சக்களத்தி

சக்களத்தி

அந்தி சாய்ந்தால் போதும்
அலங்கரித்துக் கொண்டு
அனுதினமும் வந்து விடுகிறாள்!
தினமும் இவளுக்கு இதுவே
வாடிக்கையாக மாறிவிட்டது.
என்னவன் வீடு திரும்பும்
நேரம் பார்த்து நிதமும்
வந்து சேர்ந்து விடுகிறாள்!
என்னவன் போகும் இடமெல்லாம்
பின்தொடர்ந்து செல்கிறாள்.

நீ தான் என் உலகமெனே
என்னையே சுற்றிச் சுற்றி வந்து
எனைக் காதலால் குளிப்பாட்டிய
என் ஆருயிர்க் கள்வனை
என்ன வசியம் செய்தாளோ?
என்னவன் சில நேரங்களில்
பித்து பிடித்தவனைப் போல்
அவளையே வெறித்து நோக்குகிறான்!
வேதனையில் இருக்கும் என்னிடமே வந்து
அவளது அழகினை ஆராதிக்கிறான்.

மனம் மறைக்க நினைக்கும் கசப்பை
முகம் காட்டி கொடுத்து விடும் போலும்!
வாடிய என் முகம் கண்டே
வேதனை உணர்ந்து கொண்டான் போலும்
மெல்லிய என் கரம் பற்றி
நெற்றியில் பதிந்த இதழ்கள்
"நானிருக்கிறேன் உனக்காக"
என சொல்லாமல் சொல்லியது!
வாஞ்சையோடு என்னை அவன்
வாரி அணைத்ததைக் கண்டு
என்னவன் இனி தனக்கு இல்லை
என்ற ஏமாற்றத்தில், ஏக்கத்தில்
தேயத் தொடங்கி விட்டாள்
தேனிலவு என்ற தேவதை...!!!

எழுதியவர் : ரம்யாநம்பி (13-Jul-17, 7:24 pm)
சேர்த்தது : ரம்யா நம்பி
Tanglish : sakkalathi
பார்வை : 195

மேலே