திக்கு தெரியாத நாட்டில்

திக்கு தெரியாத நாட்டில் - வழி
தேடித் தேடியலை கின்றேன் !

மிக்க அழகுடைய நகர்கள் - ஒரு
மிருகம் காணாத தெருக்கள் - பெரும்
வெக்கை புகைவீசும் காற்றும் - பல
வேந்தர் சண்டையிடும் அரசும் ! (ஒரு)

திசையை மறைக்கின்ற கார்கள் - பலர்
திமிரைக் காட்டும் வாகனங்கள் - புயல்
விசையில் கழிகின்ற நேரம் - உயிர்
விலையை மதியாத கோரம் ! (ஒரு)

பெட்டி போலடுக்கு மாடி - அதில்
பேதை போல்வாழும் மக்கள் - வந்து
கொட்டும் ஒருபுறத்துச் செல்வம் - அழும்
கோழை ஏழைகளின் உள்ளம் ! (ஒரு)

அலைச்சல் மிகக்கொடுக்கும் தூரம் - உயிர்
அவிக்கும் நெரிசல்கள் பாரம் - வெறும்
விலைக்குப் போகின்ற யாவும் - அதை
விற்க வாங்கப்பெருங் கூட்டம் (ஒரு)

நம்ப முடியாத மனங்கள் - ஒரு
நடிப்பை எதிர்பார்க்கும் தினங்கள் - அதில்
வெம்பி என்வழியைத் தேடி - நிதம்
வேர்த்துத் திரிகிறேன் தோழி ! (ஒரு)

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:13 am)
பார்வை : 55

மேலே