பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 6

.............................................................................................................................................
பெண் மனது ஆழமென்று..
..............................................................................................................................................
பாகம் 6

திவாகர், சரண்யா புது மணத் தம்பதிகள்.. திவாகரின் இறப்பில் சில சந்தேகங்கள் எழுவதால் சரண்யா, திவாகர் கடைசியாகத் தங்கியிருந்த கரோலின் பங்களாவைக் காண விழைகிறாள்..!

.................................................................................................................................................
சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...

அடுத்த நாள்...

சென்னை போவதாகச் சொல்லிக் கொண்டு மாமா தலை மறைந்ததும் அண்ணனை அவசரப்படுத்தினேன். அண்ணன், “கண்டிப்பா கரோலின் பங்களா போய்த்தான் ஆகணுமா? “ என்று கேட்டான்.

“ அந்தப் பங்களாவை நாம சரியாப் பார்க்கல. நாலா பக்கமும் அத ஒரு தடவை பார்த்திடணும்.. “

“ இங்க பார்.. நேத்து நாம கொஞ்ச நேரம் அங்க நின்னிட்டிருந்தோம்.. யாரோ நம்மள கண்காணிக்கிற மாதிரியே தெரிஞ்சது.. வீணா வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்..! “

“எந்த மாதிரி பிரச்சினை வருங்கறே? “

“வந்த பிரச்சினை போதாதா? உன்னோட இந்த நிலைமைக்கு அந்த பங்களாதான் காரணம்..! ஆபத்தை துரத்திட்டு போக வேணாம்.. வீட்டுக்குப் போயிடலாம் சரண்யா..! “

“ ஊம்.. திவாகர் உனக்கு மாப்பிள்ளை..! “

“ சரண்யா.. சரண்யா.. நீ எல்லோரையும் நம்பறே.. திவாகர் இப்ப நல்லவரா இருக்கலாம்.. கடந்த காலத்துல ஏதோ தப்பு பண்ணியிருக்கலாம்.. அத பெத்தவங்களுக்குக் கூடத் தெரியாம மறைச்சிருக்கலாம்.. அந்த தப்பு பெண் விவகாரமாக் கூட இருக்கலாம்.. நடந்ததையெல்லாம் மனசில ஓட விட்டுப் பாரு.. யாரோ ஒரு உமாவோ உஷாவோ கூப்பிட்டா நீ போயிடுவியா? நடந்தது நடந்தா மாதிரியே இருக்கட்டும்.. அதக் கிளறப் போக நம்ம உயிருக்கே ஆபத்து வரலாம்.. “

“உளறாதே.. இது பட்டப்பகல்.. நாம ரெண்டு பேர் இருக்கோம்..! இந்த ஆவி விவகாரத்தை நான் நம்பறதா இல்லே.. ஆவிய மீறி ஒரு குடும்பம் அங்க குப்பை கொட்டியிருக்கு.. “

“அப்படீன்னு மாமா சொல்றார்.. நாம நேரில பார்த்தது என்னன்னா மனுச வாசனையே மாமாங்கமா அங்க வீசலேங்கிறதுதான். அங்க போய் திவாகர் தங்கியிருந்தார்னா இது அமானுஷ்யமா தெரியுதே ?? “

“ பொதுவா பழைய பங்களாவுக்கு ஒன்றுக்கு மேல வாசலுண்டு.. எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இந்த முடிவுக்கு வரணும். “

அண்ணன் முணுமுணுத்துக் கொண்டே ஆட்டோ பிடித்தான்.

நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

திருமணத்துக்கு முன்பே திவாகருக்குப் பெண் தொடர்பு இருந்திருக்க வேண்டும்; அந்த உதய் அப்பெண்ணுக்கு சகோதரனாக இருக்கலாம்.. ஊட்டியில் அவளுடன் குடியும் கும்மாளமுமாக இருக்கும் திவாகர், பிளாக் மெயிலோ, பழி வாங்கும் விவகாரமோ தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்- இப்படித்தான் அப்பாவும் அண்ணனும் நம்புகிறார்கள்..

இதில் “உருவம்“ என்ற கிறுக்கல் எங்கே வருகிறது ??

பூட்டிய அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த திவாகரை எது பயமுறுத்தி ஓட வைத்தது?

மனைவிக்குத் துரோகம் செய்யும் கணவன், “எல்லாத்தையும் முடிச்சுட்டு ஏன் ஃபோன் பண்ணலேன்னு கேட்டா என்ன அர்த்தம்“ என்றா மனைவியிடம் சொல்வான்?

கரோலின் பங்களாவில் திவாகருடன் இருந்தது நான்தான் என்று திவாகர் உறுதியாக நம்பியதைத்தானே இந்த வார்த்தைகள் காட்டுகின்றன ??

அப்பா...! ! தலை வெடித்து விடும் போல் இருக்கிறதே?? என்னையறியாமலே நானே கரோலின் பங்களாவுக்குப் போய் விட்டேனா??

அமானுஷ்யமாக இருக்கிறதே??

முகேஷ் என் தோளைக் குலுக்கினான். “ இறங்கு..! “

கடைசியில் இதோ கரோலின் பங்களாவுக்கு முன் நிற்கிறோம்.

பங்களாவின் வலப்பக்கமாக இருந்த காம்பவுண்ட் சுவர் பின்பக்கம் வரையில் போய், கொஞ்சம் நீண்டு தோட்டத் தொழிலாளர் காம்பவுண்ட் சுவராக நின்று விட்டது.. (அதன் வரைபடத்தைக் மேலே தந்திருக்கிறேன்.)

திரும்பி வந்து இடப்பக்கமாகச் சென்றோம். இடப்பக்க காம்பவுண்ட் சுவர் சாய்வாகச் சென்று ஒரு லாண்டரிக் கடையில் முடிந்தது. இன்னொரு காம்பவுண்ட் சுவர் லாண்டரிக் கடையிலிருந்து புறப்பட்டது. அது தொடர்ச்சியாக இல்லாமல் இடைவெளி விட்டுத் தொடர்ந்தது. அந்த இடைவெளியில் ஒரு தெரு நீண்டு போய் எங்கோ மெயின் ரோட்டில் முடிந்தது. தெருவில் பப்ளிக் ஃபோன் கடை, தேநீர்க்கடை, சலூன், ஜெராக்ஸ் கடை போன்ற கடைகள் இருந்தன. அதற்குப் பின்புறம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு இருந்தது.

பங்களாவின் மூன்று புறமும் சூழல்கள் பயங்கரமாயிருக்க, இங்கு சகஜமாக இருந்தது. சொல்லப் போனால் பங்களாவிற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது....

ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றோம்.

அங்கிருந்த தேநீர்க்கடையில் தேநீர் பருகினோம்.

“நீங்க ஆரு? எதுக்கு வந்தீங்க? “ என்றார் கடைக்காரர். அறுபது வயதைக் கடந்த பெரியவர்.

நான் கரோலின் பங்களா பக்கம் கைகாட்டினேன்... “ அய்யாக்கண்ணு எனக்கு மாமா வேணும்..“

“ அப்பிடியா?? அவுக யாரும் இப்ப இல்லியே? “

நேநீர் தயாரித்துக் கொண்டே பழைய ஞாபகத்தில் மூழ்கினார்.. “ சமர்த்துப் பய அந்த அய்யாக்கண்ணு..! பங்களாவுக்கு டூப்ளிகேட் சாவி பண்றது ரொம்ப கஷ்டம். அந்தப் பயல் வெளி ரூம்புக்கு டூப்ளிகேட் சாவி பண்ணி, அத தொர கிட்ட ஒப்படைச்சுட்டு, ஒரிஜினல் சாவிய இவன் வச்சிகிட்டான். அந்தாளு பூதக்கண்ணாடியெல்லாம் வச்சுப் பார்த்துதான் சாவிய வாங்கிச்சு.. எத்தனைதான் பரிசோதிக்க முடியும்? ஆறு கொத்து..! ஒரு கொத்துக்கு நாப்பத்நாலு சாவி..! காலாண்டு அரையாண்டு லீவ் விட்டா அவன் தம்பி குடும்பம் அந்த ரூம்புல கூத்தாடும்.. அவன் தம்பிக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்..! பொண்ணு மரமெல்லாம் ஏறும்..! மூணு நாலு வருசமா அவுகளும் வரதில்ல.. ஒத்த வாச்சுமேன்தான் மூணு பங்களாவுக்கும்..! “

எங்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு பையன் மிரட்சியுடன் ஓடி ஒளிந்ததை கவனித்தேன். சில நிமிடங்கள் கழித்து இயல்பாகச் செல்வதைப் போல் நான் மட்டும் அந்தப் பக்கம் சென்றேன்.

பார்டரில் மட்டுமே பூப்போட்ட வெள்ளைப் புடவை கட்டி, கருப்புப் பொட்டு வைத்திருந்த அமைதியான என் தோற்றம் அந்தப் பையனை ஈர்த்திருக்க வேண்டும்.. ஒல்லியான துறுதறு பையன்.. ஊட்டிக்கு வருகிறவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு உதவுவதற்கென்றே சிலர் இருப்பார்களே.. அந்த மாதிரிப் பையன்..!

நான் பர்சைத் திறந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வைத்துக் கொண்டேன்..

“ என்னக்கா வேணும்?? “ என்று கேட்டபடி மெதுவாக வந்தான்..

“ கொஞ்ச நாள் முன்னாடி இங்க ரெண்டு பேர் தங்கியிருந்தாங்க இல்ல, அதுல ஒருத்தர் என்னோட வீட்டுக்காரர்.. ஒரு ஃபைல மறந்து வச்சிட்டு வந்துட்டாரு.. அவருக்கு உடம்பு சரியில்ல.. அதனால அந்த ஃபைல எடுத்துப் போக நான் வந்திருக்கேன்..! “ வாயில் வந்த பொய்யைச் சொன்னேன்..

“ அவ்வளவுதானா? நான் போலிசோன்னு பயந்துட்டேன்..! “ அவன் ஆசுவாசமானான்.

“ இப்படி வாங்க..!“ லாண்டரிக் கடைக்குள் அழைத்தான்.. கடைக்குள் இன்னொரு கதவு இருந்தது. அதற்குள் முகேஷ் வந்து விட, நாங்கள் மூவரும் இரண்டு காம்பவுண்ட் சுவருக்கு இடைப்பட்ட பாதையில் நடந்தோம். பாதை சுத்தமாக இருந்தது.. சற்றே திரும்பி சுவரின் ஒரு விரிசலுக்குள் நுழைந்தால் எதிரே கரோலின் பங்களா..! இந்தப் பகுதி, மற்றைய பகுதிகளைப் போலல்லாது மனிதர்கள் புழங்கின பகுதியாகப் பட்டது..!

பையன் பேசிக் கொண்டே வந்தான்.

“ ரெண்டு அண்ணன்க இருந்தாங்க.. உதய் அண்ணன் தாடி வச்சி கருப்புக் கண்ணாடி போட்டிருப்பார். சத்தமில்லாம உடம்பு குலுங்க சிரிப்பார்.. சிரிக்கச் சொல்ல தங்கப்பல்லு தெரியும்..! திவாகர் அண்ணன் நெத்தியில மூணு விரலை வச்சு கண்ணை மூடிச் சிரிப்பார்.. இதுல யாரு உங்க வீட்டுக்காரர்?? “

நான் திவாகர் என்றேன்.. இங்காவது உதய் பற்றிய விவரம் தெரிந்ததே ??

பங்களாவின் இடப்பக்கப் பகுதியது.. அங்கிருந்த வாசலில் நின்றோம். இந்த அறை வாசல் பங்களாவிற்கு வெளியே திறந்திருந்தது. அதாவது, பங்களாவின் ஒரு பகுதியான இந்த அறைக்குள் நுழைய வேண்டுமானால் பங்களாவை விட்டு வெளியில் வர வேண்டும்..!

“சாவி தாங்கக்கா “ என்றான் பையன்..

“சாவிய உன் கிட்ட வாங்கிக்க சொன்னாரே?? “

“என் கிட்ட ஏது? உதய் அண்ணன் தரல்லியா? “

நான் அதற்குள் பங்களா ஜன்னலைத் திறக்க முற்பட்டேன். திறந்தது.. திவாகர் வர்ணித்ததைப் போல்தான் இருந்தது அந்த அறை.. விசாலமான பெரிய அறை.. ஒரே அறை..! மூலையில் கணப்பு தெரிந்தது. இரண்டு பெரிய அரிக்கேன் விளக்குகள் மாட்டியிருந்தன. நிறைய மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள் மெழுகுவர்த்திகளோடு காட்சியளித்தன. நல்ல தேக்குக் கட்டில்.. மேஜை, சோபா கம் பெட்.. மேஜையின் பக்கம் ஒரு டியூப் லைட் சுவிட்சோடு சரிந்திருந்தது. பழைய கால பங்களா..! சோபா கம் பெட்டும் டியூப் லைட்டும்தான் புதுவரவு.. மற்றபடி எந்த மின்சாதனமோ, மொபைல் சார்ஜர் போடுவதற்கு வசதிகளோ இல்லை..!

இன்னொன்று..!

அறையின் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது உதய் உடன் தங்கியிருக்கும் பட்சத்தில் திவாகரோடு எந்தப் பெண்ணும் தங்குவதோ அந்தரங்க உறவு கொள்வதோ இயலாது.. ! !

“ ஃபைல் இங்க இல்லப்பா.. “ என்றேன்.. “ வேற எங்கியோ விட்டிருக்கார்..! அது சரி, உதய் அண்ணன் இங்க அடிக்கடி வருவாரா ??“

“ ஊஹூம்.. வருசக் கணக்கா ஆள் நடமாட்டமே கிடையாது.. உதய் அண்ணா அன்னைக்கு வந்தார்.. அதுக்கு ரெண்டு நாள் முன்ன அவர் மட்டும் வந்து ரூம்பு க்ளீன் பண்ணி வெக்கச் சொன்னார்.. “

நூறு ரூபாயை அந்தப் பையனிடம் கொடுத்தேன்.

திரும்பி வந்ததும் பையன் கேட்டான், “ அக்கா.. லாண்டரிக் கடையில அவுங்களோட துணியிருக்கு.. சலவைக்குப் போட்டவங்க எடுக்காம போயிட்டாங்க.. உங்க கிட்ட காட்டவா..? “

காகிதத்தில் சுற்றிய சில துணிமணிகளைக் காட்டினான்.

விலையுயர்ந்த ஜீரோ பிராண்ட் சட்டை, டைபர் பாண்ட்.. இவை திவாகரின் அளவில் இருந்தாலும் திவாகருடையது இல்லை..! பாண்ட் பாக்கெட்டில் இருந்த பொருள்கள் ஒரு பிளாஸ்டிக் கவரில் போடப்பட்டிருந்தன- சீப்பு, சீட்டு , மாத்திரைகள் தீர்ந்து போன மாத்திரை அட்டை ....

சீட்டைப் பிரித்தேன்.

ஏதோ ரத்த தான முகாமில் ரத்தம் கொடுத்த பிறகு, தரப்படும் சீட்டு..! உதய் ரத்தமெல்லாம் கொடுப்பாரா? உதய்யின் ரத்தம் ‘ஓ பாசிட்டிவ்..’ முகேஷ் அண்ணனும் கூட அந்த ரத்த வகைதான்.. வானதி, மோகன், இன்னமும்...

உதய்யின் அலைபேசி எண், வீட்டு விலாசமும் எழுதியிருந்தது.. அதை ஒரு நோட்டில் குறித்துக் கொண்டேன்.

மாத்திரை அட்டையை மூன்று கோணங்களில் அலைபேசி காமிராவில் படமெடுத்துக் கொண்டேன்...

“ இது எங்களோடது இல்லப்பா.. “ பையனிடமே திருப்பித் தந்தேன்.. “ உதய் அண்ணனோடது..! “

“ அவர் வருவாரா? “ பையன் திருப்பிக் கேட்டான்..

“ என்ன பண்ணிட்டிருந்தாங்க இங்க, அந்த ரெண்டு பேரும்?? “ முகேஷ் மறு கேள்வி கேட்டான்..

“ ராத்திரி ஒம்போது மணிக்காப்புல வந்தாங்க.. டீக்கடை வேதாக்கா பாயாசம் கொடுத்தது.. சாப்புட்டாங்க.. அடுத்த நாள் மூணு வேள சாப்பாடு நான்தான் கொண்டு போய் கொடுத்தேன். கேட்டாண்ட வந்து உதய் அண்ணா வாங்கிட்டுப் போனாரு.. ரெண்டாம் நாள் உதய் அண்ணா அப்படி இப்படி வெளில வந்தாரு.. திவாகர் அண்ணா ரூம்புல படுத்துக் கெடந்தாரு.. உடம்பு சரியில்லயாம்.. உதய் அண்ணாதான் பாத்துகிட்டாரு.. நாங்கூட கேட்டேன்.. பக்கத்து ஆஸ்பத்திரியில காட்டலாமேன்னு.. உதய் அண்ணா,‘ நானும் டாக்டர்தான்... மருந்து குடுத்திருக்கேன்.. ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்’ னாரு.. ஆனா உங்க பொழப்ப பார்க்கறத விட்டுட்டு இவர கவனிக்கிற மாதிரி ஆயிடுச்சேன்னு கேட்டேன்.. “

நான் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.. சரியாகத்தான் கேட்டிருக்கிறான்..

“ இல்லப்பா.. நேரில வந்தாத்தான் காரியம் முடியும்னு நெனச்சு பொறப்பட்டு வந்தேன்.. இங்க இன்டெர்நெட் ஈமெயில்லேயே பாதி வேலை முடிஞ்சிடுச்சு.. இப்ப அலைச்சல் மிச்சம்.. செலவு மிச்சம்.. நண்பரை கவனிச்சிகிட்டது மாதிரியும் ஆச்சு.. எனக்கு ஒண்ணும் நஷ்டமில்ல.. இவர்தான்.. என்ன வேலைக்கு வந்தாரோ இப்படி படுத்து கெடக்கார்னு சொன்னாரு..! மூணாம் நாள் சாயந்தரமே ரெண்டு பேரும் புறப்பட்டுட்டாங்க..! ஆமா, திவாகர் அண்ணா இப்ப சரியாயிட்டாரா? “

நான் தலையசைத்தேன்.. சரியாயிட்டார் என்ற பாவனையில்..! சின்னப்பையனிடம் உண்மையைச் சொல்லி வருத்துவானேன்??

அண்ணன் மெதுவாகக் கேட்டான்.. பங்களாவுல பேய் சுத்துதுங்கிறாங்களே? உண்மையா ?

பையன் அசராமல் சொன்னான், “ நம்ம மனசுக்குள்ள இல்லாத பேயா இங்க இருக்கப் போகுது?? “

அதற்குள் அலைபேசி அடித்தது ..! மோகன்..!

“ ஹலோ சரண்யா.. சரண்யா .. இது மோகன்.. நாங்க உங்க வீட்டுக்கு வந்திருக்கோம். நானு, பாலா.. கவிதா, ஹம்சா, நம்ம சீனியர்ஸ் பாண்டி, சுந்தரம்.. நம்ம டீச்சர்ஸ் வல்லபி மேடம், குகன் சார், சாருலதா மேடம்.. நீங்க ஆபிஸ் விஷயமா வெளியூர் போயிருக்கிறதா சொன்னாங்க.. ஸாரி சரண்யா.. எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல..! “

“ அடடா..! “ என்றேன். “ நீங்க எல்லோரும் வந்த நேரம் நான் இல்லாமப் போயிட்டேனே?? தாங்க்ஸ்.. தாங்க்ஸ்.. ஃபார் கமிங்.. இது எனக்கு ரொம்ப பெரிய ஆறுதலா, சப்போர்ட்டா இருக்கு..! “

அதற்குள் அங்கே அலைபேசி பிடுங்கப்பட்டது.. கவிதா.. “டீ சரண்யா.. “ என்று கூக்குரலிட்டவள் அலைபேசியிலேயே அழுது விட்டாள்.. அவளை அங்கிருப்பவர்கள் அதட்டி அமர்த்தும் ஒலி கேட்டது..

வல்லபி மேடம் அடுத்து வந்தார்..

“ சரண்யா.. எவ்வளவு நல்ல பொண்ணு நீ..! உனக்குப் போயி இந்த நிலைமையா?? தாங்க முடியலம்மா.. சரண்யா.. தைரியமா இரும்மா.. கடவுள் நல்லவங்கள சோதிப்பான்.. கை வுட மாட்டான்..! நீ சீக்கிரமே பழைய சரண்யாவா மாறி நல்லபடி வாழணும்.. காட் ப்ளஸ் யூமா..! இப்ப எங்க இருக்க ?? மெட்ராஸிலதான் இருப்பியா இல்ல கோயமுத்தூரா ?? “

இந்த ரீதியில்தான் எல்லோரும் பேசினார்கள்.

நான் மேட்டுப் பாளையத்தில் இருப்பதாகச் சொன்னேன். தற்போது அம்மா வீட்டில் இருப்பதையும் சொன்னேன். ஒரு வழியாக எல்லோரும் பேசி முடித்ததும், உணர்ச்சி வசப்பட்டு அண்ணனின் தோளில் சாய்ந்து அழுதேன்..

அப்போதுதான் அந்த எண்ணம் வந்தது.. திவாகருக்கு இப்படி ஆகி விட்டது.. உதய்யின் நிலைமை என்ன?

அதாவது தப்பு இந்த இடத்தின் மேல் என்றால் உதய் கூட பாதிக்கப்பட வாய்ப்புள்ளதே?

உதய்யின் அலைபேசி எண்ணை முயற்சித்தேன்..

இந்த எண் உபயோகத்திலில்லை.. என்று வந்தது..!

என் அலைபேசியில் மோகன் வந்தான்,. “ சரண்யா.. நாங்க எல்லோரும் கிளம்பறோம்.. அப்புறம்.. உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா தைரியமாக் கேளுங்க.. முடிஞ்சா செய்றேன்.. இல்லாட்டி முடியாதுன்னு சொல்லிடறேன்.. “

நான் பெருமூச்செறிந்தேன். இதுவரை பேசிய எல்லோரும் ஆறுதல்தான் சொன்னார்கள்.. மோகன்தான் அடுத்த கட்டம் போகிறான்..

“ மோகன்,.. ஒரு அட்ரஸ் சொல்றேன்.. சென்னை அட்ரஸ்தான்..அங்க போயி உதய் என்கிறவர் இருக்காரான்னு விசாரிச்சி சொல்ல முடியுமா ?? “ அட்ரசை வாசித்தேன்.. “ 58 /123, நாலாவது தெரு, புவனேஸ்வரி தியேட்டர் பின்புறம், சூளை.. “

சில நொடிகளுக்குப் பிறகு ஃபோனை வைத்தேன்..

பதினெட்டு நிமிடம் கழித்து அப்பாவிடமிருந்து அண்ணனுக்கு ஃபோன்..! எடுத்த எடுப்பிலேயே கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் ‘கண்றாவி பங்களா முன்னாடி என்னத்தைப் பண்றீங்க ?? பெரூசாஆஆ துப்பறியக் கிளம்பிட்டாங்களாம்..’ என்று தொடங்கினார்.. அண்ணன் பதில் சொல்லத் திணறத் திணற, நிறுத்தாமல் திட்டு..! !

நான் வெடுக்கென்று ஃபோனை வாங்கினேன்.. “ அப்பா..! நானும் அண்ணனும் இந்த நிமிஷம் உயிரோடதான் இருக்கோம்.. சீக்கிரமே வீட்டுக்கு வந்திடறோம்..! ! “

தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (21-Aug-17, 11:50 am)
பார்வை : 374

மேலே