பெண்குழந்தை பெறுவதே பெருமை

வல்லமை இதழ் நடத்திய படக்கவிதைப்போட்டியில்
கொடுத்த நிழற்படத்திற்கு....
எழுதிய தலைப்பும் கவிதையும்..

==================================
பெண்குழந்தை பெறுவதே பெருமை..!
==================================

விழிப்புறுவாள் அதிகாலை மார்கழி நன்னாளில்..
…….விடியுமுன்னே வீடனைத்தையும் சுத்தம் செய்வாள்.!
விழிமூடா நிலையினிலே இயங்கிடுவாள் தரையினிலே
…….விரல்நுனியில் வேகமாய் புள்ளியினை இட்டிடுவாள்.!
மொழிகூடப் பேசு மவள்போட்ட மாக்கோலம்..
…….விழிதிறந்து பார்க்கையில் வியப்பில்நமை ஆழ்த்தும்.!
அழியாத கோலமாக அவளிட்ட கோலம்தான்..
…….ஆழமாக மனதினிலே பதிந்தவள் திறம்சொல்லும்.!

துள்ளித் துள்ளி ஓடிவரும் சின்னஞ்சிறுமியவள்
…….துடிப்புடனே செயல்படு மாற்றல் கொண்டவள்.!
பள்ளி செல்லுமுன் வாசலிலே கோலமிடுவாள்
…….பள்ளிமுடிந்ததும் படிப்பினிலே நாட்டம் வரும்.!
அள்ளியவளை அணைத்தே பெற்றோரும் மகிழ
…….அன்றாடம் அவள் செய்யுமருமைச் செயலினாலே.!
கிள்ளிச் செல்வாள் மனதையெலாம் தன்குரும்பாலே
…….கவர்ந்திடுவாள் படித்திடுவாள் பள்ளியிலே முதலாக.!

ஆண்மகவே வேண்டுமென்று விரும்புவது அன்று..
…….ஆணுக்கு இணையாக பெண்பேசப்படும் நிலையின்று.!
பெண் மகவொன்றை முதலாகப் பெற்று விட்டால்..
…….பெரிதென நினைத்து பெருமைப்படும் காலமுமிதுதான்.!
தூண்போல நின்று வாழ்வில்வரும் துயரெல்லாம்..
…….துடைத்து குடும்பத்தில் பெரும்பங்கு வகிப்பவளவளே.!
நாண்போன்று நற்குடும்பமதைக் கட்டிக் காப்பாளவள்..
…….பெண்ணென்று வெறும்பேச்சு சொல்ல அனுமதியாள்.!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (25-Jul-17, 9:48 pm)
பார்வை : 85

மேலே