மரணத்தை வெல்லும் வழி
மரணமே உன்னை வெல்லும்
மார்க்கமே தெரிந்து கொண்டேன் !
தருமமும் யோக மும்நின்
தன்மையை தளர்த்தக் கண்டேன் !
கருமமும் பயனும் நம்பிக்
காரிய மாற்றி விட்டால்
அருமருந் தாகு வாய்நீ
ஆண்டவா காலத் தேவா !
தன்செயல் ஒழுகிச் செய்து
தரணியில் பிறரும் வாழ
முன்பிருந் துதவி வாழ்ந்தால்
முக்தியில் உன்னைப் போற்றிப்
பொன்னுடல் சிதைவு றாமல்
போமுயிர் கறைப டாமல்
மின்னலாய்ப் பிரியும் சேதி
மிளிரவே கற்றுக் கொண்டேன் !
நின்றனை வெல்வ தென்றால்
நின்செயல் நேரும் போது
கொன்றிடா அச்ச மின்றி
கொள்கையோ டுன்னை ஏற்றல்
இன்றிதை கற்றுக் கொண்டேன்
இனியதாய்க் கற்றுக் கொண்டேன்
வென்றவர் வழிதெ ரிந்தேன்
வேகமாய்க் கற்றேன் நானே !
கற்றதை உலகத் தாரின்
காதிலே செலுத்த லல்லால்
பெற்றதை தமக்கே வைத்துப்
பெரும்பழி எய்து வானப்
பற்றுடை கஞ்ச னைப்போல்
பாரிலே வாழ்தல் செய்யேன் !
மற்றவர் பயனும் கொள்ள
மதியிலே பாய்ச்சு வேனே !
-விவேக்பாரதி