குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்க திருவிழாக்களே

இறை வாழ்த்து :-

இறைமையினை வணங்குகின்றேன் இடைவிடாது போற்றுகின்றேன்
திறமையுடன் கவியரங்கைத் திக்கெட்டும் பரப்பிடவே
உறைகின்ற தெய்வத்தை உளமார வணங்குவிட்டு
பறைசாற்ற வருகின்றேன் பாவலரே கேட்டிடுவீர் !

ஆசான் வணக்கம் :-

ஆசானை வணங்குகின்றேன் அகமகிழ்ந்து ஆசிகளைக்
கூசாமல் தந்திடுவார் குவலயமும் ஆசானே !
பாசத்தோடு வழங்குகின்ற பரவசமாம் அன்பினாலே
வாசமுடன் மணம்வீசும் மண்ணுலகில் கவியரங்கம்

தமிழ் வணக்கம் :-


தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
வாய்மொழியாய்ப் பேசிடவும் வகையானத் தாய்மொழியே
சேய்போல எனைக்காக்கும் செந்தமிழாம் தாய்மொழியே !
தாய்போல எண்ணுகின்றேன் தமிழ்மொழியே நீவாழ்க !!!


அவையடக்கம் :-

நிலாமுற்றம் முகநூலில் நிறைவாகக் கவியரங்கம்
உலாவரவும் செய்கின்றோம் உவப்பில்லா உவகையினால்
பலாக்கனியைப் போன்றதொரு பல்சுவையைத் தருகின்ற
நிலாமுற்றம் கவியரங்கம் நீடுழியும் சிறந்திடவே !!!!

குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்க திருவிழாக்கள்
சடுதியிலே தந்திடுமே சந்ததியும் மேம்படவே
விடுமுறையும் வந்துவிட விருந்தினர்கள் ஒன்றுசேர
விடுவிடுவென களைகட்டும் வீடுகளும் ஒன்றாக .

நிலைத்திருக்கும் ஒற்றுமையும் நிம்மதியும் உண்டாமே
கலைநிகழ்ச்சி பலகொண்ட காவடிகள் வலம்வரவும்
சிலைகளுமே பேசிடுமே சிறுவர்கள் மனமகிழ்வார் .
உலைநிறைய அரிசியுமே உணவாக பொங்கலிடுவர் .

அன்னதானம் செய்திடுவர் அகமகிழ்வார் கொடைகுணத்தால்
தின்னதின்ன திகட்டாத தித்திக்கும் பஞ்சுமிட்டாய் .
பன்னாளும் பிரிந்திருந்த குடும்பங்கள் கூடிநின்று
நன்னாளாய் கொண்டாட நலமெல்லாம் திருவிழாவில் !


நன்றி மடல் :-

நன்றிசொல்ல வார்த்தையில்லை நல்வாய்ப்பு தந்தமைக்கு
என்றனையும் மதித்திங்கே ஏற்றதொரு அழைப்பினை
இன்றிங்கே வழங்கிட்ட இன்முகத்தோர் நிலாமுற்றம்
நின்றிங்கே சொல்லுகின்றேன் நிறைவான கவியரங்கம் .!!!

படைப்பாக்கம் :-
கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Aug-17, 8:44 pm)
பார்வை : 836

மேலே