பொதிகைச் சித்தரின் போர்ப்பறை

கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருந்துநர், பிரதிமேம்படுத்துநர், மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பவர், விற்ற பணத்தில் பக்கத்துக் கடையிலேயே புத்கங்கள் வாங்கிவிடும் அதிதீவிர வாசகர், கல்விப் புலத்துக்கு வெளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர், சிற்றிதழ்களில் இடைவிடாமலும் சளைக்காமலும் தொடர்ந்து விவாதங்களை நிகழ்த்திக்கொண்டிருப்பவர் என்று வே.மு. பொதியவெற்பனுக்கு பல முகங்கள் உண்டு. அவருக்குப் பொதிகைச் சித்தர் என்ற பெயரும் உண்டு. குடந்தை, தஞ்சை, கோவையென்று வாழ்க்கையின் போக்கில் நகர்ந்துகொண்டிருக்கும் அவரது கலை இலக்கிய அரசியல் பயணம், தற்போது பெங்களூருவில் மையம் கொண்டிருக்கிறது.



புதுமைப்பித்தனைக் களங்கப்படுத்தும் விமர்சனங்கள் வரும்போதெல்லாம் அதை முன்னின்று எதிர்ப்பதைக் கடமையாகக் கொண்டவர் பொதியவெற்பன். திராவிடக் கருத்தியல் மீதான தாக்குதல்களுக்கும் அவ்வாறே அவர் எதிர்நின்று களமாடிக்கொண்டிருக்கிறார். கலை இலக்கியம், அரசியல் செயல்பாடுகள் இரண்டையும் தனித்துப் பார்க்காதவர், இரண்டும் ஒற்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்க பிணைந்திருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பழந்தமிழ் இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர், இடைக்காலத்து ரசனை மரபிலும் மனம் தோய்ந்தவர், அதே அளவுக்கு நவீன இலக்கிய வடிவங்களையும் அதன் உத்திகளையும் வரவேற்பவர். அவரது அரசியல் நிலைப்பாடுகளும் அப்படியே. தமிழ்த் தேசியம், திராவிடக் கருத்தியல், பொதுவுடைமைச் சித்தாந்தம் என்று அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அவர் அவற்றின் சாரமில்லாத கொள்கைத் திட்டங்களையும், அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் முழக்கங்களையும் அறவே வெறுத்து ஒதுக்குபவராக இருக்கிறார். இன்னும் நிகழ்த்துக் கலைகளின் காதலன், தமிழ் மெய்யியல் ஆய்வாளர் என்று அவரது பங்களிப்புகள் சொல்லி முடிக்க இயலாதவை.



தமிழின் முக்கியமான கட்டுரையாளர்களுள் பொதியவெற்பனும் ஒருவர். ஆனால், இன்னமும் சிற்றிதழ்களின் வாசகர் பகுதிகளில் மிதமிஞ்சிய ஆர்வத்தோடு அவரது எதிர்வினைக் கடிதங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ‘போலிகளின் நரிமுகத்தை, பொய்மைகளின் அறிமுகத்தைத் தோலுரித்துக் காட்டவந்தேன்’ என்ற சுய பிரகடனம் செய்துகொண்டவர் அவர். நாளும் தினமும் அதுதான் அவரது பணி. அதன் ஒரு பகுதியே இந்த எதிர்வினைக் கடிதங்கள். அதிலும் தனது வாதத்தை நேரடியாகச் சொல்லாமல் மேற்கோள்களின்வழியாக நிறுவ முயற்சிப்பது அவரது உத்தி. ஆய்வுலகின் அலுப்பு தரும் விஷயங்களில் ஒன்றாக மாறிப்போயிருக்கும் மேற்கோள் காட்டும் உத்தியை அவர் ரசனைக்குரியதாக தனது எழுத்துக்களில் உருமாற்றம் செய்திருக்கிறார்.



குடந்தையில் அவர் இருந்தபோது எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ் முதலான நவீன இலக்கிய முன்னோடிகள் பலரும் அவருடைய மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். எழுத்தாளர்களின் பதிப்பு முயற்சிகளுக்கும் அவர் துணையாய் இருந்திருக்கிறார். அப்போது அவர் இடதுசாரி இயக்கங்களிலும் மிகத் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டும் இருந்தார். கவிஞர் பிரமிளுக்கு முதல் விருது அளித்துப் பாராட்டியது பொதியவெற்பன்தான். அதே நேரத்தில் அவர் பாப்லோ நெரூதாவுக்கும் ரசிகர். அவரது பதிப்பகமே ‘சிலிக்குயில்’ என்ற பெயரில்தான் இயங்குகிறது.



சிலிக்குயில் வெளியீடாக வெளிவந்த பொதியவெற்பனின் பறை-1990 தொகைநூல் சிற்றிதழ்ப் பரப்பில் பெரும் கவனத்தை ஈர்த்தது. காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் நோபல் பரிசு உரையும் ஹூலியோ கொர்த்ஸாரின் சிறுகதையும் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. பழமலயின் ‘சனங்களின் கதை’, சாருநிவேதிதாவின் ‘எக்ஸிடென்ஷியலிசமும் பேன்சி பனியனும்’ ஆகிய படைப்புகள் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டிருந்தன. அப்போதைய இலக்கியச் சூழலில், திசைமாற்றத்தை உருவாக்கிய தொகுப்பு இது. ஆண்டுக்கொரு தொகுப்பு வெளிவரும் என்று அப்போது பொதியவெற்பன் அறிவித்திருந்தாலும் அது கனவுத் திட்டமாகவே மாறிப்போனது.



இருபத்தைந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, பறை-2015 என்ற மற்றொரு தொகைநூலைக் கொண்டுவந்திருக்கிறார் பொதியவெற்பன். மணல்வீடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் மொழியாக்கங்கள், ஆவணப் பதிவுகள், விரிவான நூல் விமர்சனங்கள், சமூக நீதிப் போராட்ட வரலாறுகள், பெண்ணிய அரசியல் கட்டுரைகள், கலையனுபவப் பகிர்வுகள், கோட்பாட்டுப் பகுப்பாய்வுகள், நினைவலைகள், பயண அனுபவங்கள், புனைவுகள், கவிதைகள் என்று பல்வகைப்பட்ட பிரிவுகளின்கீழ் அரசியல், கலை அனுபவம் சார்ந்த படைப்புகள் அடங்கியுள்ளன. ஆ. சிவசுப்பிரமணியன், வீ. அரசு, கி. நாச்சிமுத்து என்று கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்கள், ம.இலெ. தங்கப்பா, இன்குலாப், அம்பை என்று மூத்த எழுத்தாளர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைய தலைமுறை படைப்பாளிகள் என அனைத்துத் தரப்பினரின் பங்களிப்போடு வெளிவந்திருப்பது இத்தொகுப்பின் சிறப்புகளில் ஒன்று. பறை-2015, சமகால தமிழ் கலை இலக்கியம் மற்றும் அறிவுலகச் செயல்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் வரலாற்று ஆவணம்.



பறை முதலிரண்டு தொகுப்புகளுக்கும் இடையில் கால் நூற்றாண்டு காலம் கடந்திருக்கிறது. பறை தொகுப்பு பற்றிய சு. வேணுகோபாலின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வருகின்றன. ‘வசதி வாய்ப்புகளை இழந்து எதிர்த்து நிற்கும் இவர்களாலேதான் உருப்படியான காரியங்கள் நடக்கின்றன.’





பறை 2015 (தொகைநூல்)

தொகுப்பு. வே.மு. பொதியவெற்பன்,

விலை: ரூ. 150.

மணல்வீடு வெளியீடு, ஏர்வாடி, 636453.

தொடர்புக்கு: 98946 05371



வே.மு. பொதியவெற்பனின் முக்கியமான பிற நூல்கள்



புதுமைப்பித்தன் கதைகள் அகலமும் ஆழமும் (ஆய்வுக் கட்டுரைகள்)

சூரியக் குளியல் (கவிதைகள்)

சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும் (மணிக்கொடிக் கலைஞர்களைப் பற்றிய ஆய்வு)

புதுமைப்பித்தமும் பிரேமிள் சித்தமும் (கட்டுரைகள்)

திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் (கட்டுரைகள்)

புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் (தொகுப்பு)

செல்வ புவியரசன்

எழுதியவர் : (15-Jul-17, 5:13 pm)
பார்வை : 72

மேலே