அணையாடை

கிக், கிக்கீ! கிக், கிக்கீ!! கிக், கிக்கீ!!! கிக், கிக்கீ!!!!
அய்யோ கடவுளே, கடவுளே!!

ரமேஷ், ரமேஷ் நீங்க ஆபீஸ் போக
அலாரம் வச்சா, உடனே எழுந்து தொலையனும்...
சுத்தி தூங்குற எல்லோரையும் இப்படி
படுத்தக்கூடாது...?

நானா அலாரமா? இல்லமா
நான் வைக்கல....! என்றான் ரமேஷ்.

சிறுது நொடி யோசித்தேன்,
புரிந்தது.
வைத்தது நான் தான்!
அலுவலகத்தில் இன்று "ஜிஸ்டி"
மீட்டிங்.

எழுந்த மறு நொடி,
இடுப்பு பகுதியில் ஊசி கொண்டு குத்தும் வலி.
பல்லை கடித்தபடி கழிப்பறை சென்று வந்தேன்.

அடுப்படியை சுத்தும் செய்ய, பிடி
துணியை தேடுகிறேன், அகப்படவில்லை!

இந்த கமலா நேத்து வேல முடிச்சுட்டு
எங்க போட்டு தொலைஞ்சாளோ தெரியல...

முகம் கழுவ எண்ணி,
தண்ணீர் கொண்டு அலம்பினேன்...
விரல் வைத்து தேய் தேயென தேய்கிறேன்,
பாழாப்போன கண் மை மட்டும் கரைய மறுத்தது,
எண்ணெய் வேண்டுமே? தேடுவோம்!

தேங்காயெண்ணை தேடி பிடித்தால்,
அது சோபா இடுக்கு சந்தில் சத்தமில்லாமல்
சாய்ந்து கிடந்தது..

முழங்கால் முட்டு கொடுத்து
சோபாவை தள்ள முயன்றேன்,
லேசாக அசைந்தது சோபா...
அதைவிட அதிகமாக மூட்டு அசைந்ததாய்
தோணவே விலகி அடுப்படிக்கு
நகர்ந்துவிட்டேன்!

தரையில் கிடந்த பிடிதுணி கொண்டு,
அடுப்படி சுத்தம் செய்து,
தள்ளி நின்று பார்த்தால்
பளிச்சென இருந்தது.

கண்ணாடியில் முகம்
அகோரமாய் பட்டது,
மேலும் இடுப்பும், வயிறும்
சற்று வீங்கி இருந்ததால்
வருத்தமாயிருந்தது....!

இனி வளைந்து நிமிர்ந்து
வேலை செய்தால் உடல்
மெலிந்து விடுமென தெரிந்து,
சோபா நோக்கி வேகமாய் நடந்து,
தரையில் முட்டி இட்டு,
வளைந்து, கையை நீட்டி எண்ணெய்
பாட்டிலை கைப்பற்றினேன்.

எழுந்தவுடன் வயிறு லேசாக
உள்சென்றது போல் தோன்றியது
மனதுக்கு இதமாய் இருந்தது.

சந்தோஷத்தில்,
காபி குடிக்க எண்ணம் கொப்பளிக்க,
பிரிட்ஜ் திறந்தால், பால் பாத்திரத்தில்
ஒரே ஒரு தேக்கரண்டி பால் மட்டுமே
ஒட்டி இருந்தது..!

இந்த கமலாவுக்கு புத்தியே இல்ல,
பால் இல்லாத பாத்திரத்தை
பிரிட்ஜ்ல வச்சிருக்கா கடங்காரின்னு,
கத்தியபடி டமார்ன்னு பிரிட்ஜ் கதவ
சாத்தி அடைசேன்

புதுப்பாலை பாத்திரத்தில் இட்டு,
அடுப்பேற்றினேன்!
காய்ச்சும் வரை அருகில் இருக்க
உத்தேசப் பட்டு நின்றேன்....

ஒரு நிமிடம் ஆகிற்று,
அருகில் இருந்து தேங்காயெண்ணை பார்த்து,
மையகற்ற முடிவெடுத்து,
அருகில் இருந்து வாஷ் பேசினில்
மை களைய ஆரம்பித்தேன்..

மை கரைய கரைய,
பள பள முகம் வெளிப்பட்டது ...
சிரித்து பார்க்கிறேன்,
என் கன்னக்குழிகள் சுண்டி இழுத்தது..

கண் சிமிட்டி சிமிட்டி பார்த்தேன்,
இளமை துள்ளியது,
முடித்து வைத்த கொண்டையை,
அவிழ்த்து விட்டு, தலையை அசைத்து பார்த்தேன்,
அத்தனை அழகு!!!

மெய்மறந்து நிற்க,
உஷ் ஷ்ஷென சத்தம் கேட்டு திரும்பினால்,
பால் பொங்கி வழிந்தோடுகிறது!!!

பட படத்து பாய்ந்து,
அடுப்பை நிறுத்தினேன்.
பால் அடுப்பு மேடையை பாழ்படுத்தி இருந்தது.

கோவம் தலைக்கேறி,
அய்யோ!, ச்சீ!! என சத்தமிட்டு,
சுத்தம் செய்யலானேன்!

மணி ஏழு...!
இரு மகன்களை தட்டி எழுப்பினேன்,
ஒன்றும் அசைந்தபாடில்லை...

செல்லமாய் கொஞ்சுகிறேன்,
பெரியவன் லேசாக கண் விழிக்கிறான்...

சின்னவனை மேலும் கொஞ்ச,
வண்டி வந்திருமா, அதட்டி எழுப்புன்னு
ரமேஷ் சொல்ல லேசாக கடுப்பு மூட்டியது...!

கோவத்தை பெரியவன் மேல காட்ட,
சின்னவன் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.

இருவரும் பாத்ரூமுக்கு அனுப்பி விட்டு,
சமையலை துவக்கினேன்...

குக்கரில் அரிசி,
லெமன் ரைஸ் மசாலா,
கொஞ்சம் வெங்காயம் நறுக்கியாகிவிட்டது...!

பாத்ரூம் சென்று,
விளையாடும் மகன்களுக்கு
முதுகில் ரெண்டு வைத்து,
துரிதப்படுத்தினேன்...!

குக்கர் விசில் தேட தேட,
தேடிக்கொண்டே இருக்கிறேன் அகப்படவில்லை...

கோபத்தில் கையில் இருந்த பாத்திரத்தை
தரையில் வீசி அடிக்கிறேன்..
சின்னவன் ஓடி வந்து
இங்க பாரும்மான்னு எடுத்து கொடுத்தான்.

மணி யாக ஆக,
எரிச்சல் கூடியது...
அலுவலகம் சீக்கிரம் செல்ல வேண்டுமே...?

இரண்டு தோசை வார்த்து,
மகனிடம் நீட்டினால்..

பெரியவனுக்கு,
பொடி வேண்டவே வேண்டாமாம்!
எப்போதும்போல சட்டினி வேண்டுமென்று,
தட்டை தட்டி விட்டான்...!

ஏன்டா தடி மாடே ,
என்ன கொழுப்பிருந்தா தட்ட தட்டி விடுவ?
கையிலிருந்த தோசை கரண்டியை,
தரையில் வீசி எரிந்து,
தலை முடியை பிடுத்து உழுகினேன்...!

அம்மா, வேண்டாமா!!
வலிக்குது மான்னு போட்ட
சத்தம் கேட்டு, ரமேஷ் எழுந்து,
ஓடிவந்தான்...

பார்த்தியா, பார்த்தியா,
மொளச்சு மூணு எழை கூட விடல,
திமிர பார்த்தியா?

கம்பிய காச்சி சூடு வைக்கணும்..
நான் கத்துறது பார்த்து...

ரமேஷ், உனக்கு அப்போ அப்போ
என்ன ஆகும்னே தெரில,
சரியான பைத்தியகாரியா மாறிடுறன்னு
சொன்னான்!

அத கேட்ட என் அடிவயிறு,
சுளீருன்னு வலிச்சுது..
முகத்துல வேர்வை வடியிது,
இரண்டு கால்களும்
நடு நடுங்கியது....

சடார்ன்னு திரும்பி,
கழிப்பறைக்கு ஓடிட்டேன்...!

ரமேஷ், மகன்களுக்கு
ஊட்டி விட்டார்!

நான் வெளிய வந்து,
பசங்கள கட்டி பிடிச்சு,
சாரி கேட்டு,
தலை வாரி விட்டு...
ரமேஷை விபூதி இடச் சொல்லி...

சின்னவனை கண் மூடச் சொல்லி...
அருகில் சென்று விபூதியை
ஊதி விட்டு,
கிச்சு கிச்சு மூட்டி...
சோபாவில் அமரவைத்து...

நிதானமாக அடுப்படி சென்று,
அலமாரியில் தேடி,
நாப்கின்னை (அணையாடை) எடுத்து கொண்டு
திரும்பவும் கழிப்பறை சென்றேன்..................!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (16-Jul-17, 8:52 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 528

மேலே