ள ஈரம் காயும் முன் அச்சேதியை உங்கள் மூலம் அவளுக்கு நான் சொல்லியாக வேண்டும்.இந்த பிரபஞ்ச வட்டத்தின் கன்னுக்குத் தெரியாத இடத்தில ஒளிந்திருக்கும் அவளுக்கு!என் கருப்பு வெள்ளை கனவுகளுக்கு உயிர் தரப்போகிறவளுக்கு!என் இதயத்தை கொள்ளையடிக்க போகிறவளுக்கு,அவசரமாய் ஓர் சேதி சொல்ல வேண்டும் இயற்கையே!


உன் மெல்லிய இசையால் என் கரங்கள் தீண்டிடும் பூங்காற்றே!சில பல மைல்களுக்கு அப்பால் அவள் மேனியை நீ தீண்டுவாய் என்பதை அறிவேன்..!அத்தீண்டலின் போது என் வார்த்தைகளை அவளுக்கு மொழிபெயர்த்திடு!கண்ணீராலும் காயங்களாலும் தன் இதயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிற ஒருவன் அவளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.வஞ்சகம்,துரோகம்,தோல்வி,ஏமாற்றம்,காயம்,கண்ணீர் இவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்ட ஒருவன் எஞ்சிய உள்ளதோடு வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றஇருக்கும் அந்த வானத்து தேவதைக்காக கண்ணீரின் விளிம்பில் காத்திருக்கிறேன் என்று சொல் !

என் கன்னத்தில் முத்தமிடும் ரோஜாக்களே!அவள் செவ்விதழ்களால் உங்கள் மேனி சிலிர்த்தாள் என்னவளுக்கு என் சேதி சொல்லுங்கள்.என் வாழ்வின் பல பகுதிகளை எனக்கு பிடித்த என்னை பிடிக்காதவர்க்கோளடு கழித்துள்ளேன் என்பதை காலம் எனக்கு நினைவுபடுத்தியது.அவர்கள் எண்ணத்தில் இருந்து என்னை கழித்த பிறகும்,அவர்கள் நினைவுகளால் கலிபுருக்கிறேன்.அவள் கருப்பு கூந்தலுக்கு அழகு சேர்ந்திடும் வெள்ளை மல்லிகையே நீங்களாவது என் வெள்ளை மனதை அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.இருபதுகளின் முற்பகுதியில் நிற்கும் என் மனதின் சொல்லமுடியாத பக்கங்களை ஆக்கிரமிக்க சில பென்கள்(பேனாக்கள்) எத்தணித்தன.அப்போதெல்லாம் நான் கொஞ்சம் தடுமாறிருக்கிறேன் ஆனால் ஒருபோதும் தடமாறியதில்லை.அது காதல் போல வாந்துபோனவைகள் காதல் அல்ல!அந்த வெள்ளை பக்கங்களுக்கு அவளால் மட்டுமே மறுமணம் நடக்கவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.பல சமயம் அப்பக்கங்களை என் கண்ணீர் மழையால் சுத்தம் செய்து வாசித்திருக்கிறேன் அவளுக்காக!

என் சொல்லுக்கு ஆடும் மா மரங்களே!என்னவளின் தூக்கம் களைக்காமல் என் எண்ணத்தை அவளிடம் பிரதிபலியுங்கள்!அவள் இல்லாமல் வாடும் நேரங்களில் தனிமையே எனக்கு உற்ற நண்பன் ஆனது,தலையணையே என் சோக கீதங்கள் கேக்கும் மித்ரனானது.இந்த உலகமே என்னை நிராகரித்து ஒதுக்கியது போலவும் விதி என்னை தனிமை காட்டில் சிறை வைத்தது போலவும் உணர்வெனக்கு!ஏமாற்றம் மட்டுமே கண்டவனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அவள் எப்போது வருவாள் எனக்கு கேட்டுச்சொல்லுங்கள்!ஆகாயத்தை காட்டிலும் எல்லையில்லாத அன்போடு அவளுக்காக நான் காத்திருப்பதாய் சொல்லுங்கள்!

ஆணின் இதயம் கல்லென்று உரைக்கும் நயவஞ்சகர்களே !பெண்ணின் ஏக்கங்கள் பாடும் எவரும் ஆணின் அன்பை புரிந்துகொள்வதில்லை.ஆணுக்குள்ளும் பெண்மை புதைந்து கிடக்கிறது.ஆணின் சொல்லமுடியாத உணர்வுகள் இன்னும் சவப்பெட்டியில் ஏற்றப்படவில்லை .ஆண் நெஞ்சுக்குள்ளும் பாசம் இருக்கிறது.ஆணுக்கும் அழத் தெரியும்!

என் உள்ளத்தையும் அவள் உச்சியையும் குளிரச் செய்யும் மழையே!திகட்டாத நேசத்தை அவளுக்காக ஒலித்து வைத்திருக்கிறேன் என என்னவளிடம் விவரமாக சொல்லுங்கள்.அவமானத்தால் தலை குனிந்து வீடு வந்த பொழுதுகளிலும்,ஏமாற்றங்கள் என்னை சில நேரம் நித்திரை கொள்ள செய்த பொழுதுகளிலும்,தோல்விகளால் நான் சுருண்டு போன சமயங்களிலும் தலையணையே எனக்கு தாயமடியாகியது என்பதை என் கண்மணிக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.

தழுவி அணைப்பதற்கு,தாயென்று உணர்த்துவதற்கும்,தாலாட்டு பாடுவதற்கும்,மெல்லிய விரல்களால் முடி கோதிவிடவும்,மூச்சு காற்று பட என் நெத்தியில் முத்தமிடுவதற்கும்,சோகங்கள் மறந்து பல பொழுதுகள் சுகமாய் பேசி களித்திடவும் பொன்மகளை எமக்கு காட்சிதரச் சொல்லுங்கள்!

இப்போதும் நிசப்தமாகி போன இந்த அழகிய இரவின் மையப்பகுதியிலும் என் எண்ணமெல்லாம் என்னவள் சூழ்ந்திருக்கிறாள்!ஆனாலும்,ஒரு இனம் காணாத அச்சம் அடி மனதில் பதிந்திருக்கிறது.புயலுக்கு பின்னும் அமைதி அடையாத என் நெஞ்சம்,அவளிடமும் தோல்வி கண்டுவிடுமோ என்ற பயம்,ஏனென்றால் அவள் என்னை ஏமாற்ற வாய்ப்பில்லை.

காற்றே,வான் மழையே,காதல் சின்னங்களே!வாழ்க்கை பயணத்தில் ஆயிரம் கோடி லட்சிய கனவுகளை அடிமனதில் சுமந்து கொண்டு வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒருவன் அவள் ஒருத்திக்கு தூது அனுப்பியிருக்கிறேன் என அவள் செவியோரம் ரகசியமாய் சொல்லுங்கள்.என் மிஞ்சிய இதயம் அதன் துடிப்பை நிறுத்திக்கொள்வதற்குள் என் கரம்சேர அவளை கன்முன்தோன்ற சொல்லுங்கள்.

காதலின் மௌன மொழிகளே!அவள் கனவுகளில் ஒரு சேதி சொல்லுங்கள் இன்னும் எத்தனை இரவுகள் கழிந்தாலும் அவளுக்காக நான் காத்திருப்பேனென்று.....!



கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (26-Jun-17, 9:44 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 245

மேலே