யாதுமாகிப் போனாய் நீ

வாழ்வின் வைகறையாய் வந்தவனே
தாழ்வு மனப்பான்மை தகர்த்து
சோர்வு உயிரில் அகற்றி
கோர்வையாய் உணர்வுகளில் உன்னை
கோர்த்துச் சென்ற அழகே...

தொட்டாச் சிணுங்கியாய் நெஞ்சம்
உன் பார்வை தொட்டவுடன்
சுருண்டு போகிறது உனக்குள்...
சிறு தொற்றாய் பீடிக்கும் பசலை
உன் நினைவிலே நீளுகிறது நாளும்...

கிடந்து தவிக்கிறது உள்ளம்
கடைசியாய் நீ செப்பிப் போன
வார்த்தை வலைக்குள் சிக்கி...
ஈர்த்த உன் ஆண்மையில்
இரட்டிப்பு வேகத்தில் சுழலுது உலகம்...

இளம் சூரிய வருகை முதல்
முதிர் நிலவின் மரணம் வரை
முழுப்பொழுதும் உன் முகமே
அகமெல்லாம் நிறைந்து நின்று
ஆட்சி அமைக்கிறது எனக்குள்...

காட்சியானால் போதும் உந்தன்
சுந்தர வதனம் மைவிழிக்குள்
காடுகளெல்லாம் பூங்காவனமாகும்..
ஈடற்ற என் இதயக் காவலனே
இரண்டறக் கலந்தேன் உன்னில்...

பற்றற்றுக் கிடந்த பாரில்
மட்டற்ற இன்பம் தந்தவனே...
விலைமதிப்பற்ற சொத்தாக வந்து
கிளையாக உணர்வில் பரந்து
யாதுமாகிப் போனாய் நீ!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:46 pm)
பார்வை : 45

மேலே