கரணம் தப்பினால் மரணம்
கரணம் தப்பினால் மரணம்
கயிற்றினிலே நடக்கின்ற கழைக்கூத்து பாருங்கள்
வயிற்றுபசி தாங்காமல் வன்கொடுமை வாழ்வினிலே
பயிற்றுவிக்க யாரேனும் பந்தமுடன் வாரீரோ !!
அயர்ச்சினால் ஆடுகின்றாள் ஆதரவும் ஏதுமின்றி !!
கரணம்தான் தப்பினாலோ காலனவன் தூக்கிச் செல்வான்
மரணங்கள் சிலநேரம் மாற்றமில்லாச் சோகங்கள் .
விரல்களினால் விந்தை காட்டும் விதிதனையே செய்கின்றாள்
விரல் மீட்டும் வீணைதான் விபத்தில்தான் மாய்கிறது .
வாழ்க்கையிலே கொடுமையிது வறுமையினால் நிகழ்வதிது.
காழ்ப்புணர்ச்சிக் கொள்ளாதீர் காப்பாற்றுங்கள் தளிர்களையும் .
பாழ்போக வேண்டாமே பரிதவிக்கின்றது என் நெஞ்சம் .
ஊழ்வினை தான் காரணமா உலகத்தோர் காரணமா !!!
போராட்டமே நிலையென்றால் போக்கிடம் தான் எங்கே ?
காரோட்டுவோர் பலர் இருக்க கதியற்ற இவர் வாழ்க்கை .
சீராட்டுவோர் மனமின்றிச் சீரழியும் சமுதாயம் .
பாராட்ட வேண்டாமே பாசந்தான் வேண்டுமிங்கே !!!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்