வெள்ளை வான்

வெள்ளை வான்

(பொன் குலேந்திரன்- கனடா)
( முன் குறிப்பு: இலங்கையில் ஈழப் போர் காலத்தில வெள்ளை வானில் எதிரிகளை கடத்தி கொலை செய்வது போன்ற மனித உரிமை மீறல்கள் பல நடந்துள்ளது. அதை கருவாக வைத்து புனைந்த கதை இது)

வைத்திலிஙகம் வேலுப்பிளளை ஒரு விஞ்ஞானப பட்டதாரி. யாழப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர் வகுப்புக்கு கணிதமும் பௌதிகமும் சொல்லிக கொடுக்கும் ஆசிரியராக பல காலம் கடமையாற்றுபவர். வேலு மாஸ்டரிடம் என்று மாணவர்களால் அன்பாக அழைக்கப்படுபவர். சமூக சேவையாளர். இரக்க மனம் உள்ளவர். திருமனமாகதவர். அவரிடம் கல்வி பயின்று டாக்டர். கணக்காளர்.. ஆசிரியர், . இன்ஜினியரானவர்கள் பலர். வேலு மாஸ்டர் படிபிக்கும் விதம் பல மாணவ மாணவிகளைக் கவர்ந்தது. “ரபிட் ரிசலட்ஸ்” (Rapid Results) என்ற பெயரில் தனது சக ஆசிரியர்களோடு டியூசன் வுகுப்புகளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடத்தடியில் நடத்தி பிரபல்யமானவர். கெட்டித்தனமுள்ள ஏழை மாணர்களிடம் வேலு மாஸ்டர் பணம் எடுப்பதில்லை. அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவி உள்ளார். சில சமயங்களில் ஏழைக் குடும்பங்களுக்கு தேவைப்பட்ட நேரம் பண உதவியும் செய்வார். சமூக சேவையில் அவர் ஈடுபட்டதால் அவருக்கு விரோதிகள் பலர் இருந்தனர். அரசியலில் அவரை ஈடுபடும்படி பலர் கேட்டும் அவர் மறுத்து விட்டார்.

அன்று வகுப்பு முடிந்து சைக்கிளில் வேலு மாஸ்டர் வீடு திரும்பும் போது அவரிடம் படிக்கும் நான்கு மாணவிகளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் மிரட்டிக் கொண்டிப்பதைக் கண்டார். என்ன நடக்கப் போகிறது என்று தன் சைக்கிளை நிறுத்தி அவதானித்தார். அவர்களிடையே வாக்கு வாதம் அதிகரித்தது. .இரு வாலிபர்களில் ஒருவன் ஒரு மாணவியை திடீர் என்று கட்டி அணைத்து முத்தமிட முயற்சித்தபோது மற்ற மூன்று மாணவிகளும் கீழே கிடந்த கற்களை எடுத்து “போங்கடா பொறுக்கிகள்” என்று திட்டிய படி அவர்கள் மேல் வீசினார்கள். வாலிபர்கள் இருவரும் அந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. பிரச்சனை பெரிதாகமுன் வேலு மாஸ்டர் வாலிபர்களை அணுகி
“ஏன்டா பையன்களா சும்மா போகிற மாணவிகலோடை ஏன் சேட்டை விடுகிறீர்கள். போலிசைக் கூப்பிடட்டுமா” என்று தன் செல் போனை கையில் எடுத்தபடியே அவர்களை எச்சரித்தார்
“உமக்கு நாங்கள் ஆர் எண்டு தெரியுமா? எங்கள் விவகாரத்தில் நீர் ஏன் வீணாக தலையிடுகிறீர்” ஒரு வாலிபன கோபத்தோடு வேலுவைக் கேட்டான்
“நீங்கள் யாராக இருந்தால் எனக்குக் கவலை இல்லை. தயவு செய்து இந்த இடத்தை விட்டு உடனே போய் விடுங்கள் கூட்டம் சேரமுன்” என்றார் வேலு உரத்த குரலில். அச் சமயம் வேலு மாஸ்டர் வாக்குவாதம் படுவதைக் கண்ட சிலர் அவருக்கு உதவ கூடிவிட்டனர்..
“ என்ன மாஸ்டர் ஏதும் பிரச்சனையா? உதவி வேண்டுமா”? கூடிய கூடத்தில் ஒருவர் கேட்டார்.
நிலைமை பெரிதாகமுன் இரு வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை விட்டுப் போகமுன்
“உம்மை கெதியிலை கவனித்துக் கொள்ளுகிறோம்” என்று எச்சரித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் உள்ளூர் பத்திரிகையில் செய்தியாக வெளி வந்தது. சமூக விரோதிகளை பற்றி எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாணவ மணாவிகளை பத்திரிகை எச்சரிக்கை செய்தது.

நடந்த சம்பவத்தை பற்றி தன்னோடு படிப்பித்த சக ஆசிரியர்களுக்கு வேலு மாஸ்டர் சொன்னார். டியூட்டரிக்கு வரும் மாணவ மாணவிகளை இத்தகைய அரசியல் சார்ந்த குழுக்களின் தாக்குதலில் இருந்து வீண் அரசியல் வாக்குவாதத்தை தவிர்க்கும் படி எச்சரித்தார். இக்குழுக்கள் அரசியல் வாதிகளினதும் இராணுவத்தினதும் தலை ஆட்டிகள்.. அவர்களின் எதிரிகளைக் காட்டிக் கொடுக்கும் கூலிப் பட்டாளம் என்றார் வேலு. அதுவும் அல்லாமல் இது போன்ற கூலி பட்டாளத்தின் நடமாட்டத்தைக் கண்டால் உடனே தனக்கு அறிவிக்கும் படியும் சொன்னார். அதோடு ரபிட் ரிசலட்ஸ் டியூட்டரிமேல் இராணுவம் எபோதும் சந்தேகப் பார்வை வைத்திருகிறது. இங்கு படிப்பவர்களுகும் தமிழ் விடுதலை இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறது. அதனை கவனிக்க கூலி பட்தாளத்தைப் பணம் கொடுத்து வைத்திருகிறது என்பதை மறைமுகமாக சொன்னார். எமது டியூட்டரிக்கு போட்டியாளர்கள் எமக்கு எதிராக பெட்டிசன் போடவும் கூடும். இதனால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தோடு தொடர்புள்ள விளம்பரங்களையோ படங்களையோ டியூட்டரியில் வைத்திருக்க வேண்டாம் என்றும் வேலு எச்சரித்தார்..
******
இரண்டு வாரத்தில் ஏ லெவல் பரீட்சை நடக்க இருப்பதால், அன்று டியூட்டரியில் ஒரு பிஸியான நாள். பௌதிகவியல் பரீட்சைக்கு வரக்கூடிய பிரிவுகளில் இறுதி குறிப்புகள் வழங்குவதில் வேலு மாஸ்டர் பிஸியாக இருந்தார். கடந்த வருடங்களின் கேள்வித் தாள்களில் இருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்விகள் பரீட்சைக்கு வரக்கூடும் என அவர் சொன்னார்.. அவரது வகுப்பில் முப்பது மாணவ மாணவிகள் இருந்தனர். மற்ற அறைகளில் தூய கணிதம், இரசாயனம்,. உயரியல், வகுப்புகள் நடந்து கொன்டிருந்தது. திடீரென்று ஒரு வாகனத்தின் இரைச்சல் சத்தம் கேட்டது. ஒரு வெள்ளை வான் டியூட்டரி வாசலில் வந்து நின்றது. படித்துக் கொண்டிருந்தவர்களின் பார்வைகள் எல்லாம் வாசல் பக்கம் திரும்பின.

வெள்ளை வானில் இருந்து முகமூடி தரித்த மூவரில் ஒருவர், கையில் AK47 துப்பாக்கியும் மற்றவர்கள் கைகளில் பிஸ்டல்களும் இருந்தது.

வேலு மாஸ்டர் வகுப்பு நடத்தும் அறைக்குள் வந்தார்கள். அவரில் பிஸ்டல் வைத்திருந்த ஒருவன் வேலு மாஸ்டரை நோக்கி பிஸ்டலைக் குறி வைத்தபடி அவர் அருகே போய் நின்றான். மற்ற இருவரும் வாசலில் மாணவர்களை நோக்கி AK47 துப்பாக்கியையும் பிஸ்டலையும் அவர்களை நோக்கி காட்டியபடி நின்றார்கள். மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்..
"நீங்கள் மூவரும் யார்? நீங்கள் ஏன் எங்கள் ஆசிரியரை எதற்காக இப்படி செய்கிறீர்கள்? "என்று ஒறு மாணவன் கூச்சலிட்டான்.
முன் வரிசையில் இருந்த மாணவர்கள் எழுந்தார்கள். நுழைவாயிலில் முகமூடியோடு நின்ற இரு இளைஞர்களில் ஒருவர் உரத்த குரலில்
"மாணவ மாணவிகளேவிகளே கூச்சலிட வேண்டாம். அசையாது இருந்த இடங்களில் இருங்கள் உங்களில் எவராவது மிடுக்குக் தனத்தைக் காட்டி சத்தம்போட்டால் அல்லது நகர முயற்சி செய்தால், நீங்கள் எல்லோரும் உயிர்களை இழக்க வேண்டும் வரும். உங்கள் உயிர்களைப் பற்றி எங்களுக்குக்கு கவலை இல்லை. தைரியமாக உங்கள் வீரத்தனத்தை காட்ட நினைக்கவேண்டம். இந்தத் துப்பாக்கிகளில் இருந்து வரும் சன்னங்கள் உங்கள் அனைவரயும் சில நிமிடங்களில் முடித்து விடும்.. நாங்கள் உங்கள் வேலு மாஸ்டரை மட்டுமே கடத்திச் செல்லவே வந்தோம். அவர் ஒன்றும் பேசாமல் எங்களோடு வரவேண்டும். " என்றான் கடுமையான தொரணையில் வாசலில் நின்ற AK47 துப்பாக்கி வைத்திருந்த இருவரில் ஒருவன்.
.
எபோவாவது ஒரு நாள் இப்படி நடக்கும் என்று வேலு மாஸ்டர் எதிர்பார்த்தார். அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அந்த நிலையில் சாதுரியமாக இருப்பது நல்லது என்று அவர் முடிவெடுத்தார். முகமூடி அணிந்தவர்களைக் கூர்மையாக கவனித்தார். பெசமுடியாமல் இருக்க அவரின் வாயை துணியால் கட்டினார்கள். கைகளை ஒரு கயிற்றால் கட்டினார்கள். வேலு அவனை எதிர்த்து நிற்காது. அமைதியாக இருந்ததைக் கண்டு கட்டியவன் ஆச்சரியப்பட்டான். அதன் பின் வேலு மாஸ்டரை வாசலில் நின்ற வெள்ளை நிற வானை நோக்கி துப்பாக்கி முனையில் நடத்திச் சென்றான்..


நுழைவாயிலில் பிஸ்டலொடு நின்றவன் விரைவிலேயே வானின் ஓட்டுனரின் இருக்கைக்குள் நுழைந்தான். மற்றவர்சள் இருவரும் வானின் பின்பகுதிக்குள்ளே வேலு மாஸ்டரை தள்ளினார்கள். வானுக்கு நம்பர் பிளேட் இருக்கவில்லை என்பதை வேலு கவனித்தார். வானின் சாளரக் கண்ணாடிகள் மூடின. வானுக்குள் இருக்கும் மனிதர்களின் முகங்களை யாரும் வெளியில் இருந்து பார்க்க முடியாது. ஒரு நிமிடத்தில் வெள்ளை வான் டியூட்டரியை விட்டுப் புறப்பட்டது. இது எல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் நடந்தது.

வேலு மாஸ்டரிடம் பணம் பெறவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ முகமூடி அணைந்த நபர்கள் கடத்தினர்களா என்பது யாருக்கும் புரியவில்லை. இந்த சம்பவம், மாணவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களின் மிகவும் மரியாதைக்குரிய ஆசிரியருக்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது. மற்ற வகுப்பு மாணவர்களும் அசிரியர்களும் அங்கு கூடினார்கள். ஆசிரியர்களில் ஒருவர் உடனே போலீசாரை போனில் அழைத்து, கடத்தல் பற்றி புகார் செய்தார். பொலீசுக்கும், இராணுவத்துக்கும் வெள்ளை வான் கடத்தலில் தொடர்பு இருந்ததை ஆசிரியர் ஒருவர் அறிந்திருந்தார். அவர் உடனே “ மாஸ்டர் நீங்கள் முறையிட்டும் போலீஸ் எந்தவொரு தீவிர நடவடிக்கையும் எடுக்மாட்டார்கள் என்று தெரியும்” என்றார.
.
வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் நகரத்தில் அடிக்கடி நடப்பதுண்டு. நகரத்தில். சட்டமும் ஒழுங்கும் இல்லை என்றும் புகார் செய்தும் தகுந்த நடவடிக்கை போலீஸ் எடுகாததால் மக்கள் உதவியற்றவர்களாக இருந்தனர். இந்த வெள்ளை வான் கடத்தல்களுக்கு பின்னால் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை

நகரில் பேச்சு, அந்த பகுதிக்கு வெளியே இருந்து விடுதலை இயக்கத்திற்கு எதிராக இயங்கும் ஒரு துணைப்படைக் குழுவினரே இதைச் செய்கிறார்கள் என்பதும்,. அவர்களுக்கு இராணுவத்தின் ஆதரவைக் கொண்டுள்ளவர்கள் என்பதால். இராணுவத்தின் பாதுகாப்பின்கீழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளே தங்கியுள்ளனர் என்பதேயாகும். அவர்கள் குடிமக்களிடமிருந்து சிலரை பணத்துக்காகவும் அரசியல் காரணத்துக்காகவும் கடத்திச் செல்கின்றனர் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

துணைக் குழுக்களில் உள்ளவர்களுக்கு பல காரணங்கள் இருந்தன. முக்கிய காரணம் விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும். இவர்களில் சிலர் கடத்தப்பட்டதன் மூலம் பெரும் தொகையான பணத்தை கடத்தியவர்களை விடுவிக்க பேரம் பேசி சம்பாதிக்கிறார்கள். இவர்கள் இப்பணத்தை பாவித்து இந்தியா அல்லது மேற்கு உலக நாடுகளுக்கு குற்றத்தைச் செய்தபின், அகதிகள் என்ற போர்வையில் பொய்யான பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி தப்பித்து ஓடி விடுகிறார்கள். தமிழ் சமூகத்தின் துன்பங்களை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாடு விதிகளை மீறியதாலும் அவ்வியக்கத்தில் ஒழுக்கம் தவறிய காரணத்தாலும் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறியவர்களில் சிலரை உள்ளடக்கிய மற்றொரு குழுவும் உள்ளது. தெற்கிலிருந்து வாடகைக்கு கொண்டுவரப்பட்ட கொலைகாரர்களும் இக்குழுவில் அடங்குவர்.,

வெள்ளை வான் புறபட்டு சென்றபின் மாணவர்களில் ஒருவனான காந்தன் பேசினான்

“ வந்த. முகமூடிகள் மூவரும் முகங்களை மூடி மறைத்திருந்தாலும், ஒருவன் தன் குரல் மூலம் தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான். மற்றவன் அவன் பேசும் தமிழில் இருந்து தான் சிங்களவன் என்பதை அவன் காட்டி விட்டான். அதுவுமல்லாமல் மாஸ்டருக்கு துவக்கை நீட்டிக் கொண்டிருந்த இளைஞனின் கையில் இருந்த வெட்டுக் காயத்தால் ஏற்பட்ட வடுவும் அவனை அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. அவன் தான் ஜெகன். என்பவன் என்று நான் நினைக்கிறேன். . இவனை, ஒரு பெண்ணுடன் தவறாக நடந்ததுக்காக போலீஸ் கைது செய்தது. அவன் குடும்ப நிலையை அறிந்த வேலு மாஸ்டர் அவன் மேல் பரிதாபப்பட்டு ஒரு லோயரை வைத்து அவனை இரு வருடங்களுக்கு முன் காப்பாற்றினார். மற்றும் அவன் கையில் 2 அங்குலத்துக்கு கத்தி வெட்டு காயம் உண்டு, பெண்கள் படிக்கும் கல்லூரியில் மாணவிகளுக்கு சண்டித்தனம் காட்டியதாலும் பல்கலைக் கழக நுலைவு பரீட்சையில் தோல்வியடைந்ததாலும், கல்லூரி விதி முறைகளை மீறியதாலும் நான் படிக்கும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப் பட்டவன் ஜெகன்" என்று அவனைப் பற்றி விபரம் அறிந்த காந்தன். என்ற மானவன் சொன்னான்.
“ஜெகன் குற்றங்கள் பல செய்தவன். மற்றும் அடிக்கடி மற்ற மாணவர்களுடன் பிரச்சனைப் பட்டவன். அவன்து கையில் உள்ள வடுவை வாசலில் நிற்கும் போது நானும் சில மாணவர்களும் கண்டோம்.” என்றான் முரளி என்ற மாணவன்.

வேலு மாஸ்டர் முகமூடி அணிந்தவர்களை எதிர்த்து இருந்தால், மாணவர்கள் அவர்களைத் தாக்கி இருப்பார்கள். அதனால் பலர் இறந்திருப்பார்கள். அதை உணர்ந்த வேலு பேசாமல் இருந்தார். வேலு மாஸ்டரால் டிரைவரின் இடத்திலிருந்த மற்ற இளைஞனை அடையாளம் காண முடியவில்லை, ஆனால் இராணுவத்தினருக்கு பிறரை காட்டிக் கொடுப்பவனாக வந்த குழுவில் ஒருவன் இயங்குகிறான் என்பது அவருக்கு தெரியும். அதனால் வந்த மூவரில் ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என வேலு மாஸ்டர் யூகித்தார்.

வான் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதைகள் ஊடாக பயணித்தது. வானில் போகும் போது வேலுவுக்கு பக்கத்தில் இருந்த இருவரில் ஒருவன் யாழ்ப்பாணத் தமிழில் பேசினான்.
"ஏய் நீ எங்களோடு உன் கெட்டித்தனத்தை காட்ட தெண்டிக்காதே. எங்களுக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும். உனக்கு இந்த டியூட்டரியில் இருந்து எவ்வளவு பணம் மாதம் உனக்கு வருகிறது என்பதும் தெரியும். அதோடு மட்டுமல்ல நீ எவ்வளவு பணம். அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் விடுதலை இயக்கத்துக்குக் கொடுத்திருக்கிறாய் என்பதையும் நாங்கள் அறிவோம். உன் பணம் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவே நாங்கள் வந்தனாங்கள். நீ கலியாணம் செய்யாவில்லை என்பதும், உன் பெற்றோர் ஒரு குண்டுத் தாக்குதலில் இறந்துவிட்டதையும் நாங்கள் அறிவோம். நீ இறந்தால் யாரும் உனைப் பற்றிக் கவலைப் படப்போவதில்லை.”

அவர்கள் கொண்டுவனத் வான் புதியவானாக வேலு மாஸ்டருக்கு தோன்றியது. அதற்கு உரிமையாளர் இருந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை இராணுவத்தால் வழங்கப்பட்ட வானாக இருக்கலாம் என வேலு மாஸ்டர் நினைத்தார். அவர் வானுக்குள் தள்ளுபட்டபோது போது வானுக்கு எண் தகடு இருக்கவில்லை என்பதையும் கண்டார்,.

வான் இறுதியில் யாழ்ப்பாண பலாலிளுக்குப் போகும் பாதையில் பயணித்தது. விசாரணைக்காக பலாலி இராணுவ முகாமுக்கு தன்னை அழைத்துச் செல்கிறார்களோ என வேலு நினைத்தார். போது மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் வான் சென்ற போது பாதையில் ஒரு கண்ணிவெடியை எதிர்கொள்ள வேண்டிவந்தது. மது போதையில் இருந்த ஓட்டுனர் வானை கட்டுப் படுத்தமுடியாமல் செலுத்தியதால் வான் கண்ணிவெடி மேல் சென்றதால், அது இயங்கி வெடித்ததால். வான் தடம் புரண்டு பாதைக்கு பக்கத்தில் உள்ள பள்ளத்தில் தலை கீழாகக் கவழ்ந்தது.. வேலு நினைத்தார் வானுக்கு ஒரு கண்ணிவெடியால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று.

வானை ஒட்டியவர் படுகாயம் அடைந்தார். அவர் உடலில் இருந்து குருதி ஓடத்தொடங்கியது. மூச்சு விடக் கஷ்டப்பட்டார்.. வேலு மாஸ்டரோடு பின் சீட்டிடில் காவலுக்கு இருந்த இருவரும் வானுக்கு வெளியே தூக்கி எறியப் பட்டனர். அவர்கள் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. வேலு மாஸ்டர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர் வானில் இருந்து வெளியே வீசப்படாமல் தப்பினார். அவர் கயிற்றினால் கட்டி இருந்த படியால் வானுடன் உருண்டார். வெளியே வீசப்ட்ட இருவரும் பேச்சு மூச்சு அற்றுக் கிடந்தனர்.

வேலு மாஸ்டர் முகம் முழுவதும் ஒரே இரத்தம். சுய நிலையில் இருந்த அவர் கட்டியிருந்த கையிற்றையும், வாயில் கட்டிய துணியையும் அவிழ்த்து ஒருவாறாக வானை விட்டு வெளியே வந்தார்.
வேலு மாஸ்டர் இந்த விபத்து நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் அதிர்ச்சியில் இருந்தார். கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள கடவுள் தந்த ஒரு சந்தர்ப்பம் என்று அவர் நினைத்தார். வேலு மாஸ்டர் வானில் இருந்து நொண்டியபடியே வெளியே வந்தார். அவர் தனக்கு பிஸ்டல் காட்டியபடி தன்னை கடத்தியவன் ஜெகனாக இருக்குமோ என்று சந்தேகித்த , முகமூடிக்காரன், சாலையோரத்தில் தலையில் ஒரு பெரிய கல் அடிபட்டதால் அவன் தலையில் இருந்து இரத்தக் பெருகி ஓடியது. அவனது இடது கால் வாகனத்துக்குள் சிக்கிக்கொண்டது.
“ஐயோ யராவது என்னைக் காப்பாற்றுங்கள் என் உயிர் போகுது “ என்று அவன் உதவி கேட்டு ஓலமிட்டான்.. அவனது பிஸ்டல் சில அடி தூரத்தில் வீசப்பட்டு இருந்தது. வேலு அவனிடம் செல்லமுன் வீசப பட்டிருந்த பிஸ்டலை கையில் எடுத்துக் கொண்டார் , முகமூடி அணிந்து கீழே எழும்ப முடியாமல் கிடந்தவனை அணுகி அவன் வாயில் பிஸ்டளின் முனையை வைத்தபடியே. அவனின் முகமூடியை அகற்றினார்,
முகமூடியில் இருந்தவன் முகத்தை கண்டவுடன் “ எடேய் நீ ஜெகனா இந்த காரியம் செய்த நீ”?அவர் ஜெகன் என்று சந்தேகிக்கப்பட்டது சரி என அறிந்தார் . ஜெகன் அவரை பிஸ்டலோடு பார்த்தபோது "வேலு சார் என்னை கொல்ல வேண்டாம். நான் ஒரு அரசியல்வாதியின் கட்டளைப் படி பணத்துக்காக செய்யும் கூலி. " ஜெகன் அவரிடம் மன்றாடினான்.
"யார் அந்த அரசியல்வாதி என்று] எனக்குச் முதலில் சொல் ஜெகன்? "
ஜெகன் முதலில் அரசியல்வாதியின் பெயரைச் சொல்ல தயங்கினான்.
"சேர் வானில் சிக்கியுள்ள என் காலை முதலில் வெளியே எடுத்து விடுங்கள் என்னால் அசைய முடியாவில்லை . நான் இறந்து கொண்டிருக்கிறேன்". ஜெகன் கெஞ்சினான்.

"உன் சிக்குண்ட கலை வெளியே எடுக்க முன் முதலில் என்னைக் கடத்திக் கொல்லும்படி உங்களுக்கு கட்டளை இட்ட அந்த நபரின் பெயரை என்னிடம் சொல்லு, இல்லையென்றால் நான் உங்களை பொலீசிடம் ஒப்படைப்பேன்"

ஜெகன் வேலு மாஸ்டரை நெருங்கி வரும்படி கைகளால் சைகை காட்டினான். அவர் அனருகே சென்ற போது. அவரின் காதில். ரகசியமாக அவரைக் கடத்த அனுப்பிய அரசியல்வாதியின் பெயரைச் சொன்னான்.

" அப்ப நான் நினைத்தது சரியே. அவரைப் பற்றி செய்திகள் பத்திரிகைகளில் இருந்தன

"சேர் என் கால்களை நகர்த்த முடியாது. பக்கத்தில் மூர்ச்சித்து கிடப்பவன், , இராணுவத்தில் இருந்து சொல்லாமல் வெளியே வந்தவன். அவன் ஒரு வாடகை கொலையாளி. பணத்துக்காக எதையும் செய்வான். அவன் உங்களை கடத்த எனக்கு உதவியவன். ஜெகனுக்கு பக்கத்தில் இருந்தவன் அசைவற்று கிடந்தான்

வேலு மாஸ்டர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த ஓட்டுனரை அவர் தனது விரல்களால் அவனது நாசிக்கு அருகில் வைத்து சோதனை செய்த போது அவனின் சுவாசத்துக்கான அறிகுறிகள் இல்லை. அவனது உயர் போய்விட்டது..

கிராம மக்கள் திரணடு வரும் குரல்கள் கேட்டது. அவர் சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராக இருந்தார். அவர் ஜெகனுக்கு சொன்னார்.

“ நீங்கள் வெள்ளை வான் கடத்தல்காரர்கள் என்று கிராமவாசிகள் அறிந்தால், உங்களை அடித்துக் கொன்று விடுவார்கள். நீ ஒன்றும் பேசாமல் இரு ஜெகன்” என்றார வேலு.

சில கிராமவாசிகள் வேலு மாஸ்டரை கண்டனர். அதில் . முருகன் என்பவருக்கு வேலு மாஸ்டரைத் நன்கு தெரியும். கிராம சபை தலைவர் அவர். அவரது மகள் வேலு மாஸ்டரிடம் கல்வி பயின்று பல்கலைகழகம் சென்றவள்.

.காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேலு அவர் உதவியை வேண்டினார். காயமடைந்தவர்கள் வெள்ளை வான் கடத்தல்காரர்கள் என்று அறிந்த படியால் அவர்களுக்கு உதவ முருகன் சம்மதிக்கவில்லை.

“ மாஸ்டர் வெள்ளை வானில் உங்களைக் கடத்தி வந்து கொல்வதற்கு முயற்ச்சித்த கொலைகாரர்கள் இவர்கள் என்று எனக்குத் தெரியும். வெள்ளை வானில் வந்த இவர்களுக்கு ஏன் நாம் உதவ வேண்டும்?. நாம் இவர்களை போலீசில் ஒப்டைபோம். " முருகன் கோபத்தோடு சொன்னான்.

"இல்லை முருகன், அவர்களின் செயலுக்கு கடவுள் அவர்களைத் தண்டிப்பார். நாம் அவர்களைப் போல் இல்லாமல் நல்ல மனித இதயம் உள்ள மனிதர்களாக நடப்போம். தயவுசெய்து ஒரு காரை கொண்டு வாரும். இவர்களை வைத்திய சாலைக்கு உடனே அழைத்து செல்ல ஒரு வாகனம் உடனே தேவை. உம்மால் முடியுமா ", வேலு மாஸ்டர் முருகனிடம் கெஞ்சினார். முருகன் அவரை மதித்ததால் முடியாது என்று கூறவில்லை. சில நிமிடங்களில் தனது சொந்தக் காரைக் கொண்டு வந்தார்.

******

மருத்துவமனையை அடைந்த நேரத்தில் ஜெகன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தான். வானை ஓட்டுனவனும் மற்றவனும் இறந்துவிட்டார்கள். ஜெகனுக்கு கடுமையான இரத்தப்போக்கு இருந்தது. டாக்டர் ஜெகனை பரிசோதித்துவிட்டு வேலுவிடம் “இரத்த அதிகம் போய்விட்டதால் உடனடியாக இரத்தம் இவருக்கு கொடுத்தாக வேண்டும். இவரது இரத்தம் O நெகடிவ். இந்த குரூப் இரத்தம் இவரைக் காப்பாற்ற அவசியம் தேவை. இந்த. மருத்துவமனையில் அத்த குரூப் இரத்த இல்லை.” என்றார் டாக்டர்.
சில மாதங்களுக்கு முன்னர் வேலு மாஸ்டர் தன் இரத்தத்தை இரத்த வங்கிக்கு தானம் செய்த போது அவரது இரத்தம் அந்த குரூப்பை சேர்ந்தது என்று டாக்டர் சொன்னது அவர் நினைவுக்கு வந்தது.

என்ன ஒரு கடவுள் செயல். இது? பணத்துக்காக என்னைக் கடத்திச் சென்று கொல்ல நினைத்த ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு நான்’ தள்ளப்பட்டுள்ளேன். இரத்தத்திற்காக இவன் உயிர் போராடுகிறது வேலு மாஸ்டர் சிறிது நேரம் யோசித்தார். அதன் பின் அவர் மருத்துவர் பார்த்து கூறினார்.
"டாக்டர் என் இரத்தம் O நெகடிவ் குரூப்பை சேர்ந்தது. என்று இரத்த வங்கிக்கு இரத்தம் கொடுத்த படியால் எனக்குத் தெரியும். அவனுக்கு என் ரத்தத்தை பரிசோதித்து என் இரத்தத்தை வனுக்கு கொடுங்கள். வன்முறையில் இருந்து இந்த நாட்டில் ஒரு உயிரை காப்பாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் "

டாக்டர் மற்றும் நேர்ஸ்மார் அவர் சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.
“ உண்மையா சொல்லுகிறீர்” டாகடர் கேட்டார்
“ஓம்.டாக்டர். இவன் யார் என்று எனக்குத் தெரியும். முதலில் இவன் உயிர் பிழைக்கட்டும். கிராமத் தலைவன் பொலிஸை கூட்டி வந்திருக்கிறார் அவர், இவன் செய்த குற்றதுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார்.

"உங்கள் இரத்தத்தை நிச்சயமாக நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்களா?" திரும்பவும் டாக்டர் கேட்டார்.

"ஆமாம் டாக்டர். தாமதிக்காதீர்கள்."வேலு வலியுறுத்தினார்.

"ஆனால் இரத்தம் கொடுக்கும்போதே அவர் உயிர்வாழ்வார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவரது இடது கால் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது மற்றும் நாம் அவரை காப்பாற்றினாலும் அவரின் காலை காப்பாற்ற முடியுமோ தெரியாது நான் மற்ற டாக்டர்களுடன் கலந்துரையாடுவேன்."நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

“டாக்டர் முதலில் இவனின் உயிரைக் காப்பாற்றுங்கள். இவனுக்கு வயதான விதவை தாய், மற்றும் இரண்டு திருமணமாகாத சகோதரிகளுக்கு உண்டு. "
வேலு மாஸ்டரோடு படிப்பிக்கும் அசிரியர்கள் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர்

." வேலு மாஸ்டர் நீங்கள் ஒரு அசாதாரண மனிதர். ஒருவரும் உம்மைப்போல் இப்படி செயல் படமாட்டார்கள். உமக்கு நல்ல மனித நேயம்”: என்றார் .

"சரி சார். மற்றவர்களின் உயிர்களை மதிக்காதவர்களை தண்டிக்க கடவுள் இருக்கிறார். "

மூன்று மணித்தியாலத்துக்கு பின் ஆபரேஷன் முடிந்து டாக்டர் வெளியே வந்தார்.

"மிஸ்டர் வேலு நீங்கள் இரத்தம் கொடுத்தவர் பிழைத்து விட்டார் அனால் அவரது வலது காலின் முழங்காலுக்குக் கீழ் பகுதியை எடுத்து விட்டோம். அவ்வளவுக்கு காலின் அப்பகுதி சிதைந்து விட்டது " என்றார் டாக்டர்.

"டாக்டர் இது உங்கள் முடிவு. அவர் என் உறவுக்காரர் இல்லை. ஒரு உயிரை காப்பாற்ற நீங்கள் செய்தது நல்ல காரியம்" என்றார் வேலு/ வேலுவைச் சுற்றி நின்றுவர்கள் அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமடைந்தார்கள்.
""எவன் கர்மா என்ற விதையை விதைக்கிரானோ அதை அவன் ஒரு நாள் அறுவடை செய்தாகவேண்டும் மக்களுக்கு அந்த தத்துவம் புரிந்தால் , நம் நாட்டில் வன்முறைக்கும். மனித உரிமை மீறல்களுக்கும் இடம் இருக்காது " கிராமத் தலைவர் முருகன் கருத்துச் சொன்னார்.

**********

எழுதியவர் : (பொன் குலேந்திரன்- கனடா) (17-Jul-17, 3:14 am)
Tanglish : vellai vaan
பார்வை : 428

மேலே