திருவோணம் கட்டுரை

திருநட்சத்திரம்:

நட்சத்திரங்கள் 27; இவற்றில் இரு நட்சத்திரங்களுக்குத்தான் ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை, இன்னொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம் தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

பழமையான விழா:

சிங்கம்(ஆவணி)மாதமே மலையாளத்தில் முதல்மாதமாக உள்ளது. சங்க காலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப் பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது “ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.

பக்தியும் அபக்தியும்:

இறைவனிடம் செலுத்துகின்ற அன்பிற்கு பக்தி என்று பெயர். பக்தியைச் செலுத்தி அருளைப் பெறுகிறோம். தெரிந்துசெய்யும் இறைத்தொண்டு பக்தியாகும்; தெரியா மலேயே செய்யப்படும் பக்திக்கான தொண்டுகள் அபக்தி எனப்படும். சிவன் கோயில் ஒன்றின் சன்னிதியில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால் திரிமீது பட்டது. திரிதூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது.

தன்னையறியாமல் எலி செய்த அந்தகாரியம் அதற்குப் புண்ணியத்தைத் தந்தது. அடுத்தப் பிறப்பில் எலி மாமன்னராகும், சக்கரவர்த்தி யோகத்தைத் தந்தருளினார் சிவபெருமான். அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு எடுத்துக் காட்டாகிறது இந்த புராண நிகழ்வு.

மலையாள தேசம்:

தற்போது பாரத நாட்டில் ‘கேரளா’ என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் வியக்கும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம்கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரிவாரி வழங்கியும் பொற்கால ஆட்சியை நடத்தி வந்தார். அவரை அசுரகுரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார்.

தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூறினார். நல்லாட்சிநடத்தி வரும் மகாபலி மாமன்னன் மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் திருமால். இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவுசெய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார்.

புண்ணியம் செய்தனையோ?

‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அனைத்து உலகே பாராட்டுகிறது; எனக்காக பகவானே பூமிக்கு இறங்கிவருவது நான்செய்த பாக்கியம்; எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்குக் கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப்போகிறது’ என்றார் மகாபலி.

திருமாலை தரிசிக்க காத்திருந்த மகாபலியிடம் வந்துசேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.

மூன்றடி நிலம் கேட்டான் வாமனன்:

மூன்றடி நிலம்தானே என சாதாரணமாக நினைத்து தாரைவார்த்துக் கொடுத்து விடாதே’ என்று தடைசெய்தார் சுக்கிராச்சாரியார். அப்போதும் மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார்.

கையில் இருந்த தர்ப்பைப் புல்லால் கமண்டல துளையில் குத்தினார் மகபலி. வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் அவர் ஒருகண் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் மகாபலி. பாதார விந்தம் பாதாள லோகம்:

‘மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா? என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த திருமால், ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து காட்சியளித்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய்; இரண்டு அடி அளந்துவிட்டேன்; மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்றார். ‘உலகையே அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன்.

மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன்பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்துக்கு அனுப்பினார் திருமால். நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களைப் பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருளவேண்டும்’ என மகாபலி மாமன்னர் வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் திருமால். தன் நாட்டு மக்கள் வளமாக, நலமாக மகிழ்வாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.

சுப யோக வாழ்வு:

மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்யவேண்டும் என்று கோரியதை ஏற்று திருமால் அருள்புரிந்தார். மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தினமே திருவோணத் திருநாள் எனப்படுகிறது. மக்களைப் பார்ப்பதற்காக ஊர்ஊராக, வீதிவீதியாக மகாபலி வருவதாக தெருக்கள்தோறும் மக்கள் வண்ணமலர்களால் அத்தப்பூ கோலமிட்டு, தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.

கலை, கலாசார நிகழ்ச்சிகள், படகு போட்டிகள், மாறுவேட போட்டிகள் நடத்தி உற்சாகம் அடைகிறார்கள். சிலர் மகாபலிபோல வேடமிட்டு வந்து எல்லோருக்கும் ஆசி வழங்குவர். பெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும்.



அத்தப்பூக் கோலம்:

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் “அத்தப்பூ” என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத் திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோல த்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். பத்து நாட்களும் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

ஓண சாத்யா:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆறு சுவைக ளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சாத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் இடம் பெறும். உணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக “ இஞ்சிக்கறி”, “இஞ்சிப்புளி” ஆகியவையும் இடம் பெறும்.

வாழ்த்துகள்:

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அழித்திடவும், அவனது இறையன்பு மற்றும் மக்கள் நல சிந்தனையை உலகுக்கு உணர்த்தவுமே திருமால் வாமனராக அவதரித்து அருளியதையும் திருவோணம் பண்டிகை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் திருவோணம் பண்டிகையை வழக்கம்போல் 28.08.2015 அன்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்துக்கள், குறிப்பாக மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : (29-Aug-17, 11:33 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : thiruvonam katturai
பார்வை : 169

மேலே