இதயம் ஏதேதோ பேசுகிறது

முதல் கவிதை என உன் பெயரில் ஆரம்பித்தேன்.
ஆயிரம் கவிதைக்கு அப்பாலும் என் முதல் கவிதை போல அழகானது எதுவுமில்லை..

எனது கவிதை தொகுப்புகளை படித்து விட்டு,
உன் அபிப்ராயங்களை சொன்ன போது,
உனது அபிப்ராயங்கள் எல்லாம் நான் எழுத மறந்த கவிதையாய் புலப்பட்டது எனக்குள்.

நீ கொடுத்த மயிலிறகை போலவே,
உன் கூந்தலின் சிறு கீற்றையும் புத்தகத்தில் புதைத்துள்ளேன்.
என்றாவது பிரசவிக்கும் என எதிர்பார்த்தபடி.

பேருந்தில் நீ எடுத்து கொடுத்த பயணச்சீட்டை பார்க்கும் போதெல்லாம்,
உன்னுடன் மீண்டும் பயணிப்பது போன்ற பிரமை எனக்குள்.

அன்பளிப்பாய் கொடுத்த வாழ்த்து அட்டையின் அடிப்புறத்தில் எனது கையொப்பம் இட்டேன்.
நீ உன் பெயரையும் இணைத்து எனக்கே திருப்பி கொடுத்ததை,
இன்றும் வைத்திருக்கிறேன். உன் திருமண பத்திரிக்கையில் பிணைத்தபடி.

இரயில் பயணங்களில் ஒரு புத்தகத்தை படித்த நிறைவை தந்து விடுகிறது.
உன்னோடு உரையாடிய வார்த்தைகளை அசை போட்டபடி பயணிப்பது.

ஏதோ ஒரு நாவலில் உன் பெயரில் வரும் கதை மாந்தரை பார்த்ததும்,
நான் நாவல் என்பதை மறந்து உன்னை மீண்டும் காதலிக்க துவங்குகிறேன்.

நீ விட்டு சென்ற நினைவுகள் எல்லாம் நாட்குறிப்பு புத்தகத்தில் வருட கணக்கில் புதைந்து கிடக்கிறது,
மீண்டும் விரல் தீண்டி விமோசனம் கிடைக்காது என தெரியாமல்.

பள்ளிக்கூட புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நம் பெயரை எழுதி வைத்திருந்ததை மீண்டும் எடுத்து பார்த்தேன்,
என் பெயரை மட்டும் கரையான் அரித்திருந்தது.

உன் கூந்தலில் இருந்து விழுந்த பூக்களையெல்லாம் சேமித்து வைத்திருந்தேன்,
இப்போதுதான் மலர் வளையமாய் தொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.

#அச்சன்புதூர்_சையது_சேக்

எழுதியவர் : சையது சேக் (23-Aug-17, 5:46 pm)
பார்வை : 132

மேலே