ஞாயிறு

ஞாயிறு

தன்னை இருசம கூறாக்கி
மணி ஆறைக் காட்டி
அலறிக் கொண்டிருந்தது
கடிகாரம் . . .

தன் மொழிப்
புலமையையெல்லாம்
கா கா என்ற
ஈரெழுத்தில் குறுக்கி
கரைந்தவாறு காகங்கள் . . .

உறக்கம் விரித்த
வலைதன்னில்
சிறை படுத்தப்பட்ட
மனது
அவ்வப்போது
திரும்பிய நினைவுகளை
மீண்டும் மீண்டும்
தப்பவிட்டு
உறக்கத்தின் பின்னே
ஓடிக்கொண்டிருந்தது . . .

எங்கிருந்தோ செவி நுழைந்த
மயில்களின் அகவல்கள்
தேசியப் பறவையே ஆனாலும்
அளவுக்கதிகமாய் . . . .

காலம் தவறியே
வந்தூற்றும் பால்காரர்
அன்று மட்டும்
குறித்த நேரத்தில் . . .

தெரு நடுவே மண்டியிட்ட
நாய்களின் குரைத்தல்கள்
கீரைக்காரிக்கு போட்டியாய் . . .

இடையூறுகள் இத்தனையும்
அத்துமீறும் குறட்டைகளை . . .
ஞாயிறென்ற ஓர்நாளே
அரவணைத்து செல்கிறதோ ? . . . .

எழுதியவர் : சு.உமாதேவி (26-Jul-17, 8:46 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : gnayiru
பார்வை : 94

மேலே