உயிரைத் திறக்கும் கடவுச்சொல்

காலம் போய்க்கொண்டிருக்கிறது
கனவில் வந்த ஓவியத்தின்
அழகை வர்ணிக்கத் திராணியற்று
வார்த்தைகள் தவிக்கின்றன

நடிப்பில் துப்பிய வெறுப்பை
திரும்பப் பெறமுடியாமல்
தன்மானச் சுவர்
தடுத்து மறிக்கிறது

எதிர்பார்ப்பின் உச்சாணிக் கிளையில்
அமர்த்திருந்தபொழுது
சிறகுகள் தொலைந்து போயின

அன்பின் சுயம் தெரியாமல்
பிடிவாதப் பசையிட்டு
ஓர் உணர்ச்சியற்ற முகமூடி
ஒட்டப்பட்டிருக்கிறது

சேரிடம் தெரிந்தபின்பும்
முகவரியைத் தொலைத்துவிட்டதாய்
ஒரு பாவனை தொடர்கிறது

இமைகளைக் கழற்றி வைத்துவிட்டு
உறக்கத்தைத் தேடுகிறேன் என்பது
குழந்தைத் தனமா ?
பித்துநிலையா ?

மரணம் வரைக்கும்
வாழ்க்கை நிரலை எழுதியபின்
உயிர்க் கணினியின்
கடவுச் சொல்லை
தேடிக்கொண்டிருக்கிறாய்
அது
உன்பெயர்தான் என்பதை
மறந்துவிட்டு !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (3-Aug-17, 10:40 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 88

மேலே