ஆராரோ ஆராரீரோ

ஆராரோ ஆராரிரோ
கண்டங்கி சேலையிலே
பவளகொடி தொட்டிலிட்டு
பவளமல்லி தோட்டமெல்லாம்
பாட்டினிலே மெட்டுமிட்டேன்
முல்லைக்கொடி பூச்சரமே
என் கண்ணே கண்ணுறங்கு

(ஆராரோ)

சித்திரப்பூ தொட்டிலிலே சிரிக்கின்ற
சிங்காரமே
சிரிக்கின்ற உன்னழகில்
சித்திரமும் சிரிக்குதடி
சிலையழகும் மயங்குதடி
என் தங்கமே கண்ணுறங்கு
( ஆராரோ)

முல்லைசர முத்தரமே
பூத்தாடும் புன்னகையில்
ஏழை எந்தன் குடிசையுமே
தாழம்பூ மணக்குதடி
நித்திரையும் உன்னழகில் தேடிவந்து
அணைக்குமடி
என் கண்ணே கண்ணுறங்கு
(ஆராரோ)

தென்றலிலே தேரோட்டி தாய்மாமன் சீர்தருவான்
வயலினிலே ஏர் ஓட்டி
அன்பனுமே சீராட்ட
தாய்மையிலே நானுனக்கு
பாலூட்டும் கங்கையடி
என் கண்ணே கண்ணுறங்கு
(ஆராரோ)

எழுதியவர் : சௌம்யா செல்வம் (17-Aug-17, 5:39 pm)
பார்வை : 697

மேலே