எனக்கும் ஆசை தான்
எனக்கும் ஆசை தான்...
அருவமாய் நெஞ்சில் புதைத்த உன்னை...உருவமாய் கண்ணில் பருகிட....
கடிதத்தால் உன் கரங்களை சிறையிட்டு...பதிலுக்காய் தவித்துக்கிடக்க...
உன் பதிலாய் நீ சிந்தும் ஒற்றைப்புன்னகையில் தலை கிறுகிறுக்க...
உன்னை சீண்டிக்கொண்டே இருக்கையில்...நீ அறியாமல் உன்னை ரசிக்க...
எனக்கும் ஆசை தான்...
என் நட்பு வட்டத்தில் உன்னையும் நுழைக்க
போராடி உன் கரம் பிடிக்க
என் அன்புத்தமையன்களை உன் தோழர்களாய் பார்க்க
உன் செல்லத்தங்கையை என் தோழியாய் சேர்க்க
எனக்கும் ஆசை தான்..
என் லட்சியக் கனவுக்கான பாதையை உன் உதவியோடு கடக்க...
பின் இரவில் உன்னோடு நிலாக்கவிதை வாசிக்க
தலையணை மறந்து உன் மடியில் உறங்க...
என் துயரங்களை உன் தோளில் சேர்க்க
என் மகிழ்ச்சிகளை உன் மாரில் சேர்க்க
என் மடி தவழும் முதல் மழலையாய் உன்னை ஏந்த...
உனக்காய் நானும் எனக்காய் நீயும்
விட்டுக்கொடுத்து வாழ...
தோல்சுருங்கிய காலத்தில் நமக்கு நாமே துணையாக...
என் இறுதிமூச்சு உன்னைத் தீண்டி முடிவுற..
என்றென்றும் ஆசைதான்...