பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 2 அ

................................................................................
பெண் மனது ஆழமென்று......
...................................................................................
பாகம் 2 - அ
...................................................................................
முன்கதைச் சுருக்கம்
சரண்யாவுக்குத் திருமணமாகிறது.. இது அவளைத் தீவிரமாகக் காதலித்த மோகனுக்கு பலத்த அடியாகிறது.
..................................................................................
மோகனின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து
தாடி வளர்க்கவில்லை; மது அருந்தவில்லை..
ஆனாலும் மனம் மட்டையாகி விட்டது..
நெஞ்சைப் பிளந்து செல்கிற காதல் வலிக்குச் சமமாக எதைச் சொல்லலாம்?
உள்ளிருந்தே குடைந்து மரணிக்க வைக்கும் புற்றுநோயைச் சொல்லலாமா?
“ நீ ரொம்ப சமர்த்துன்னு நினைச்சிட்டிருந்தியே.. இப்ப ஊத்திகிச்சே.. ” கண்ணாடியில் என் உருவம் என்னைக் கேலி செய்தது..!
தற்கொலைக்குக் கூட துணிந்தேன். மெரினா பீச்சில் நான் பாட்டுக்கு நடந்து கடலுக்குள்ளே போனேன். அந்த போலிஸ்காரர் பிடித்து விரட்டியிருக்காவிட்டால்...
ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்து, அது நடக்காவிட்டால் மனதில் ஒரு அமைதி வந்து விடுகிறது..
பாலா வந்திருந்தான். சரண்யாவின் கல்யாணத்தைப் பற்றி சொன்னான். சரண்யாவின் அப்பாவும் திவாகரின் அப்பாவும் திருப்பதியில் தரிசனத்திற்காகக் காத்திருந்தபோது அப்படியே பேசி பரிச்சயமாகி இருக்கிறார்கள். போட்டோ, ஜாதகமெல்லாம் அவர்கள் கையிலேயே இருந்திருக்கிறது. வாட்ஸ்- அப்பில் குடும்ப ஜோசியருக்கு ஜாதகம் அனுப்பி பொருத்தம் பார்த்திருக்கிறார்கள். திவாகரின் மாமா கல்யாண சத்திரம் வைத்திருக்கிறார். திவாகர் கோயமுத்தூரில் அக்ரோ கலர் வொர்க்ஸ் என்கிற தனியார் கம்பெனியில் அஸிஸ்டெண்ட் மானேஜர். கடகடவென்று கல்யாணம் நடந்து விட்டது.
“ டேய் மோகன், சரண்யா ரொம்ப நல்ல பொண்ணுடா.. நீ ஏன் கல்யாணத்துக்கு வரல்லேன்னு கேட்டாடா. நானென்ன காகிதப்பூ.. மோகனுக்கு செண்பகப் பூவே வாய்ப்பா பாருன்னு சொன்னாடா.. ” என்றான்.
ஹூம்.. எத்தனை நல்ல வார்த்தைகள் எத்தனை நல்ல உள்ளத்திலிருந்து..! சரண்யாவால் யாரையும் வெறுக்கவே முடியாது..! !
அலை பாயும் மனதை தடுத்து நிறுத்தத்தான் வேண்டும். சரண்யா இன்னொருவன் மனைவி.. என் தோழி, நலம் விரும்பி..! மற்றபடிக்கு வக்கிர உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது.. அப்படியிருக்க முடியவில்லையா, மறக்க வேண்டியதுதான்...
சரண்யாவை மறக்க ஒரே வழி.. கிடைத்த வேலைதான்.. ராப்பகலாக, சாப்பாடு தூக்கம் மறந்து பிசாசு போல் வேலை செய்ய வேண்டியதுதான்..
அப்படித்தான் செய்தேன்..
அன்று பிசினஸ் பேச வெளிநாட்டான் ஒருவன் வருவதாக இருந்தான். ஊட்டியில் அறை போடச் சொன்னான். ந்யூமராலஜி பைத்தியம் அவன். ஹோட்டல் அறை எண் ஒன்றே போல் வரவேண்டுமென்று சொன்னான்- அதாவது 11, 22, 444 – இந்த மாதிரி.
நான் காரியதரிசியிடம் விவரத்தைக் கூறி ரூம் புக் பண்ணச் சொன்னேன்.
காரியதரிசி ஃபோன் செய்தான்.
ஊட்டியில் நிறைய ஹோட்டல்களில் அந்த மாதிரி எண்களில் அறைகள் இல்லை. அறைகள் இருந்தாலும் ஏற்கெனவே புக்காகி விடுகிறது அல்லது வாஷ்பேசின் உடைந்தோ, டாய்லெட் அடைத்துக் கொண்டோ தொந்தரவு இருக்கிறது. இனி சிம்ப்பிள் டிம்ப்பிள் ஹோட்டலில்தான் விசாரிக்க வேண்டும்.. இங்கும் அவர் கேட்ட மாதிரி ரூம் இல்லையென்றால் அவருக்கு வேறு எண்ணில்தான் ரூம் போட வேண்டும் என்றான்.
கொஞ்ச நேரம் கழித்து காரியதரிசியே திரும்பப் பேசினான்.
சிம்ப்பிள் டிம்ப்பிளில் 22-ம் எண் ரூம் காலியாகப் போகிறதாம். 11-ம் எண் அறையை நம்மைப் போலவே கோயமுத்தூர் அக்ரோ கலர் வொர்க்ஸ் கம்பெனி அவருடைய அஸிஸ்டெண்ட் மானேஜர் திவாகருக்கு புக் செய்திருக்கிறதாம்...
“ டாய்லெட், பாத்ரூம் செக் பண்ணிட்டேன் சார்.. இருவத்திரெண்டு போட்டுடவா ?? ” என்றான்.
அடுத்துப் பேசியது எதுவும் என் காதில் ஏறவில்லை..
கோயமுத்தூர் அக்ரோ கலர் வொர்க்ஸ் - அஸிஸ்டெண்ட் மானேஜர்- திவாகர்- டபுள் பெட் ரூம்..
திவாகர்- சரண்யாவின் கணவர்- மனைவியுடன் தேனிலவு கொண்டாட வந்திருக்கிறான்.....!
நான் எனக்கு அடுத்த நிலையிலிருந்த அதிகாரி ராம்குஷ்கலை அழைத்தேன். ஐம்பது வயதான ராம்குஷ்கல் வெளிநாட்டு மொழிகள் அறிந்தவர். நன்கு பேசக் கூடியவர்.
“ சார், பிரிட்டோ ஊட்டிக்கு வரார். நீங்கதான் போய் பேசி பிஸினஸ் டீலை முடிச்சுட்டு வரணும்” என்றேன்..
“அது உங்க வேலையாயிற்றே” என்றார் அவர்..
“ என் வேலைதான்.. ஆனால் தனிப்பட்ட முறையில உங்க கிட்ட ஒரு வேண்டுதல்.. நான் ஒரு பொண்ணை உயிருக்குயிரா காதலிச்சேன்.. அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணமாயிடுச்சு.. அவ தேனிலவு கொண்டாட ஊட்டி வரா. அதே ஹோட்டல்லதான் இவனுக்கும் ரூம் அமைஞ்சிடுச்சி.. நான் எப்படி அங்க போயி.. அவ எதிர்ல எப்படி முழிக்கிறது? நானும் மனுசன்தான்.. எனக்கும் வலி, வேதனை எல்லாம் இருக்கில்லே? ”
குஷ்கல் என் பேச்சைக் கேட்டு ஆழ்ந்த அமைதியானார். அடப்பாவமே..! உலகத்தில் முக்கால் வாசி ஆண்பிள்ளைகள் என்னைப் போல்தான் இருக்கிறார்களா ??
குஷ்கல் சம்மதித்தார்.
தொடரும்