மறு ஜென்மமாவது மணமுடிப்பேன் உன்னை...
மறந்திருப்பாய் என்றுதான்
மணமுடித்தேன்,
யாருக்குத் தெரியும்
நான் மணந்த பின்புதான்
மரணிப்பாயென்று..?
சூழ்நிலைகள் சொன்னது
மாலை சூட
என் உறவா சொன்னது
உன் கண்களை மூட.....
ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்
உன்னோடு வந்திருப்பேன்
தனித்து விடாமல்
மரணத்திலாவது ஒன்றாக...
சுயநலக் காறிதான் நீ
என்னைத் துடிக்க விட்டுச்
சென்றுவிட்டாய்...
ஓ. பெண்ணே..!
நான் செய்த தவறுக்கு
இதுதான் தண்டனையா..?
நலமறியும் தூரத்தில் - நீ
இல்லாததினால்
மறந்திருப்பாய் என நினைத்தேன்.
சோகத்தை சொல்லியழ முடியவில்லை
என் பக்கத்தில் இப்போ ஒருத்தி.. .
பழகியதை மறந்து
பாசத்தை தகர்த்து
பயணம் தொடங்கமுன்பே
வாழ்க்கையை முடித்து விட்டாய்..
நானோ
தீக்குள் விழுந்த புழுவாக
எனக்குள்ளே கருகுகின்றேன்.
உப்புக்குப் பதிலாய்
கண்ணீரைச் சுவைக்கின்றேன்.
சுவையும் அறியவில்லை
சுகமும் புரியவில்லை.
நீருக்குள் மீன் அழுவதாய்
எனக்குள்ளே நான் அழுகின்றேன்,
வெளியில் அது யாருக்குத் புரியும்?
உன்னைத் தவிர.....
புரிந்து கொண்டவள் என்னை
புரிய வைத்துச் சென்றாய்
நான் புரிந்த பின்பு
பூமியில் இன்று நீ யில்லை....
நீ கொடுத்த தண்டனையை
வாழ்ந்து நான் அனுபவிக்கின்றேன்,
உப்புத் திண்டவன்
தண்ணீர் குடிக்க வேண்டும் அல்லவா..?
மன்னித்துவிடு பெண்ணே.!
மறு ஜென்மமாவது
காதல் சொன்ன நொடியே
கரம்பிடிப்பேன் உன்னை.
தகுதியற்ற காதலனாய்
தரணியில் நான் தவமிருப்பேன்
மறுஜென்மமாவது என்னை
மன்னித்து வருவாயென்று.