மரணப் படுக்கை

மரணப்படுக்கை
********************

இன்று அந்த வீட்டுல ஒரே கூட்டம்...
சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சி
எல்லோரும் காத்திருக்காங்க...!

ஒரு இரண்டு வாரத்துக்கு முன்னாடி...

இதுவரைக்கும் எட்டிக்கூட பார்க்காத
சில சொந்தங்கள்... அந்த வீட்ட
வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போகுது...

வந்து போகுற சொந்தங்கள் அனைத்தும்
போகும் போது...
சொல்லிட்டு போகும் ஒரு வார்த்தை

“இப்படியே எத்தன நாளைக்குத்தான்
வச்சிருக்க போறீங்க..
இதுக்கப்புறம் வாழ்ந்து என்ன பண்ண போகுதுன்னு...

அடிக்கடி அந்த வீட்டு பெண்களிடமிருந்து
ஒரு வார்த்தை வரும்...

“எப்ப பாரு ஒரே இருமல் சத்தம்...
நிம்மதியா ஒரு டிவி பார்க்க முடியிதான்னு...”

இந்த பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு
அந்த வீட்டின் ஒரு தனி அறையில
ஒரு பழைய பாய்விருச்சி படுத்திருக்கு
அந்த உசுரு
இப்பவோ அப்பவோன்னு

எந்திருச்சி நடக்க அதுக்கு துப்பில்ல...!
பெத்து வளர்த்தவன்னு அத பார்க்க வக்கில்ல...!!

தவிச்ச வாயிக்கு...
தண்ணீன்னு உள்ள இருந்து சத்தம் கேட்ட...

ஏய் கிழவி பேசாம இருக்க மாட்ட...
சும்மா சும்மா தண்ணி குடிச்சி
பாயெல்லாம் மோண்டு வச்சிருக்க...
உனக்கு பீ.. மூத்திரம் அள்ளியே
எங்களால ஒரு வாய்
சோறு திங்க முடியலன்னு
வெளியில இருந்து சத்தம் உள்ள போகும்...

பெத்த பிள்ளைங்களே இப்படி பேசுதுன்னு
ஒவ்வொரு நாளும்
யோசிச்சி யோசிச்சி ஒருநாள்
அந்த கிழவி செத்துப்போச்சி...

அது செத்து இன்னைய்யோட
ரெண்டு வாரம் ஆச்சி...
இன்று பதினாறாம் நாள் காரியம்...

உயிரோட இருக்கும் போது
தண்ணி தர யோசிச்ச குடும்பம்
செத்ததுக்கு அப்புறம்
அதுக்குபிடிச்சதெல்லாம் வாங்கிவச்சி
சாமி கும்பிட்டு காத்திருக்கு...

காக்கா வந்து அத சாப்படனுமாம்...!
அப்பத்தான் கிழவியே வந்து சாப்பிட்ட மாதிரியாம்..!!

சாகுறதுக்கு முன்னாடி...
ஓட்டு மேல காயவச்ச வத்தல திங்கவந்த
காக்காவ விரட்டுற மாதிரி விரட்டிட்டு...
செத்ததுக்கு அப்புறம்...
அதே காக்காவுக்கு சோறு போட்டா...
அந்த ஆத்மா சாந்தி அடைஞ்சிடுமா...?


இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (24-Jul-17, 12:46 pm)
சேர்த்தது : க முரளி
Tanglish : maranap padukkai
பார்வை : 205

மேலே