துணை
![](https://eluthu.com/images/loading.gif)
துணை
அன்று தபாலில் வந்த என் நண்பன் ராஜேந்திரனின் திருமணமாகி அறுபது ஆண்டுகளாக ஒற்றுமையான கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் குடும்ப வாழ்வை சிறப்பிக்கும் வைரவிழாக் கொண்டாடத்துக்கு எனக்கு வந்த அழைப்பிதழ் என் நினைவுகளை பல தசாப்தங்களுக்குப் பின்னோக்கி அழைத்துச் சென்றது
விவாகரத்து பிரபல்யமாக இருந்து வரும் இக் காலக் கட்டத்தில் எனது நண்பன் ராஜேந்திரன் திருமணமாகி அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது அதை சிந்தித்து பார்க்கும் போது அறுபது ஆண்டுகள் இணைபிரியா தம்பதிகளாக வாழும் ராஜேந்திரனையும் வாசுகியையும் இட்டு பெருமைப் பட்டேன். இளம் சமூதாயத்துக்கு அவர்கள் ஒரு உதாரணம்.
ராஜேந்திரனின் காதல் திருமணம் எதோ நேற்று நடந்த மாதிரி எனக்கு இருந்தது. ராஜேந்திரனும் நானும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக அறிவியல் துறையில் படித்தவர்கள். ராஜேந்திரனுக்கு மெல்லிய உடம்பு. எபோதும் கலகலப்பாக பேசுவான். சிரித்த முகம். யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே 22 கிமீ தூரத்தில் உள்ள இடைக்காடு கிராமம் அவனின் பிறப்பிடம். இவ்வூர் கல்விமான்களுக்கு பெயர் பெற்றது. ராஜேந்திரனின் தாயும் தந்தையும் அருகில் உள்ள அச்சுவேலியில் ஒரு கல்லூரியில் ஆசிரியர்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பிள்ளைகளில் ராஜேந்திரன் மூத்தவன். அவனுக்கு அடுத்தது மாதவி. கடைக்குட்டி மகேந்திரன்.
ராஜேந்திரனை நான் முதலில் சந்தித்தது கொழும்பு பல்கலைகழகத்தில் முதலாம் நாள் சீனியர்கள் நடத்திய ராகிங் என்ற பகிடிவதையின் போது. பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவரின் அறிமுக உரையைக் கேட்க புதிய மாணவர்கள் எல்லோரும் கிங் ஜோர்ஜ்; அரங்குக்கு முன்னால் உள்ள வெளியில் கூடி இருந்தார்கள். உரை முடிந்ததும் சீனியர்கள் வீசிய அழுகிய தக்காளி,. வாழை பழம், சேறு ஆகியவை பல திசைகளில் இருந்து கூடியிருந்த புதிய மாணவர்களை நோக்கி வந்தது. அச்சமயம் என்னருகே திரு திரு வென்று முழித்துவாரே இருந்த மாணவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. அந்த மாணவனைக் காப்பாற்ற அவனது உடலை மறைத்தவாரே அவன் முன்னால் நின்று பழங்களும் சேறும் அவன் மேல் விழாமல் அவனைக் காப்பாற்றினேன். ராகிங் முடிந்ததும் அந்த மாணவன் என்னிடம் வந்து என்னை கட்டி அணைத்துவாரே
“ நண்பா. நீர் செய்த உதவிக்கு நன்றி. என் பெயர் ராஜேந்திரன். உமது பெயர் என்ன?. நீர் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து வந்தவரா”? அந்த மாணவன் என்னைக் கேட்டான்
“ இல்லை. எதற்காக அப்படி கேட்கிறீர்? நான் கேட்டேன்
“கொழும்பில் படித்து பல்கலைகழத்துக்கு வந்த மாணவர்கள்l
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மாணவர்களைக் குறைவாக மதிப்பவர்கள். ராகிங் செய்யும் போது அவர்களைக் குறிவைத்து தாக்குவார்கள் என்று என்னோடு யாழ்ப்பாணம் இந்துக் கலூரியில் படித்து பல்கலைகழத்துக்கு வந்த நண்பர்கள் சொன்னார்கள். நீர் எந்த கல்லூரியில் இருந்து வந்தனீர்? உமது பெயர் என்ன” ராஜேந்திரன் என்னைக் கேட்டான்.
“ அப்படி ஒரு போதும் நீர் கருதக் கூடாது. என் பெயர் முகுந்தன். இலங்கையின் பல பகுதிகளில் இருந்து வந்த புதிய மானவர்கள் இந்த கூட்டத்தில் இருகிறார்கள். நான் படித்தது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில். கொழும்பு பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என்று பாகுபாடு இருக்க கூடாது “ என்றேன் நான்.
அந்த சம்பவத்தின் பின் எனக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே ஆரம்பித்த நட்பானது அவன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானம் படித்த வாசுகியை காதலித்து பதிவு திருமணம் செய்த போது சாட்சியாக இருந்ததை நான் மறக்வில்லை.
ராஜேந்திரன் கணக்கில் புலி. ஆங்கிலம் பேச கூச்சப்படுவான். ப்ரிட்ஜ் என்ற காரட் விளையாட்டில் சூரன். ராஜேந்திரன் படித்து முதலாம் வகுப்பில் சித்தி பெற்று இலங்கை வருமான வரி திணைக்களத்தில் மதிப்பீடு செய்யும் அசெசர் வேலை] கிடைத்து கொழும்பில் வேலை செய்ய ஆரம்பித்தான். நான் தொலைத் தொடர்பு திணைக்களத்தில் பொறியியலாளனாக வேலை செய்ய ஆரம்பித்தேன். அரசில் வேலை செய்பவர்கள் ஒரு சிலர் வெள்ளவத்தையில் ஒன்றாக வசிக்கும் சம்மரி என்ற வீடு ஒன்றில் நாம் இருவரும் ஒரே அறையை பகிர்ந்து எமது நட்பை வளர்த்தோம்.
1956 இல் ராஜேந்திரன் – வாசுகி திருமணம் செல்வச்சன்னதி கோவிலில் நடந்தேறியது. ஆரம்பத்தில் வாசுகியின் தந்தை தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்’பு ராஜேந்திரன் தனது தூரத்துச் சொந்தக்கரப் பையன் என்று விசாரித்து அறிந்ததாலும் அதோடு . அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாலும் தன் மகளின் திருமணத்துக்கு மனைவியோடு வந்திருந்தார்.
ராஜேந்திரன் வாசுகி தம்பதிகளுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களுக்குள் முதலில் ஒரு ஆணும் அதை அடுத்து ஒரு பெண்ணுமாக செல்வேந்திரனும். மீராவும் பிறந்தார்கள்.. இருவரும் தந்தையை போல் படிப்பில் கெட்டிக்காரர்கள். இருவரும் புலமைப் பரிசு பெற்று செல்வா கனடாவுக்கும் மீரா இங்கிலாந்துக்கும் மேல் படிப்புக்குச் சென்றனர்.
ஒரு நாள் என் மனைவியோடு ராஜேந்திரன் வீட்டுக்கு போன போது அத் தம்பதிகளின் ஒற்றுமையைக் கண்டு பெருமை பட்டேன். வாசுகி ராஜேந்திரனை பெயர் சொல்லி அழைக்காமல் “அத்தான்” என்று அழைத்ததில் ஒரு பரிவும் கரிசனையும் தொனித்தது. அதே மாதிரி ராஜேந்திரனும் வாசுகியை “குஞ்சு” என்று அழைத்ததில் எவ்வளவுக்கு அவன் தன் மனைவி மேல் பற்றுதல் வைத்திருக்கிறான் என்பதை அறிய எனக்கும் என் மனைவிக்கும் வெகு நேரம் எடுக்கவில்லை. ராஜேந்திரனுக்கு நீரழிவு வியாதி இருபதால் அவனின் உணவை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது வாசுகியின் பொறுப்பு. அவனை தாய் போல் வாசுகி கவனித்தாள், பிள்ளைகளின் பிரிவு அவர்களை எவ்வளவுக்கு வாட்டுகிறது என்பதை நான் உணர்தேன். அடிகடி இருவரும் செல்வாவையும் மீராவையும் பற்றியே பேசுவார்கள்.
“ முகுந்தா. நீ என்கும்பதில் ஒருவனாகி விட்டாய் உன்னிடம் ஓன்று கேட்கலாமா?
“ தயங்காமல் கேள் ராஜேந்திரா”
“ என் மகனும் மகளும் கனடாவிலும். இங்கிலாந்திலும் இருந்து படித்து முனைவர்களாகி திரும்பியவுடன் நாங்கள் இருவரும் கண் மூட முன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து பேரப்பிள்ளைகளைக் காண ஆசை படுகிறோம்.
“ எல்லோருக்கும் பேரப்பிள்ளைகளைக் காண ஆசை இருக்கும் தானே” நான் சொன்னேன்.
“ எங்களுக்கு வரும் மருமகளும் மருமகனும் எங்கள் குடும்பத்துக்குள் பிரச்சனைகளை உருவாக்கி பிரிவை கொண்டுவரக் கூடாது.அதனால்..”
“ அதனால் என்று சுற்றி வளைக்காமல் உன்விருப்பதை சொல் ராஜேந்திரா”
“ முகுந்தா உனது மகன் கண்ணனும், மகள் ரா]தாவும் எங்கள் குடும்பத்துக்கு மருமகனாகவும். மருமகளாகவும் வரவேண்டும் என்பது எனக்கும் வாசுகிக்கும் விருப்பம். உன் விருப்பத்தை சொல்”
நான் சில வினாடிகள் யோசித்து விட்டு “ராஜேந்திரா” எதுக்கும் என் பிள்ளைகளோடு பேசி அவர்கள் சம்மதம் கேட்டு உங்களுக்கு பதில் சொல்லுகிறேன். எனக்கு அவகாசம் தா” என்றேன் நான்.
******
நாம் நினைப்பது ஓன்று நடப்பது வேறொண்டு. செல்வாவும் மீராவும் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பவில்லை. அவர்கள் இருவரும் தாய் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யவில்லை.
ஒரு நாள் ராஜேந்திரனை சந்தித்தபோது அவன் சொன்ன வாரத்தைகள் எனக்குப் பரிதாபமாக இருந்தது
“ முகுந்தா என் பிள்ளைகள் என்னையும் வாசுகியும் ஏமாற்றி விட்டார்கள்” ராஜேந்திரன் சொன்னான்.
“ ஏன் என்ன நடந்தது”
“என் மகன் செல்வா முனைவராகி டொரோண்டோ பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக வேலைகிடைத்து இலங்கைக்கு வராமல் அங்கேயே நின்று விட்டான்.”
“ அது அவனுக்கு நல்லது தானே” ராஜேந்திரா
“ அது மட்டுமல்ல அவன் தன்னோடு லெட்சரராக வேலை செய்யும் கனேடிய வெள்ளைக்காரி ஒருத்தியை திருமணம் செய்து விட்டான்.”
“ அப்போ மீராவுக்கு என்ன நடந்தது.”?
“ அவளும் அவளோடு வேலை செய்யும் ஒரு இங்க்லீஷ்காரனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்” இப்போ எங்களின் கடைசி காலத்தில் எங்களை கவனிக்க பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துணை” என்றான் ராஜேந்திரன் கண் கலங்க.
“ இந்தக் காலத்தில் நாங்கள் பிள்ளைகளை கட்டுபடுத்த முடியாது. அவர்களை நம்பி வாழ முடியாது. எதோ அவர்கள் நல்லாக அவர்கள் விருப்பப் படியே எங்கிருந்தாலும் வாழட்டும். அதை பற்றி நீயும் வாசுகியும் காவலைப்படாமல் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழுங்கள்” என்று அவனையும் வாசுகியையும் தேற்றிச் சென்றேன்.
******
ராஜேந்திரன்- வாசுகியின் திருமண வைர விழாவுக்கு உறவினர்களும், அவர்களோடு ஒன்றாக வேலை செய்தவர்களும் திரண்டு வந்திருந்தனர், சில அரசியல் வாதிகளும் சமுகம் தந்திருந்தனர்.
ஐயர் ஒருவர் ஓமம் வளர்த்து திருமணத்துக்கு செய்யும் கிரிகைகள் செய்வது போன்று செய்த .பின்னர் இருவரும் மாலை மாற்றி, அதை அடுத்து ஒரு பெரிய கேக்கை அவர்கள் இருவரையும் கொண்டு வெட்டுவித்தனர்.. ஒரு சிலர் தம்பதிகளின் ஒற்றுமையான குடும்ப வாழ்வைப் பற்றி உரையாற்றினார். என்னை பேச அழைத்த போது நான் எப்படி ராஜேந்திரனோடு அறிமுகமானேன். தம்பதிகளின் காதல் எப்படி பல்கலைகழகத்தில் வாழ்ந்து என்பதை நகைச்சுவை கலந்து பேசினேன் உரைகளுக்கு பின் ஒரு உஞ்சலில் தம்பதிகளை வைத்து மங்காள இசை முழங்க தாலாட்டு பாடி உஞ்சலை ஆட்டினார்கள்.
அந்த வைர விழாவுக்கு செல்வனும் மீராவும் வெளிநாட்டில் இருந்து வந்திருந்து எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
நான் செல்வாவை பார்த்து கேட்டேன் “ என்ன செல்வா, உமது மனைவியைக் காணோம். அவளைக் கூட்டி வரவிலலையா”?
“இல்லை அங்கிள்,. எங்களுக்குள் கருத்து வேற்றுனம அடிக்கடி ஏற்பட்டதால் நான் என் மனைவியை மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து செய்து, எங்கள் உறவுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டேன் “ என்றான் செல்வன்.
நான் மீரா பக்கம் திரும்பி“ என்ன மீரா உன் கணவனுக்கு என்ன நடந்தது?. உன் திருமணக் காதல் திருமணம் என்று கேள்வி பட்டேன்.. அவர் உன்னோடு வரவில்லையா?
“ இல்லை மாமா. அவர ஒரு சரியான சந்தேகப் பேர்வழி. எனக்கு வேறு ஆடவர்களோடு தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார். நான் எந்த ஆடவனோடும் சிறிது பேசுவது அவருக்கு பிடியாது. சரியான பொசெசிவ் போக்கு உள்ள மனிதன். அதனால் வீட்டில் எபோதும் சண்டை. இரண்டு வருட திருமண வாழ்க்கைக்குப்பின் அவரை விவாகரத்து செய்து; விட்டேன். என் படிப்புக்கு] வேறு ஒருவன் கணவனாகக் கிடைக்காமலா போவான்? என்றாள் மீரா
நான் அவர்கள் பதில்களை கேட்டு அசந்து போனேன். திருமண வாழ்கையை எதோ ஆடை மாற்றுவது போல் என நினைத்து விட்டார்களா இவர்கள் என்றது என் மனம்.
“ அது சரி மாமா எங்கைளைப் பற்றி விசாரிக்குரீர்களே உங்கள் பிள்ளைகள் கண்ணனும் ராதாவும் எப்படி இருக்குறார்கள்”? செல்வன் கேட்டான்.
“ கடவுளே என்று அவர்களுக்கு குறை ஒன்றுமில்லை. இருவருக்கும் திருமணமாகி பத்து வருடங்களாகி விட்டது. இருவரும் அரசாங்கத்தில் அதிகாரிகளாக இலங்கையில் வேலை செய்கிறர்கள். கண்ணனுக்கு இரு மகன்கள், ராதாவுக்கு மூன்று மகள்மார் உண்டு. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், என்பதும் ஒருவன் ஒருத்திக்கு மட்டும் என்பதும் நம் முன்னோர்களின் கூற்று, உங்கள் பெற்றோர் அதன்படி வாழ்கிறர்கள். முதுமை காலத்தில் ஒரு துணை அவசியம்.”” என்றேன் நான் சிரித்தபடியே.
ஊஞ்சலில் இருந்த ராஜேந்திரனும் வாசுகியும் நான் அவர்களின் பிள்ளைகளுக்குக் சொன்ன பதிலைக் கேட்டு முகத்தில் புன்முறுவளோடு இருந்தனர்.
******.