இறப்பு
நான் கால் நீட்டிப் படுத்திருக்க,
உறவுகளும் நண்பர்களும்
சூழ்ந்திருக்க,
இதுவரை நான் பார்க்காதவர்களும்
என்னை பார்க்காதவர்களும்
குழுமி இருக்க,
விபரீதம் நடந்தவிட்டதாய்
ஆழ்மனதில் உறைக்க,
சட்டென எழுந்தேன்,
என் உடலில் அசைவு இல்லை,
என் பேச்சில் ஒலி இல்லை,
என் தீண்டலில் யாருக்கும்
உணர்வு இல்லை,
பின் உணர்ந்தேன்
என் உடலில்
உயிர் இல்லை என்று........
காலை எழுவேன்
என்று நான் உறங்க
விடியா பொழுதாகிப் போனது
மறுநாள் விடியல்....
பிறப்பு என்பது அறியாமல்
போனதால்
என் இறப்பும் அறியாமல்
போனதோ.......
சற்று பின் நோக்கி பயணித்தேன்
இறுக்கத்துடன்....
ஓடி ஆடி விளையாடி
புழுதி மண்ணோடு
உருண்டு புரண்டு
கவலைகள் என்னும்
வட்டத்திற்குள் சிக்காமல்
கழிந்தது ஒரு பருவம்...
புத்தகங்களோடு யுத்தங்கள் செய்து,
மனதிலும் உடலிலும்
மாற்றங்கள் பல கண்டு வியந்து
புரிந்தும் புரியாமலும்
கழிந்தது ஒரு பருவம்...
பேருந்தில்
நெரிசல்களுக்கிடையில்
அடித்து பிடித்து
முண்டியடித்ததில் உட்கார
இடம் கிடைத்தார் போல
அலைந்து திரிந்து
முயற்சிகள் பல செய்து
எனககென்று ஒரு வேலையை
தேடி அமர்ந்ததில்
கழிந்தது ஒரு பருவம்...
எங்கிருந்தோ வந்தாள்
என் கை கோர்த்து நின்றாள்
மனைவி என்கிற பந்தத்துடன்,
"நான் உன்னில் பாதி" என்று
அவள் சொல்ல
என் உயிரின் மீதியை
அவளுக்குக் கொடுத்தேன்,
இப்படி அகமும் புறமும் மகிழ்ந்திட
கழிந்தது ஒரு பருவம்...
பொறுப்புகள் சுமந்து
சுய விருப்பு வெறுப்புகள்
துறந்து ,
பணத்தின் பின்னால்
இயந்திரமாய் சுற்றியதில்
கழிந்தது ஒரு பருவம்...
கடந்து வந்த பாதையால்
கால்கள் கந்திப்போக
சற்று இளைப்பாற துடித்தேன்
அதற்கு முற்றுப்புள்ளி
வைக்க வந்தது
முதுமை என்னும் பருவம்,
கடமைகள் முடிந்தது என்று
மூச்சு விட்டேன்,
அது அப்படியே கலந்தது காற்றில்
மீண்டும் என் உடல் சேராமல்......
சந்தோஷம், துக்கம், ஆசை,
கனவு,ஏக்கம், அழுகை,
ஏமாற்றம், இழப்பு,வலி,
என பல உணர்வுகளை
தாங்கிக் கொண்ட உடல்
இன்று உயிரற்றதாய்
சிறு பெட்டிக்குள் அடங்கிவிட்டது.....
"மலர்ந்த பூக்கள்
உதிர்ந்தாக வேண்டும்,
பிறந்த உயிர்
இறந்தாக வேண்டும்"
என்னும் விதியை
புரிந்து காற்றில்
கரைந்து போகின்றேன்,
என்னை
தூற்றியவர்களிடம்
மன்னிப்பையும்,
போற்றியவர்களிடம்
நன்றியையும்
கூறிக்கொண்டு.....