தமிழர்களே தமிழர்களே
தமிழர்களே! தமிழர்களே!
=========================================ருத்ரா
இந்தக்குரல்
உங்கள் செவிகளுக்குள்
நுழைவதே இல்லை.
அங்கே
ஏகப்பட்ட அடைசல்கள்.
அவனும் அவளும்
குழந்தைக்கு பெயரிட
கம்பியூட்டரைத்தட்டினார்கள்.
இஸ் புஸ்ஸென்று
ஆயிரம் பெயர்கள்
அவர்கள்
காதுகளை ஆக்கிரமித்துக்கொண்டன.
"இஸ்கேமியா" என்றான் அவன்
நன்றாக இருக்கிறதே
என்றாள் அவள்.
குழந்தை "இஸ்கேமியா"
படு சுட்டியாக வளர்ந்தாள்.
அப்புறம்
அந்த டிவி யின்
சுட்டிகளுக்கான நிகழ்ச்சியில்
அந்த சின்னப்பூ முகம் பூத்து
அறிவின் சுடர் பளீர் பளீர் என்று வீச
அவையோரை அசத்திவிட்டாள்.
அண்ணாச்சியும்
வழக்கம்போல கேட்டார்
"உன் பெயருக்கு என்ன அர்த்தம்"என்று கேட்டார்.
(என்ன பொருள் என்று கேட்டால் தான்
நமக்கெல்லாம் பொரு விளங்காய் இனிப்பு தானே
நினைவுக்கு வரும்.
அதனால் அவர் "அர்த்தம்" கேட்டார்.
குழந்தை
பெற்றோரை திருப்பிக்கேட்டது.
அவர்களோ ஒரு இனிமைக்காக
இந்த அயல்மொழி ஓசையை சேர்த்தோம்
உடனே அங்கு இருந்த "டாக்டர் ஒருவர்"
விளக்கினார்.
(மருத்துவர் என்றால்
ஏதோ ஒரு பட்டிக்காட்டு ஆள் என்றல்லவா
நினைத்துக்கொள்வார்கள் )
"இஸ்கேமியா" என்றால்
இதயத்தில் ஏற்படும் உள்காயத்தினால் வரும் வலி
என்றார்.
இதைக்கேட்டதும்
அவர்களுக்கு இதயத்துள் வலி வந்தது போல்
உணர்ந்தார்கள்.
ஆம்..
தமிழ் எனும் மொழிக்கு
ஏற்பட்ட வலிகளா இவை?
அவர்களுக்கும்
இதயம் வலித்தது.
அங்கேயே பெயர் சூட்டினார்கள்
அவளுக்கு "இனியா" என்று.
==========================================