தூங்கும் வரம்தான் கேட்க போகிறேன்
அன்று உன்னை முதல் பார்வையில் நேசித்தேன்
இன்றும் உன்னை கண் பாராமலே நேசிக்கிறேன்
என்றும் உன்னை காரணம் இல்லாமல் நேசித்துக்கொண்டே இருப்பேன்...
வற்றாத நதியை போல உன்மேல் கொஞ்சமும் குறையாத நேசம்
ஏனென்று தானே யோசிக்கிறேன்
தேற்றாத குழந்தையாய் அழுது தீர்த்தும் நீ தந்த வலி தீராமல்
உன் மடிசாய நினைக்கிறன்
பற்றாத அன்பை மட்டும் உனக்கு பரிசாகத் தந்து
பனித்துளி தாங்கும் இலையாக நேசிக்கிறேன்
முற்றாத என் கனவுகளை உன் கை கோர்த்து
இனி வாழ்ந்து பார்க்க யாசிக்கிறேன் ....
தேயாத சூரியனைப் போன்ற உந்தன் முகம் காண
எனக்குள் சூரியகாந்தியாய் காத்திருக்கிறேன்
பாயாத குளத்து நீராய் உன்னை விட்டு எதையும் யோசியாமல்
உனக்குள் தேங்கி நிற்கிறேன்
ஈயாத கருமியாய் என் அன்பை எல்லாம் அறிந்தோ அறியாமல்
உனக்கு மட்டும் சேமிக்கிறேன்
சாயாத நேர்கோடாய் நீ செல்லும் பாதை மட்டும் போகுது
என் பார்வை நீளங்கள்
ஓயாத அலையாக உன் பின்னாலே தவறாமல் போகுது
என் நிற்காத நினைவுகள்
பிறந்த குழந்தைபோல முழுநேரம் தூங்குதல் சாத்தியம் என்றால்
இறைவனிடம் முழுதாய் தூங்கும் வரம்தான் கேட்க போகிறேன்....
கனவுகளில் ஜோடியாய் உன் கை கோர்க்கப் போகிறேன்
காற்றில் காற்றாடியாய் உன்னோடு பறக்கப் போகிறேன்
இதுவரை விழிசொல்லாத கதைகள் எல்லாம் பேசி தீர்க்கப் போகிறேன்
இதுவரை வழிஇல்லாத ஆசைகள் எல்லாம் நிறைவேற்றி பார்க்கப் போகிறேன்
உனக்கும் எனக்குமான இடைவெளிகள் இல்லையென்று ஆக்கப் போகிறேன்
உன்னிதயத்தையும் என்னிதயத்தையும் சேர்ந்தே துடிக்கச் சொல்லப் போகிறேன்
இறைவன் சாத்தியமில்லை அது இறப்பு என்று சொல்லிவிட்டால்
உன் கனவுகளோடு வாழ நான் மட்டும் இறந்துவிட போகிறேன்...
அன்று உன்னை முதல் பார்வையில் நேசித்தேன்
இன்றும் உன்னை கண் பாராமலே நேசிக்கிறேன்
என்றும் உன்னை காரணம் இல்லாமல் நேசித்துக்கொண்டே இருப்பேன்...
யாழினி வளன் ...